தேர்தல் வந்தாலே உற்சாகத்துக்கும், கரன்சி நடமாட்டத்துக்கும் எப்படி குறைவிருக்காதோ அதுபோலவே அதிருப்திகளுக்கும் ஆத்திரங்களுக்கும் அணிமாறுதலுக்கும் குறைவிருக்காது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஐந்து சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட்டு மறுக்கப்பட்டுள்ளது எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேர்தல் என்று வரும்போது, சிலருக்கு சீட் கிடைப்பதும் சிலருக்கு சீட் மறுக்கப்படுவது சகஜம் தான் என்றாலும், ஈரோட்டைப் பொறுத்தவரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்பந்தி முறை உறவினரான அமைச்சர் கே.சி.கருப்பண னின் ஆதிக்கமும் முக்கியக் காரணம் என ர.ர.க்கள் கொதிக்கிறார்கள்.
2001-ல் முதன்முதலாக எம்.எல்.ஏ. ஆகிய கருப்பணன், மீண்டும் 2016-ல் பவானியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வர் தயவில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் ஆனார். மீண்டும் தனது ராசியான தொகுதியான பவானியிலேயே போட்டியிடும் கருப் பணன், ஈரோடு மாவட்ட வேட்பாளர் தேர்வில் முக்கிய இடம் வகித்துள்ளார்.
தனது அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாஜலத்தை ஒதுக்கிவிட்டு தனது விசுவாசியான ஜே.கே. என்கிற ஜெயக்குமாரை வேட்பாளராக அறிவிக்க வைத்திருக்கிறார் கருப்பணன். அதேபோல் அந்தியூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணனுக்குப் பதிலாக தனது ஆதரவாளரான சண்முகவேல் என்பவரை யும் பவானிசாகர் (தனி) தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு பதிலாக தனக்கு நெருக்க மான டாஸ்மாக் ஊழியர் பண்ணாரி என்பவரையும் வேட்பாளராக அறிவிக்க வைத்து விட்டார்.
தென்னரசுவுக்கு சீட் இல்லாமல் கூட்டணிக் கட்சியான த.மா.கா.வுக்கு ஒதுக்கவைத்ததோடு, தோப்பு வெங்கடா ஜலத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரே காரணத்துக்காக மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணிக்கும் சீட் இல்லாமல் இத்தொகுதியையும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு போகவைத்து விட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதி களில் இரண்டை கூட்டணிக்கு தள்ளிவிட்டு சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக உள்ள தனது எதிரிகள் ஐந்து பேருக்கு ஆப்பு வைத்துவிட்டார் அமைச் சர் கருப்பணன் என பேசப்பட்டாலும், "இதன் விளைவுகள் தேர்தல் முடிவில் எதிரொலிக் கும்' என வருந்துகிறார்கள் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள்.
""என் மாவட்ட அமைச்சர்கள் எனக்கு எதிராக கருத்துத் தெரிவித் திருந்தால் அது மக்களுக்கு எதிரான முடிவு''’என சுருக்கமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தோப்பு வெங்கடாசலம் பத்தாண்டு களாக அ.தி.மு.க.வில் முக்கிய இடம் வகித்துவந்தவராவார். இவரது சுற்றுச்சூழல் துறை, கருப்பணன் கைக்கு மாறியதோடு, இப்போது அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் பெருந்துறை தொகுதி ஈஸ்வரனின் கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. தோப்பு வெங்கடாசலம் இத்தொகுதியில் போட்டியிடாதது கொ.ம.தே.க.வுக்குச் சாதகமாக அமையலாம்.