முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த மண், தி.மு.க. இளைஞரணியின் பிரம்மாண்ட மாநாடு நடந்த இடம் என்பதால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது சேலம் நாடாளுமன்றத் தொகுதி. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தேர்தல் களத்தை தகிக்க வைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்குகின்றன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் 2009, 2014 ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.க.வும், கடந்த 2019ல் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார்.

salem

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்த முறையும் தி.மு.க.வே நேரடியாகக் களமிறங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தி.மு.க. தரப்பில் சிட்டிங் எம்.பி. பார்த்திபன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆதரவுடன், எப்படியும் மீண்டும் சீட் பெற்று விடலாமெனத் தூண்டில் போட்டு வருகிறார். அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. உள்ளிட்ட கழக சீனியர்கள், எடப்பாடி பழனிசாமியை சொந்த மண்ணிலேயே வீழ்த்த சேலம் மேற்கு மா.செ.வான டி.எம்.செல்வகணபதிதான் சரியான சாய்ஸ் என்கிறார்கள். அவரும் சீட் கேட்டு கட்சித் தலைமையை அணுகியுள்ளார்.

Advertisment

சேலம் நாடாளுமன்றத் தொகுதி யில் அடங்கியுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதும், எடப்பாடியின் தேர்தல் வியூகங்களை நன்கு அறிந்தவர் என்பதாலும், அதே சமூகத்தைச் சேர்ந்த டி.எம். செல்வகணபதியை கட்சி சீனியர்கள் முன்னிறுத்துகின்றனர். ஏற்கெனவே எம்.பி., அமைச்சர் என நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், உதயநிதி ரசிகர் மன்ற மாநில செயலாளரும், இமிகிரேஷன் வழக்கறிஞருமான பி.கே. பாபுவுக்குத்தான் சீட் என்று உறுதியாகச் சொல்கின்றனர் இளைஞரணி நிர்வாகிகள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிய நட்பிலிருக்கும் பி.கே.பாபு, உதயநிதி பெயரிலான அறக்கட்டளை சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதையெல்லாம் வைத்துதான் அவருக்கு நிச்சயமாக சீட் கிடைக்கும் என்கிறார்கள். எனினும், வன்னியர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள சேலம் தொகுதியில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பி.கே. பாபுவுக்கு சீட் கொடுப்பார் களா? என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர்.

ssஇதற்கிடையே, வீரபாண்டி குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மறைந்த வீரபாண்டி செழியனின் மரு மகனும், தி.மு.க. ஐ.டி. பிரிவு மாநில நிர்வாகியுமான மருத்துவர் தருண் பெயரும் பலமாக அடிபடுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி யடைந்ததால் அவருக்கு மற்றொரு வாய்ப்பாக சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கலாம் என்கிறார்கள். இவர்கள் தவிர, மறைந்த வீரபாண்டி ராஜாவின் மகள் மருத்துவர் மலர்விழி, வீரபாண்டியாரின் மகன் மருத்துவர் பிரபு, சிட்டிங் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் தம்பி எஸ்.ஆர்.அண்ணா மலை என தி.மு.க.வில் சீட் எதிர்பார்ப்போர் பட்டியல் நீள்கிறது. இதற்கு நேர்மாறாக இருக்கிறது அ.தி.மு.க. கூடாரம்.

ஓமலூர் ஒன்றிய அ.தி.மு.க. அவைத் தலைவரும், பிரபல காண்டிராக்டருமான பரம சிவத்தின் மகன் விக்னேஷுக்குத் தான் எம்.பி. சீட் எனக்கூறி அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் வேலை களைத் தொடங்கி விட்டனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் 20 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதையும் 'கவனித்துவிட்டு' தன் மகனுக்காக பரமசிவம் சீட்டை உறுதி செய்து விட்டதாகவும் சொல்கிறார்கள் இலைக்கட்சி நிர்வாகிகள். ஓமலூர் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மணியின் அண்ணன் மாமனார்தான் பரமசிவம். அதனால், விக்னேஷுக்காக தேர்தலில் எத்தனை 'சி' வேண்டுமானாலும் இறக்கி விடத் தயாராக இருப்பதாக எடப்பாடியிடம் உறுதியளித் துள்ளாராம். இது ஒருபுற மிருக்க, அசுர பலத்துடன் இருக்கும் தி.மு.க.வை எதிர்க்க, கட்சிக்கு பரிட்சயமே இல்லாத, 30 வயது இளைஞரான விக்னேஷை களத்தில் இறக்குவதா? என ர.ர.க்கள் தரப்பில் அதிருப் தியும் கிளம்பியிருக்கிறது.

Advertisment

மூன்று முறை எம்.எல்.ஏ., ஒருமுறை அமைச் சர், எம்.பி., என அரசியல் களத்தில் பழுத்த அனுபவசாலியான செம்மலைக்குத்தான் மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் இலை கட்சியின் மூத்த தலைகள். ஏற்கெனவே ராஜ்யசபா எம்.பி. சீட், 2021 சட்டமன்றத் தேர்தலில் சீட் எதிர்பார்த்திருந்த செம்மலைக்கு ஏனோ எடப்பாடியார் கல்தா கொடுத்தார். இந்த முறையும் அல்வா கொடுத்து விடாமல் செம்மலைக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கட்சித் தலைமைக்கு ரொம்பவே அழுத்தம் தரப்படுவதாகச் சொல்கின்றனர். தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இருக்கும் செம்மலையும், நேரடியாகவே எடப்பாடியிடம் சீட் கேட்டுள்ளதாகவும், தன்னால் 5 கோடி ரூபாய் வரைதான் செலவு செய்ய முடியுமென்றதாகவும் சேதி. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வமும் சேலம் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளார்.

கூட்டணிக்கு பா.ம.க., தே.மு.தி.க. வராவிட்டால் பா.ஜ.க. தனித்துக் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, முன்னாள் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் சீட் கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மகளிரணி தேசிய செயற்குழு உறுப்பினரான நளினி ராமன் சீட் கேட்டு வானதி ஸ்ரீனிவாசன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் மூலமாக முயன்று வருகிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இவருக்கு கூடுதல் பலம். இதற்கிடையே, பா.ஜ.க.வில் கல்வியாளர் அணி மாநில துணைத்தலைவராகவுள்ள, ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளரான ஜெயராமன், சீட்டை எதிர்பார்த்து பணத்தை தண்ணீராய் இறைத்து வருகிறார். கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஒரு காலத்தில் எடப்பாடிக்கு மிக நெருக்கமாக இருந்தார். சேலம் தொகுதியில் இவருக்கு சீட் கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளதாகச் சொல்கின்றனர்.

நாட்டு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரான ஏ.சி.முருகேசன், நாமக்கல் அல்லது சேலம் நாடாளுமன்றத் தொகுதியை குறி வைத்து சீட் கேட்டுள்ளார். பா.ம.க. தரப்பில் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க.வுடனும், மருத்துவர் ராமதாஸ் அ.தி.மு.க.வுடனும் கூட்டணி தொடர்பாகப் பேசி வருகின்றனர். அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால் சேலம் தொகுதி கிடைக்க வாய்ப்பில்லை எனவும், பா.ஜ.க.வுடன் உடன்பாடு எட்டப்பட்டாலோ அல்லது தனித்துக் களமிறங்கினாலோ சேலம் தொகுதியில் பா.ம.க. நிச்சயம் போட்டி யிடக்கூடுமெனத் தெரிகிறது. சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க மாநில செயலாளருமான கார்த்தி போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தைலாபுரம் தலைமையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவருக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பா.ம.க. சேலம் மாவட்டத் தலைவர் கதிர்.ராஜரத்தினம், பசுமைத்தாயக மாநில பொறுப்பாளர் சத்ரியசேகர் ஆகியோரும் சீட் எதிர்பார்த்து எம்.எல்.ஏ. அருள் மூலமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

இந்த முறையும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பில், ஏற்கெனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ராசா அம்மையப்பன் அல்லது மாநகர் மா.செ. தங்கதுரை ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தமுறை சேலம் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தும் எண்ணமும் நா.த.க. தலைமைக்கு இருப்பதாகவும், ஆனால் பெண்கள் தரப்பிலிருந்து இதுவரை ஒருவரும் விருப்பம் தெரிவிக்கவில்லையென்றும் சொல்கிறார்கள்.

அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் யாருக்கு சீட் என்று யூகமாகக்கூட ஒருவரையும் சொல்ல முடியாதென உதட்டைப் பிதுக்கினார்கள் தே.மு.தி.க. தரப்பினர். இன்னும் பத்து நாட்களில் முக்கிய கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தை முழு வடிவம் பெற்று, தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, ஒவ்வொரு கட்சியிலும் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தை இப்போதே பரபரப்பாக்கியிருக்கிறது.

salem