அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ளது ஓலையூர் கிராமம். இங்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் செங்கமல வல்லி தாயார் கோவிலின் உரிமைக்காக இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மோதிவருகிறார்கள். இந்த கோயிலை செட்டியார் வம்சத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நிர்வாகம் செய்து வந்துள்ளனர். ஐயங்கார் வம்சத்தைச் சேர்ந்த வரதராஜ அய்யங்கார், அவரது சகோதரர் ஸ்ரீதரன் இருவரும் இக்கோயில் அர்ச்சகர்களாக உள்ளனர். தற்போது இக்கோவிலின் நிர்வாக உரிமை தங்களுக்குத்தான் என்று இரு வம்சத்தைச் சேர்ந்தவர்களிடையே பிரச்சினை எழுந்துள்ளது.
செட்டியார் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மன்னர்கள் காலத்தில் கோயிலைக் கட்டி நிர்வகித்து வந்துள்ளனர். இங்கு சாமிக்கு வழிபாடு செய்து வந்த ஐயங்கார் வம்சத்தவர்கள், காலப்போக்கில் நிர்வாகத்தையும் எடுத்து நடத்தவேண்டிய சூழலில் அதையும் சேர்த்தே கவனித்துள்ளனர். அந்த அடிப்படையில் தற்போது, சக்கரபாணி ஐயங்காரின் மகன்களான வரதராஜன், ஸ்ரீதரன் இருவரும், "கோயில் நிர்வாக அறங்காவலர் பொறுப்பு எங்களுக்கு மட்டுமே சொந்தம் இதில் யாரும் தலையிட முடியாது' என்று கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக 1990-ஆம் ஆண்டு பிரச்சினை உருவாகி, "கோயில் நிர்வாக உரிமை செட்டியாருக்கா? ஐயங்காருக்கா?' என்ற போட்டியின் காரணமாக செட்டியார் வம்சத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் தலைமையில் கோயிலைப் பூட்டியுள்ளனர். ஆண்டிமடம் காவல்துறை யினர், "கோயிலைப் பூட்டக் கூடாது என்றும், பிரச்சி னையை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதுவரை கோயில் வழிபாடு தொடர வேண்டும்' என்று இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு கோயிலைத் திறந்துள்ளனர்.
செட்டியார் வம்சத்தைச் சேர்ந்த செல்வராஜ் இது குறித்து கூறுகையில், "பொதுவாக மன்னர்கள் காலத்தில் முக்கியமான ஊர்களில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு ஊரிலுள்ள பெரும் பான்மை மக்கள் தங்களுடைய வம்சத்தினருக்காகக் கிராமங் களில் கோவில்களை உருவாக்கி னார்கள். அங்கே வழிபாடு நடத்திவந்த பிராமணர்கள் காலப்போக்கில் ஊர் முக்கியஸ்தர்கள் மறைவுக்குப் பிறகுஅடுத்தடுத்த சந்ததிகள் கோயில் விஷயத்தில் தலையிடாத காரணத்தால், கோவிலின் உரிமையையும் எடுத்துக்கொண்டுள்ளார்கள். அதன்படிதான் இக்கோவிலின் அறங்காவலர் களாக உரிமை கொண்டாடி வருகிறார்கள் அந்த வரிசையில் எங்கள் ஊர் வரதராஜ பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் நாங்களே என்று முரண்டு பிடிக்கிறார்கள். வரதராஜன் ஸ்ரீதரன் சகோதரர்கள்.
1918-ஆம் ஆண்டில், எங்கள் முன்னோர்கள் வழியில் வந்த காசி செட்டியார், வசதி படைத்தவர். சுற்றியுள்ள கிராமங்களி லுள்ள முக்கியஸ்தர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அவருக்கு வாரிசு இல்லாததால், அவரிடமிருந்த கோயில் நிர்வாகப் பொறுப்பை தனது உறவினர்களான ரங்கசாமி, முத்துசாமி செட்டியார்களுக்கு உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இவர்களுக்குப்பின் ரங்கசாமி செட்டியாரின் மகனும் எனது தந்தையுமான கோவிந்தசாமி செட்டியார் வசம் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி கோயில் நிர்வாகத்தை நடத்திவந்துள்ளார். அப்போது கோயில் பூஜைக்காக துரைசாமி ஐயங்காரை நியமித்துள்ளார். அவர் மறைவுக்குப் பின் அவரது மகன் சக்கரபாணி கோவில் வழிபாடு செய்து வந்தார். நானும் என் சகோதரரும் சிறுவர்களாக இருந்தபோது நோய்வாய்ப்பட்ட எங்கள் தந்தை, சக்கரபாணி ஐயங்காரிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தார். நாங்கள் வளர்ந்த பின், 1989-ஆம் ஆண்டில் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்குமாறு கேட்டோம். அப்போது வரதராஜன், ஸ்ரீதரன் இருவரும் கோயில் நிர்வாகத்திற்கும் உங்களுக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள். இதன்காரணமாக இந்து அறநிலையத்துறையில் புகாரளித்தோம். ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. நியாயப்படி எங்களிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து அர்ச்சகர் வரதராஜன், "எங்களது தந்தை சக்கரபாணிக்கு 1952-ஆம் ஆண்டு செல்வராஜ் தந்தை கோவிந்தசாமி, கோவில் நிர்வாகத்தை எங்கள் வம்சாவழியினரே நிர்வாகியாக இருந்து நடத்திக்கொள்ளுமாறு பத்திரம் எழுதி, அதை ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்து கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எங்கள் தாத்தா துரைசாமி, தந்தை சக்கரபாணி, அவருக்குப் பிறகு நானும், என் சகோதரர் ஸ்ரீதரனும் இந்த கோயில் அறங்காவலர்களாக இறைவனுக்கான பணியைச் செய்து வருகிறோம்'' என்றார்.
அவரது சகோதரர் ஸ்ரீதரன், "1770ஆம் ஆண்டுகளிலேயே எங்கள் முன்னோரான நாராயண அய்யங்கார் இக்கோவிலில் வழிபாடு நடத்தி வந்துள்ளார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. செல்வராஜ் தந்தை கோவிந்தசாமி, எங்களது தந்தைக்கு எழுதிக் கொடுத்ததன் அடிப்படையிலேயே அறநிலைத்துறை அனுமதியோடு பரம்பரை அறங்காவலர் களாக நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்'' என்றார்.
"இரு தரப்புக்கும் இணக்கமாகத் தீர்வு காணப்பட வேண்டும்' என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.