எந்தெந்த கட்சியில் யார், யாருக்கு சீட் என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தில் சிக்கித் தவிக்கிறது விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி. இதில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக் கோட்டை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இத்தொகுதியின் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
2009, 2019 தேர்தல்களில் வெற்றிபெற்று இரண்டுமுறை எம்.பி.யான மாணிக்கம் தாகூர், இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாள ராகப் போட்டியிடுவதற்கு, இந்த தடவை வாய்ப்பில்லை எனச் சந்தேகம் எழுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரான மாணிக்கம் தாகூருக்கே சீட் இல்லையென்றால், வேறு யாரை வேட் பாளராக நிறுத்தப்போகிறது அக்கூட்டணி? அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் ஆந்திரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு தேர்தல் நேரத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால், அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கிவிடும் திட்டம் இருப்பதாகவும், சிவகங்கையைச் சேர்ந்தவர் என்பதால் மாணிக்கம் தாகூரை சிவகங்கை தொகுதியில் போட்டியிட வைத்து, சர்ச்சை யாகப் பேசிவரும் கார்த்தி சிதம்பரத்துக்கு முட்டுக்கொடுக்க நினைப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மாணிக்கம் தாகூரோ, அலுவலகங்கள் அமைத்து தொகுதிப் பணிகளில் அதீத கவனம் செலுத்துபவராக இருக்கிறார். தொகுதி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றும் வருகிறார்.
காமராஜர் பிறந்த ஊரை உள்ளடக்கிய விருதுநகர் தொகுதி, காங்கிரஸ் வசம் இருப்பதே பொருத்தமானது என்ற கதர்ச்சட்டைகளின் சென்டிமென்ட்டை, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க உடைத்துவிடும் என்கிறது பம்பரத் தரப்பு. அதற்கேற்றாற்போல் துரை.வைகோ காய் நகர்த்துகிறார். தேர்த-ல் போட்டியிட கட்சியினர் வற்புறுத்தினால் மறுப்பு சொல்ல முடியாது என்கிறார். தமிழ் நாட்டை பேரிடர் மாநிலமாக அறிவிக்கக்கோரி சிவகாசியில் துரை.வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் எல்லாம் நடந்தது. தந்தை வைகோ விட்டதைப் பிடிப்பதும், விருதுநகர் தொகுதியின் எம்.பி.யாவதும், துரை.வைகோவின் அரசியல் கனவாக உள்ளதாம்.
சிவகாசி மக்களவைத் தொகுதியிலிருந்தோ, விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்தோ, இதுவரையிலும் பாராளுமன்றத்துக்கு தி.மு.க. எம்.பி.யாக ஒருவர்கூட சென்றதில்லை. அதனால், விருதுநகர் தொகுதி காங்கிரஸுக்கும் இல்லை, ம.தி.மு.க.வுக்கும் இல்லை, தி.மு.க.வுக்குத்தான் என்பதில் அறிவாலயத் தரப்பு உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் உ.பி.க்கள் வட்டாரத்தில்.
தென்சென்னை தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறாராம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன். அக்கட்சியுடன் கூட்டணி சேர விரும்பும் தி.மு.க., கமல்ஹாசனுக்காக தென்சென்னை தொகுதியின் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனை விட்டுக்கொடுக்க வைத்து, அவரை விருதுநகர் தொகுதியில் களமிறக்கு வதற்கு ஆயத்தமாகி வருகிறது. தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்ட அமைச்சராக இருப்பதும், தொகுதியின் மெஜாரிட்டி வாக்குகளான முக்குலத்தோர் வாக்குகளும், நாயக்கர் சமுதாய வாக்குகளும் ஒருசேர கிடைப்பதற்கான சாதகம் நிலவுவதும், தி.மு.க.வின் தேர்தல் கணக்காக இருக்கிறது. இதற்கு அச்சாரமாக, ஜனவரி 25-ஆம் தேதி தி.மு.க. சார்பில் விருதுநகரில் நடக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புரையாற்றவிருக்கிறார். தி.மு.க. வேட்பாளர் ரேஸில் சேடப்பட்டி முத்தையாவின் மகனும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மணிமாற னின் பெயரும் உள்ளது.
சிவகாசி பாராளுமன்றத் தொகுதியாக இருந்தபோது 4 முறையும், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியான பிறகு ஒருதடவையும் வெற்றிபெறச் செய்த இரட்டை இலை வாக்காளர்களை மலைபோல் நம்பியிருக்கிறது அ.தி.மு.க. அதேநேரத்தில், தேர்தல் செலவுக்கு சொந்தப் பணத்திலிருந்து குறைந்தபட்சம் ரூ.15 கோடியாவது செலவழிக்கக்கூடியவரே அ.தி.மு.க. வேட்பாளராகும் தகுதியுள்ளவர் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அந்தவகையில், திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகனும், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான ராஜ்சத்யன் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேச னுடன் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்சத்யன், தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியென்று, விருதுநகரை குறிவைத் துள்ளார். இவருடைய மாமனார் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன் என்பது கூடுதல் பலம்.
ராஜ்சத்யனுக்கு முன்பாகவே, விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. சீட்டுக்காக துண்டு போட்டுக் காத்திருப்பவர் மாஃபா பாண்டிய ராஜன். முன்நடவடிக்கையாக விருதுநகரில் புது வீடு கட்டியதோடு, சென்னையிலிருந்து விருதுநகர் வந்து, மாவட்ட கட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தலைகாட்டி வருகிறார். பாண்டியராஜனின் உள்நோக்கத்தை அறிந்தோ என்னவோ, விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் அவருடைய ஆதரவாளர்களும், பாண்டியராஜனை தூரத்திலேயே வைத்திருக் கின்றனர். பாண்டியராஜனுக்கு ஒருக்காலும் சீட் தரமாட்டார் எடப்பாடியார்” என்று அடித்துச்சொல்லும் அ.தி.மு.க. நிர்வாகிகள், “வேணும்னா அரசியல்; இல்லைன்னா பிசினஸ். பாண்டியராஜனோட டிசைனே அப்படித்தான். பா.ஜ.க.வுல இருந்தப்ப, பாதுகாப்புத்துறை அமைச்சரா இருந்த பிரமோத் மகாஜன்கிட்ட விசுவாசமுகம் காட்டிட்டு, அங்க இருந்து தமிழ் நாட்டுக்கு ரிட்டர்ன் ஆன பழைய விவகாரம், அரசியல் வட்டத்துல பாண்டியராஜன் தலைதூக்கும் போதெல்லாம் பேசப்படும். ஆரம்பத்துல பா.ஜ.க., அப்புறம் தே.மு.தி.க, அடுத்து அ.தி.மு.க., மொதல்ல ஓ.பி.எஸ் பக்கம், பிறகு எடப்பாடி பக்கம்னு பாண்டியராஜன் ஒருநிலைல இருந்தது இல்ல. அறிவாளின்னு நம்பி இவரை தே.முதி.க. எம்.எல்.ஏ. ஆக்கிய விஜயகாந்துக்கு என்னென்ன துரோகம் பண்ணு னார் தெரியுமா? தே.மு.தி.க.வுல இருந்துகிட்டே, விஜயகாந்த் பேசுனத, அம்மாவுக்கு லைவ்வா போட்டுக் கொடுத்தாரு. பி.ஜே.பி. பக்கம் தாவுறதுக்கு மனசுக்குள்ள துடியா துடிக்கிற பாண்டியராஜன், என்ன குட்டிக்கரணம் போட்டாலும், இந்தத் தொகுதில போட்டியிட வாய்ப்பு கிடைக்காது’ என்கிறார்கள். முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் மாரீஸ்குமார் ஆகியோர் அ.தி.மு.க. பட்டியலில் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளரும் செய்தித்தொடர்பாளருமான பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன், இத்தொகுதியில் சுவர் விளம்பரங் களில் பளிச்சிடுவதெல்லாம் ஒரு முன்னேற் பாடுதான். வேறு யாரும் போட்டியிடத் தயாராக இல்லையா என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கனின் அண்ணன் ஜவஹர் பெயரும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் திணிக்கப் பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரர் அருண்மொழித்தேவன் ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிட்டவர்தான். மீண்டும் வாய்ப்பு அவருக்குத்தான் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.
வாக்காளர் எண்ணிக்கையில் முதலிடத்தில் முக்குலத்தோரும், இரண்டாவது இடத்தில் நாயுடு சமுதாயத்தவரும், மூன்றாவது இடத்தில் தேவேந்திரகுல வேளாளர்களும், நான்காவது இடத்தில் நாடார்களும் உள்ள விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில், கட்சியின் வாக்கு வங்கி, சாதி பலம், இவற்றோடு வேட்பாளரின் பண பலத்தையும் கருத்தில் கொண்டே, யாருக்கு சீட் என்பதைக் கட்சிகள் தீர்மானிக்கப்போகின்றன.