பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலால் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத் தையடுத்து, இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானியர்கள், அவர்களின் நாட்டுக்கே திரும்பிச் செல்லவேண்டு மென, மோடியின் ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு, அப்பாவிகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்படியான விளைவுகளை ஏற்படுத்திவருவதாக சமூக ஆர்வலர்கள் குரலெழுப்புகிறார்கள்.
இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானியர்களில் சுற்றுலா பயணிகள் தவிர்த்து, மருத்துவ உதவிக்காக இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளை நாடிவந்தவர் கள் அதிகம் இருக்கிறார்கள். அதேபோல், இந்தியர் களை மணந்துகொண்ட பாகிஸ்தான் பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றோடு முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களாகவே பல்லாண்டுகளாக வாழ்ந்துவருகிறார்கள். அப்படியானவர்களை பாகிஸ்தானுக்கு துரத்துவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத் நகரைச்சேர்ந்த ஒருவர், தனது 7 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்கு, பிறப்பின்போதே ஏற்பட்டுள்ள இதய நோய்க்கான சிகிச்சையளிப்பதற்காக டெல்லியிலுள்ள உயர்தரமான மருத்துவமனையை நாடி வந்துள்ளார். தற்போதுவரை குழந்தைகளின் மருத்துவத்துக்காக ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளார். சில நாட்களில் அறுவைச்சிகிச்சை நடைபெறவுள்ள நிலையில், பஹல்காம் அசம்பாவிதம் காரணமாக, உடனே தங்கள் குழந்தைகளோடு பாகிஸ்தானுக்கு திரும்பும்படி காவல்துறையும், வெளியுறவுத்துறையும் கட்டாயப்படுத்தியுள்ளன. இப்போது இவரது நிலை கையறு நிலையாக இருப்பதால், தங்கள் குழந்தைகளின் உயிர் காக்கும் சிகிச்சை நல்லபடியாக நடப்பதற்கு இரு நாட்டு அரசுகளும் மனிதாபிமான அடிப்படையில் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று, ஒரு பொறுப்புள்ள தகப்பனாகக் கண்ணீர் வடிப்பது அனைவரையும் கலங்கச் செய்கிறது. தற்போது இரு நாடுகளுமே இவருக்கான விசா சலுகைகளை ரத்து செய்துள்ளதால் பெரிதும் கலக்கத்தோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல், பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் சுக்கூர் நகரில் 1970ஆம் ஆண்டு பிறந்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தொழிலதிபர் ஒருவரை மணந்த சாரதா பாய் என்ற பெண்மணி, இந்திய குடியுரிமை பெற்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையெல் லாம் வைத்துள்ள சூழலில் தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். 1987ஆம் ஆண்டில் இவரது தந்தை, தனது ஆறு குழந்தை களோடு 60 நாள் விசாவில் இந்தியாவில், ஒடிசா மாநிலத்தி லுள்ள கோராபுட் மாவட்டத்திற்கு தொழில்நிமித்தமாக வந்து குடி யேறினார். இந்தியர் ஒருவரையே திருமணம் செய்துகொண்டு, தனது 55 வயதில், ஒரு மகன், மகளுடனும், இரண்டு பேரக்குழந்தைகளோடும் வசித்துவரும் சாரதா பாயை பாகிஸ்தானுக்கு திரும்பிச்செல்லும் படி காவல்துறை வற்புறுத்தும் நிலையில், தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை விட்டுவிட்டு தனியே பாகிஸ்தானுக்கு சென்று நான் மட்டும் எப்படி வாழ முடியும்? இந்தியாவை நம்பிவந்து, இந்தியக் குடிமகளாகவே வாழ்ந்து, தேர்தலில் வாக்கும் செலுத்தியுள்ள தன்னை இப்போது திருப்பியனுப்புவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்கிறார்.
இதேபோல் காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் போராளியை மணந்து, காஷ்மீரின் உமர் அப்துல்லா அரசு 2010ஆம் ஆண்டு கொண்டுவந்த முன்னாள் தீவிரவாதிகளுக்கான மறுவாழ்வுக் கொள்கையின் கீழ், தன் கணவரோடு 2013ஆம் ஆண்டு காஷ்மீர் பகுதியில் வசிக்கத் தொடங்கிய பாகிஸ்தானைச் சேர்ந்தவரான அலிசா ரஃபீக், கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவே தங்கள் எதிர்காலமென்று அமைதியான முறையில் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது அவரை பாகிஸ்தானுக்கே திரும்பிச் செல்லுமாறு காவல் துறையினர் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர், ""எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நான் 12 ஆண்டு களுக்கு மேல் இங்கேயே வசித்துவருகிறேன். எனது இளைய மகள் மிகவும் சின்னக்குழந்தை. இவர்களையும் என் கணவரையும் இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும்? நாங்கள் இங்கு வீடு கட்டியிருக்கிறோம். என்னிடம் ஆதார் அட்டைகள், தேர்தல் வாக்காளர் அட்டைகள் இருக்கின்றன. தேர்தலில் வாக்களித்திருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளவர், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம், ""என்னை நீங்கள் கட்டாயப்படுத்தி பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்ப விரும்பினால், என்னைக் கொன்றுவிடுங்கள். எனது உடலை வெட்டி பைகளில் போட்டு பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள்'' என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார். இவரைப் போலவே பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்து வசித்துவரும் ஜாஹிதா பேகம் என்பவரும், என்னை இந்தியாவிலேயே வாழ அனுமதியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ""நான் 15 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருகிறேன். மரியம், ஆம்னா என்ற மகள்களும், பைசான் என்ற மகனும் எனக்கு இருக்கிறார்கள். இவர்களை இங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் பாகிஸ்தானுக்கு சென்று எப்படி வாழ்வேன்? தயவுசெய்து எங்கள் குடும்பத்தை பிரிக்காமல், இந்தியாவிலேயே வாழ விடுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வசித்துவரும் பெண்கள், இந்திய அரசின் முடிவை மாற்றிக் கொள்ளும்படி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்தான்... அதற்காக இந்தியாவையே நம்பிவந்து இந்தியர்களாகவே வாழ்ந்துவரும் மக்களை இப்படி பிரித்தனுப்ப நினைப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்?
-தெ.சு.கவுதமன்