சட்டமன்றத் தேர்தலுக்கு முன், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது திருப்பத்தூரில், ‘"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் அவர் பேசும்போது, "2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய தொல்லியல் ஆய்வுத்துறை மதுரையில் கீழடி ஆய்வைக் கைவிட்டது. அதற்குப்பிறகு போராட்டம், வழக்கு என மக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு கூட பா.ஜ.க. அரசு இறங்கி வர வில்லை. "மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்வோம்' என்று தமிழக அரசு சொல்லிப் பார்த்தது. அதற்கும் அவர்கள் சம்ம திக்கவில்லை. வேறு வழியில்லாமல் தமிழக அரசு மட்டும் ஆய்வு நடத்திவருகிறது
மத்திய தொல்லியல் துறையும் சேர்ந்து ஆய்வு நடத்தினால்தான் இந்த ஆய்வுக்கு இந்திய அங்கீகாரம் கிடைக்குமென சொல்லப்படுகிறது. ஆனால் அதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை. 2015, 2017-ஆம் ஆண்டுகளில் கீழடியில் சிலகட்ட ஆய்வு செய்தார்கள் அந்த அறிக்கையை இன்றும்கூட வெளியிடவில்லை. அந்த முடிவுகள் வெளியே வரக்கூடாது என்றும் தமிழின் பெருமை உலகம் அறியக்கூடாது என்று நினைப்பவர்கள், ஏன் தமிழரின் ஓட்டு மட்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள்?''’என்று குறிப்பிட்டார். இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு ஏன் இந்த தொல்லியல் ஆய்வுகளை பாதியில் விட்டுவிட்டுப் போய்விட்டது? மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தினால்தான் உலகளாவிய பார்வை ஏற்படும். அப்போதுதான் அதற்கான அங்கீகாரம் ஏற்படும் என பொருள்பட ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 12-ஆம்தேதி சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழரசி எம்.எல்.ஏ பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலினின் திருப்பத்தூர் பேச்சு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்கப்பட்டது. "வைகை நதி நாகரிகம், தமிழ் சமுதாயத்தின் தாய்மடியான கீழடியிலிருந்து தொடங்குகிறது. 7-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட புதிய தொல்பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. மண்பானை ஓட்டில் 13 தமிழ் எழுத்துகள் கண்டறியப் பட்டுள்ளன. இதன்மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த மக்கள் கற்றறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிடவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்''’என்றவர் மத்திய அரசு, இந்த அகழாய்விலிருந்து விலகிக்கொண்டது ஏன்? மாநில அரசு ஆய்வை மேற்கொண்டால் உலக அங்கீகாரம் பெறாதா என்பது பற்றி கேள்விகள் எழுப்பியபோது, "கீழடியில் நடைபெறும் ஆய்வில் கண்டறிப்படும் உண்மைகளை ஆவணப்படுத்தி, உலகளாவிய அளவில் தமிழின் பெருமையை நிலை நிறுத்து வோம் என்று சொல்லிக் கொள்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.
தற்போது நடைபெறு கின்ற கீழடி அகழாய்வு இந்திய அங்கீகாரமும் உலக மரியாதையும் பெறாமல்தான் நடைபெறுகிறதா?, தமிழக தொல்லியல்துறை நடத்தும் இந்த ஆய்வு வெறும் கண்துடைப்பா..?, ஏன் மத்திய அரசு 2018-ல் கீழடி ஆய்வைக் கைவிட்டது? போன்ற கேள்வி களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கத்திடம் நாம் எழுப்பினோம்.
"இந்தப் பிரச்சினை 2000 வருடமாக இருக்கிறது. ஆரிய -திராவிட மோதல் இன்று நேற்று வந்தது அல்ல. நீண்டகாலமாக உள்ளது. அந்த அரசியல் இங்கே, 2018-ல் கீழடியில் இயக்குனர் அமர்நாத்தை மாற்றியதி லிருந்தே வந்துவிட்டது. இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஸ்டாலின் சொன்னது சரியான கருத்துதான். இப்பகூட சரஸ்வதி நாகரிகம் என்ற இல்லாத நாகரிகத்தைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசியதை, அப்படி ஒன்று இருக்கா? என்று பத்திரிகையாளர்களும் எம்.பி. வெங்கடேசனும் சுட்டிக்காட்டியபோது அதைப் பற்றி இன்றளவும் வாயே திறக்கவில்லை. அவர்கள் செய்த கீழடி ஆய்வையே இதுவரை வெளியிடவில்லை அப்படி இருக்கும்போது, தமிழக அரசு செய்யும் ஆய்வுகளை மத்திய அரசு பரிசீலித்து வெளியிட முன்வருமா என்பது சந்தேகமே''’என்றார்
இதுகுறித்து தொல்லியல் துறை ஆசிரியர் பாலசுப்ரமணியன் நம்மிடம், "மத்திய அரசு என்ன காரணத்திற்காக விலகியது என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாநில அரசு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அகழாய்வை தொடர்ந்து நடத்திவருகிறது. இங்கிருந்து தரப்படும் முழு அறிக்கையையும் மத்திய அரசு தொல்லியல் நிபுணர்கள் ஆராய்ந்து ஒரு முழு அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிப்பார்கள். அதன்பிறகு அதை ஏற்றுக்கொண்டு தொல்லியல் துறை கெஜட்டில் வெளியிடுவார்கள். பின்பு அது சர்வதேச தொல்லியல் அமைப்புகளுக்கு அனுப்பப்படும். இதுதான் நடைமுறை. இதை எல்லாம் மத்திய அரசு செவ்வனே செய்யுமா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தியாவின் பூர்வகுடி மட்டுமல்ல, தமிழர்கள் உலகின் பூர்வகுடிகளில் முதன்மையான அறிவார்ந்த சமூகம் என்பது மட்டும் நிதர்சனம்''’என்றார்