"ஹலோ தலைவரே, நாட்டின் 76ஆவது குடியரசு தினத்தை நம்ம தமிழகமும் உற்சாகமாகக் கொண்டாடியிருக்கு.''”
"ஆமாம்பா, கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரதீர சாகசங்களைச் செய்தவர்களுக்கு விருதுகளை வழங்கி இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதியும், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட பொது மக்களுடன் கலந்துக்கிட்டாங்க. தமிழகம் முழுக்க, வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள்ன்னு எல்லா இடங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிப் பெருக் கோடு நடத்தப்பட்டிருக்கு. அதேபோல் குடியரசு தினத்தை முன் னிட்டு ராஜ்பவனில் டீ பார்ட்டி கொடுத் தார் கவர்னர் ரவி. அவர் அழைப்பு அனுப்பியும், அவர் கொடுத்த விருந்தை, தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் புறக்கணித்துவிட்டன. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியினர் அதில் கலந்துகொண்டனர். பா.ஜ.க. ஹெச்.ராஜாவும், அ.தி.மு.க. ஜெயக்குமாரும் இந்த தேனீர் விருந்தில் மிகவும் மகிழ்வோடு பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, ஜெயக்குமாரிடம் ஹெச்.ராஜா, "என்னதான் நீங்கள் விலகி விலகிப் போனாலும், உங்களை நாங்கள் விடமாட்டோம்' என்று சொன்னபோது, ஜெயக்குமாரோ, "நீங்க என்னதான் துரத்தினாலும் நாங்கள் சிக்க மாட்டோம்' என்று சொன்னது ஹைலைட். இந்த தேநீர் விருந்திற்கு சீமானையும் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் யையும் கவர்னர் ஸ்பெஷலாக அழைத்தும், இருவரும் பேசி வைத்துக் கொண்டதுபோல் அந்த விருந்தைப் புறக்கணித்துவிட்ட னர்.''”
"பெரியாரை விடாமல் கீழ்மையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி சீமானுக்கு, முதல்முதலாக ஆசிரியர் அவர்கள் அழுத்தமாக பதிலடி கொடுத்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் கடலூர் அரசு வழக்கறிஞர் வனராசு மகன் திருமண விழா நடந்தது. அதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப் பாளராகக் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மணமக்களை வாழ்த்தும்போது சந்தடி சாக்கில், "இங்கே அமைச்சர் பேசுகிற போது பெரியாரைப் பற்றி யார் யாரோ எதை எதையோ சொல்கிறார்களே என்று ரொம்பவும் சோகத்தோடு சொன்னார். நாம் எப்போதுமே பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டும் பதில் சொல்கிற இயக்கம். மற்றவர்களுக்கு பதில் சொல்வது இல்லை. அதேபோல் பைத்தியம் பிடிக்கா தவர்களுக்கு மட்டும்தான் நாம் பதில் சொல்லக்கூடியவர்கள். பைத்தியம் பிடித்தவர்களுக்கு பதில் சொல்கிறவர்கள் அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்குத் தேவை சிகிச்சைதானே தவிர, பதில் அல்ல. ஒருவர் பெயரைச் சொல்லி, அவர் அப்படிச் சொன்னாரே என்றார்கள். அடுத்து ஒருவர் பெயரைச் சொல்லி., அவர் அதை ஆதரிக்கிறாரே என்றார்கள். இங்கே ஒரே ஒரு பைத்தியம்தான் இருக்கணும்ன்னு என்ன அவசியம்?'’என பெரியாரை விமர்சித்த சீமானுக்கும், அதை வழிமொழியும் பா.ஜ.க.வினருக்கும் ஒருசேர பஞ்ச்சாக பதிலடி கொடுத்தார். இதைக்கேட்டு மணவிழாவிற்கு வந்த அனைவரும் பலமாகக் கைத்தட்டி ரசித்தனர்.''”
"சீமானின் வாய்த் திமிரை அவரது நாம் தமிழர் கட்சித் தம்பிகளே வெறுக்கிறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தந்தை பெரியாரை விமர்சிக்கும் சீமானைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அவரது தம்பிகளாக வலம் வந்த தொண்டர்களும் அவரிடமிருந்து கொத்துக் கொத்தாய் விலகி வருகிறார்கள். அவர்களில் ஆயிரக்கணக் கானவர்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் தி.மு.க.வில் இணைந்தனர். "அண்டப் புளுகனே, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப் போவதில்லை'’ என்கிற முழக்கத்தை அந்த விழாவில் அவர்கள் எழுப்பினர். ஏற்கனவே, அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் விலகி விட்ட நிலையில், தற்போது இவ்வளவு பேர் தி.மு.க.வில் இணைந்திருப்பது சீமானை பெரிதும் டென்சனாக்கி இருக்கிறது. மேலும் சீமான் மீதான வெறுப்பால், ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் சென்றபோது, பொது மக்கள் அதிகம் கூடவில்லை. மிச்சமிருக்கும் நிர்வாகிகளோ, "உயிரோட்டமாகக் கட்சி வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில், சீமானின் வாய்த்துடுக்கும், பெரியார் மீதான வசைபாடலும், அவரை மக்கள் மத்தியில் வில்லனாக்கிவிட்டது'’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.''”
"அ.தி.மு.க.வும் நடிகர் விஜய்யின் த.வெ.க.வும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறதே?''”
"நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் அ.தி.மு.க. ரகசிய மாகக் கூட்டணிப் பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை இப்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் சட்ட மன்றத் தேர்தலில் தங்களுக்கு 60 சீட்டுகளை ஒதுக்கவேண்டும் என்றும், தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் தங்களிடம் பேசிவரும் அ.தி.மு.க.விடம் டிமாண்ட் வைத் திருக்கிறார் விஜய். அ.தி.மு.க. தரப்போ 40 சீட் வரை உங்களுக்குத் தரத் தயார் என்று சொல்லியிருகிறது. 40 என்றால் அதில் 15-20 தொகுதிகள் வரை ஜெயிக்கலாம். அதே 60 தொகுதியில் நின்றால், 30 வரையில் ஜெயிக்கலாம் என்று கணக்குப் போடுகிறாராம் விஜய். ஆனால் அ.தி.மு.க.வின் சீனியர்களோ, இதுவரை தேர்தல் களத்துக்கே வராத விஜய் கட்சிக்கு 60 சீட் என்பது அதிகம் என்கிறார்களாம். இதற்கிடையே, தி.மு.க.வில் இருந்து தங்கள் கட்சிக்கு வந்த ஒரு பெண்மணிக்கு, ஈரோடு மாவட்டத்தில் பொறுப்பு கொடுத்திருக்கிறார் விஜய். அது அவர் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"வேங்கைவயல் விவகாரம் வேறு மாதிரி இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அங்கிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிரவைக்கும் அளவிற்கு இருக்கின்றன.''
"இந்த வேங்கைவயல் விவகாரத்தைப் பொறுத்தவரை, ’ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்’ என்கிற அறிக்கையைத்தான் சி.பி.சி.ஐ.டி. போலீஸ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இன்னும் அது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. இதற்கு மேல் நீதிமன்றம் செலுத்தும் திசையி லேயே இந்த வழக்கு செல்லும் என்கிற நிலை இருக்கிறது. இந்த விவகாரத்தில் காவல்துறைத் தரப்பு, சுதர்சன், முத்துக் கிருஷ்ணன், முரளிராஜா என்கிற மூவரைக் குற்றவாளிகளாகக் காட்டியிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தின் பின்னணியில், வேங்கைவயலை உள்ளடக்கிய அன்னவாசல் பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவுக்கும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சிதம்பரத்திற்கும் இடையிலான பகையே காரணம் என்கிறார்கள்.''”
"என்னப்பா சொல்றே?''”
"கடந்த உள்ளாட்சித் தேர்தலில் முத்தையாவால், முன்னாள் தலைவரான சிதம்பரம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு இடையிலான தகராறில், அங்கிருந்த பம்ப் ஆபரேட்டரான சண்முகம் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கிடையில் தொடர்ந்த பகைதான் இதற்கு காரணம். சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா இந்த மூவரும் சம்பவம் நடந்தபிறகு, ஊர்மக்கள் சொன்னதன் பேரில், குடிநீர்த் தொட்டி மீது ஏறிப் பார்த்து, நடந்தவற்றை உறுதிசெய்தார்களாம். இதையறிந்த லோக்கல் போலீஸ், இவர்களையே குற்றவாளியாக்கிவிட்டதாம். இதையே சி.பி.சி.ஐ.டி. போலீஸும் ஏற்றுக்கொண்டு, ரிப்போர்ட்டைத் தாக்கல் செய்திருக்கிறது என்கிறார்கள் ஒரு தரப்பினர். இந்த வேங்கைவயலைப் பொறுத்தவரை, மோசமான சாதி அடக்குமுறை இன்னும் நீடித்துவரும் கிராமமாகும். வேங்கைவயல் சம்பவத்தை அரசு தீர விசாரித்து ஒரு முடிவுக்கு கொண்டுவருவதே சிறந்தது என்கிறார்கள் வேங்கைவயல் பொதுமக்கள்.''”
"மாநில நிர்வாகியின் மோதல் போக்கு பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதே?''”
"பா.ஜ.க.வைப் பொறுத்தவரை மாஜி மந்திரி நயினார் நாகேந்திரனுக்கும், தற்போதைய பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கும் இடையே உரசல் இருந்துவருவது ஊரறிந்த ரகசியம். தற்போது அது இருவருக்கும் இடையிலான பகிரங்க மோதலாக வெடித்திருக்கிறது. பா.ஜ.க.வின் தேசியத் தலைமையின் மன நிலைக்கு ஏற்ப பேச ஆரம்பித்திருக்கும் நயினார் நாகேந்திரன், ’அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்றால், எடப்பாடியை அழைத்துப் பேசினாலே அது அமைந்துவிடும்’ என்று சொல்லி வருகிறார். இதைக்கண்டு எரிச்சலான பா.ஜ.க.வின் அந்த மாநில நிர்வாகியோ, ’கூட்டணி பற்றிப் பேசும் உரிமை நயினாருக்கு இல்லை’ என்று எடுத்தெறிந்து பேசி, தன் முரட்டுத் தனத்தைக் காட்டியிருக்கிறார். தனக்கென்று தனிப்பட்ட ஆதரவாளர்களோடும் இருக்கும் நயினாருடன், அந்த பா.ஜ.க. நிர்வாகி இந்த விவகாரத்தில் மோதிக் கொண்டிருப்பது, பா.ஜ.க.விலும் அ.தி.மு.க.விலும் ஒரு சேர அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.''”
"தமிழக மணல் குவாரிகள் பற்றி பரபரப்பான செய்திகள் வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக மணல் குவாரிகளை அரசு கைமாற்ற இருக்கிறது என்றும், மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜப்பா என்பவரிடம் குவாரிகளைக் கொடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் முன்பு தகவல்கள் அடிபட்டன. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. மீண்டும் தமிழக மணல் குவாரிகளை பழைய கரிகாலன், ராமச்சந்திரன், ரத்தினம் என்கிற மும்மூர்த்திகளிடமே ஒப்படைப் பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் இப்போது நடக்கும் டுவிஸ்ட் என்னவென்றால், ராமச்சந்திரனின் எஸ்.ஆர்.குரூப் புக்கு செக் வைக்கும் விதமாக கரிகாலனும், ரத்தின மும் கைகோத்து நிற்கிறார்களாம். இதுதான் இப்போது, குவாரித் தரப்பை பரபரப்பாக்கி வருகிறது.”இந்நிலையில், ராஜப்பா குரூப்புக்கு வரும் 1-ந்தேதியிலிருந்து மணல் அள்ளும் உரிமையை கொடுப்பதாக இருந்ததை கேள்விப்பட்ட கரிகாலன், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஊ.உ.யிடம் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தேன் என்பதை ஒண்ணுவிடாம சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை என மிரட்டியுள்ளாராம். அதனால் அமைச்சர் தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறது என்று இன்னொரு தரப்பு கிசுகிசுத்தது.''
"ஈரோடு கிழக்கில் தி.மு.க. அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறதே?''”
"எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணித்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் தி.மு.க.வுக்கு எதிராக அங்கே வரிந்துகட்டுகிறது. இந்த நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 90 சதவீதம் தி.மு.க.வுக்கே விழ வேண்டும் என்று, தங்கள் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி உத்தரவு போட்டிருக்கிறாராம். பொறுப்பாளர்களும், கடந்த முறை 10,000 வாக்குகள் வாங்கியது சீமான் கட்சி. இந்த முறை வெறும் 1000 வாக்குகளில் அவர்களை முடக்கிவிடுவோம் என்று மார் தட்டி வருகின்றனர். இதற்கிடையே, தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்து விட்ட நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று எடப்பாடியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனையடுத்து கட்சியின் சீனியர்களிடம் ஆலோசித்த அவர், நோட்டாவில் உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறாராம். தேர்தலைப் புறக்கணிக்கும் பா.ஜ.க., தே.மு.தி.க., விஜய்யின் த.வெ.க. ஆகிய கட்சிகளும் இதேபோல் முடிவெடுத்தால், தேர்தல் முடிவுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.''”
"நானும் கோட்டைத் தரப்பிலிருந்து கசிந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் விரைவில் நடக்க இருக்கிறது. அதில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பலரும் மாற்றப்பட இருக்கிறார்கள். இதற்கான பட்டியல் கோட்டையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, டம்மி போஸ்டிங்கில் இருக்கும் பலரும், பசையுள்ள போஸ்டிங் வாங்க, அதிகார மையங்களை நோக்கி முண்டியடித்து வருகின்றனர்.''