ண்டுதோறும் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகும் தமிழ்த் திரையுலகில், மக்களுக்கான அரசியலை நேரடியாகப் பேசும் படங்கள் என்பவை மிக அரிதானதே. அப்படியான படங்கள் அவ்வப்போது வெளியானாலும், அவை இச்சமூகத்தின் மாறுபட்ட பார்வைகள் குறித்தான விவாதக்களத்தை அமைத்துக் கொடுப்பதென்பது அரிதினும் அரிதானதே. ஆனால், அப்படி ஒரு அரிதினும் அரிதான செயலை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது அண்மையில் வெளியான 'கர்ணன்' திரைப்படம்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்... தனுஷ், ரஜிஷா விஜயன், லால் உள்ளிட்டோர் நடித்து ஏப்ரல் ஒன்பதாம் தேதி வெளியான படம் "கர்ணன்'. தென் தமிழகத்தை கதைக்களமாகக் கொண்டும், அப்பகுதியில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த, இரு வேறு உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் புனையப்பட்டுள்ள கர்ணனின் கதை, ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும், முன்னேற்றம் குறித்த அவர்களது கனவுகளையும் நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது.

தனுஷ் வசிக்கும் பொடியன்குளம் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படாமலும், பேருந்து நிறுத்தம் அமைக்கப்படாமலும் இருக்கிறது. அதனால், அந்தப் பக்கம் செல்லும் லாரி போன்ற பிற வாக னங்களைத்தான் போக்குவரத்துக் காக பொடியன்குளம் மக்கள் பயன்படுத்தும் சூழல். மருத்துவம் உள்ளிட்ட எந்த ஒரு அவசரத் தேவைக்கும் கூட தங்கள் ஊரில் நிற்காமல், கடந்து செல்லும் பேருந்தை ஏக்கத்துடனும் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்திரத் துடனும் பார்க்கத் தொடங்கும் மக்கள், ஒரு நாள் பொறுமையிழந்து பேருந்தைத் தாக்க, அதன் விளைவாக பெரும் பிரச்னைகள் அவர்களைத் தொடர்கிறது. அந்தப் பிரச்சனைகளைக் கிராம மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதே இப்படத்தின் கதை.

karnan

Advertisment

தங்கள் ஊருக்கென்று ஒரு பேருந்து நிறுத்தம் தேவை எனப் போராடும் பொடியன்குளம் கிராம மக்கள், அவர்களின் தேவைகளைப் பயன்படுத்தியே அவர்களை அடக்கிவைத்திருக்க நினைக்கும் மேலூர்வாசிகள், என இரு தரப்பினரின் மன ஓட்டத்தினையும் படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம் மனத்திற்குள் பதிய வைத்துவிடுகிறது கர்ணன். வாழ்ந்துமுடித்த பொடியன்குளம் பெரியவர்களின் இயலாமையையும், வாழத் துடிக்கும் அக்கிராம இளைஞர்களின் ஆசையையும் கோபத்தையும் தன் தோளில் தூக்கிச்சுமக்கும் கர்ணனாகக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் தனுஷ். இவரைத் தவிர்த்து, லால், நட்டி, ரஜிஷா விஜயன் என கதையில் வரும் ஒவ்வொருவரும் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து வெகுசிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரையில் தோன்றும் நடிகர்களைப் போலவே திரைக்குப்பின்னால் இருந்து இப்படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் படத்தொகுப்பாளர் செல்வா ஆகியோர். பேச்சி வரும் காட்சிகள், இடைவேளைக் காட்சி, போலீஸாரின் சூறையாடல், கர்ணன் குதிரையேறி ஊருக்குத் திரும்புதல் உள்ளிட்ட பல காட்சிகளில் இம்மூவரின் கூட்டணி நம்மை மிரள வைத்து விடுகிறது.

நடிப்பிலும், தொழில்நுட்ப ரீதியிலும் வலுவான ஒரு படமாக வெளியாகியுள்ள கர்ணன், கருத்தியல் ரீதியாக இன்றைக்கு ஏற்படுத்தியுள்ள விவாதம் கவனிக்கத்தக்கது. மகாபாரத கதாபாத்திரங்கள், தலையில்லா புத்தர், தலை வரையப்படாத ஓவியம், மனிதத் தலைக்குப் பதிலாகக் களிமண் சிற்ப முகத்துடன் வரும் சிறுமி, கழுதை -யானை -குதிரை எனக் குறியீடுகளால் பல தீவிரமான கதைகள் பேசியிருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமா தவிர்த்து வந்த வாழ்க்கைச் சூழலை யதார்த்தமாகக் காட்டி புது அழகியலைப் படைத்திருக்கிறார்.

அதேபோலக் கதையாக இதனை கட்டமைத் ததிலும் நேர்த்தியைக் கையாண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஆண் கதாபாத்திரங்களுக்கு இணையாக ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தையும் கதையின் திருப்பங்களுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ள இயக்குனர், பேச்சியின் கன்னி அம்மன் மூலம் நாட்டார் தெய்வ வழிபாட்டையும் பிரதானப்படுத்தி யுள்ளார்.

90-களின் பிற்பகுதியில் நடக்கும் விதமாக காட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை, இருவேறு உண்மைக் கதைகளை அடிப் படையாகக் கொண்டு புனையப்பட்டதே. அதில் ஒன்று, 1991 - 1996 ஜெயலலிதா ஆட்சியில் கொடியன்குளம் பகுதியில் இரு சாதியினருக்கு இடையே நடந்த கலவரம். மற்றொன்று, 1996 - 2001 திமுக ஆட்சியில் விருதுநகர் போக்குவரத்து கழகத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரை சூட்டியபோது அந்த கழகத்தின் பேருந்துகள் சூறையாடப்பட்ட சம்பவம். விருதுநகரில் இந்த போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டி ருந்த தலைவர்களின் பெயர்களை எடுத்துவிட்டு அந்தந்த மண்டலங்களின் பெயரை வைத்து கலவரங்களைக் கட்டுப்படுத்தினார் கலைஞர். இப்படி இருவேறு ஆட்சிக்காலத்தில் நடை பெற்ற இந்த சம்பவங்களை ஒன்றாக இணைத்துச் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் அதற்கான காலகட்டத்தைக் குறிப்பிடுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். அதில் ஏற்பட்ட குழப்பமும் தடுமாற்றமும் ஒரு வலுவான படைப்பை சர்ச்சைக்குள்ளாக்கியது.

kk

Advertisment

அசுரன், கர்ணன்... என ஒரு தயாரிப் பாளராகப் பலரும் துணியாத முயற்சியைச் செய்து பெரும் வெற்றி கண்டிருக்கும் கலைப்புலி தாணுவை பாராட்ட வேண்டும். ஓலமாகவும் அறைகூவலாகவும் உயிருடன் இசை ஒலித் திருப்பதில் சந்தோஷ் நாராயணன் முக்கிய மான கலைஞன் என்பதை நிறுவியிருக்கிறார். ஓர் எழுத்தாளராகப் படைப் புத்துறைக்குள் நுழைந்த மாரி செல்வராஜ், தனது முதல் படமான பரியேறும் பெருமாளில் பேசிய அதே ஒடுக்குமுறை குறித்த அரசி யலைத்தான் இப்படத்திலும் பேசியுள்ளார். ஆனால், பரியன் அதனைக் கையாண்ட விதமும், கர்ணன் அதனை கையாண்ட விதமும் வெவ்வேறு விதமானவை. தனது ஊருக்கு வரும் பேருந்தில் ஏறி கல்லூரியில் படிப் பதற்காகச் செல்லும் பரியன், படித்து அதிகாரத்திற்கு வந்து ஒடுக்குபவர்களுட னேயே அமர்ந்து பேச முயற்சிப்பவன். அதேநேரம், கர்ணன் தனது கிராமத்தின் அடுத்த தலைமுறை வெளியில் சென்று படிக்கவாவது ஊருக்கு ஒரு பேருந்து வேண்டும் என போராடுபவன். மாரி செல்வராஜின் படைப்புகளில் பரியன் ஒரு சிந்தனையாளனாகவும், கர்ணன் சிந்தனையாளர்களை உருவாக்கத் துடிக்கும் போராளியாகவுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பரியன், அதிகார வர்க்கத்தைத் திருப்பி அடிக்கவில்லை, ஆனால், கர்ணன் திருப்பி அடித்திருக்கிறான். மாடசாமியின் மகன் துரியோதனனாகவோ, கர்ணனாகவோ இருக்க லாம் என்பதைக் கண்ணபிரான்களின் முன் அழுத்தமாகவும் சத்தமாகவும் சொல்லியிருக்கிறான் கர்ணன்.

கர்ணனின் நோக்கம் சரியாயினும், அதற்காக அவன் பயணித்த வன்முறை எனும் பாதை தவறானது என்பது இப்படத்தைப் பார்த்த பலரின் விமர்சனமாக உள்ளது. ஆனால், ஒடுக்கப் பட்டவர்களின் குரல் அதிகார வர்க்கத்திற்குச் சென்றடைய கர்ணனின் பாணிதான் விரைவானது எனவும், சரியானது எனவும் ஒரு சிலர் நம்பிய காலகட்டமும், சூழலும் இருந்திருக்கின்றன. ஆனால், பிந்தைய காலகட்டத்தில் இந்த மனநிலை பெருமளவு மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. வலி எத்தகையதோ அதற்கான எதிர்ப்பும் அத்தகையதாகத்தான் இருக்கும் என்று உரக்கச் சொல்லி யிருக்கிறான் கர்ணன்.

-கிருபாகர்