தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக, 46-வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழக முதல்வருடன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023 மற்றும் பபாசி விருதுகளை தமிழக முதல்வர் வழங்கி, விழாப் பேருரையாற்றினார். பின்னர் புத்தகக் காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். தமிழக அரசின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகக் காட்சி, வரும் 22-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வையிடலாம். சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன, இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் இம்முறை, சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. வரும் 16, 17, 18ஆம் தேதிகளில் இந்த மைதானத்துக்கு அருகிலேயே சர்வதேசப் புத்தகக் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, சர்வதேச எழுத்தாளர்களின், பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் நமது நக்கீரன் அரங்கை நோக்கி புத்தக ஆர்வலர்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்த ஆண்டில், நக்கீரனின் புதிய வரவுகளான, நக்கீரன் ஆசிரியரின் "போர்க் களம் 3-ஆம் பாகம்', "சித்ரவதை 2-ஆம் பாகம்', "சின்ன குத்தூசியாரின் படைப்புகள்', பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு', "திராவிட நாடு', "உரிமைக்குரல்' உள்ளிட்ட நூல்கள், "பெண்ணியம் போற்றிய பெரியார்', "தியாக ராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு', ஜெகத் கஸ்பர் எழுதிய "வீரம் விளைந்த ஈழம்', அட் டைக்கட்டு நூலாக "பொன்னியின் செல்வன்' நாவல், கி.வா.ஜகந்நாதன் எழுதிய "பாரிவேள்', "நினைவோ ஒரு பறவை 2ஆம் பாகம்' உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வாசகர்களைக் கவர்ந்துள்ளன. பொங்கல் விடுமுறை நாட் களில் வாசகர்களின் கூட்டம் மிகவும் அதிக மாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
-தெ.சு.கவுதமன்