மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு ஆகியவற்றின் தொகுப்பு அணைகளான மேல்நீராறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிப் பள்ளம், அப்பர் ஆழியாறு ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, 124 கி.மீ. தூரமுள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன வாய்க்கால் மூலமாக கோயம் புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் 3.77 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கப்படுகிறது. நன் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த பி.ஏ.பி. கால்வாய் செல்லும் வழியில், சிறிதளவு இடத்தை வாங்கி, அதில் கிணறு போர்வெல் அமைத்தும், பக்கவாட்டில் துளையிட்டும், வாய்க்காலிலி ருந்து கிணறுக்கு நேரடியாக பைப் அமைத்தும் தண்ணீர் திருட்டிலே பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியான திருட்டி னால் தங்களுக்கு பாசன நீர் கிடைப்பதில்லை என கடைமடை விவசாயிகள் போராடிய நிலையில், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, மின் வாரியம் மற்றும் போலீசார் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் கால்வாய்க்கு அருகிலுள்ள, கிணறு, போர்வெல் ஆகியவற்றை கணக்கெடுத்து, அவற்றின் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரு மாவட்ட நிர்வாகங் களுக்கும் சென்னை நீதிமன்றம் உத்தர விட்டது. இதனடிப்படையில், தீபாலப்பட்டி, மொடக்குபட்டி, ஆவலம்பம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம், கரப்பாடி கிராமங்களில் பிரதான கால்வாய்க்கு அருகிலிருந்த கிணறுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

watertheft

Advertisment

இது குறித்து 11.04.2022 அன்று நடத்தப்பட்ட நீர் மேலாண்மை கண்காணிப்புக் குழுவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், "கடந்த 10, 15 ஆண்டுகளாக பி.ஏ.பி., கீழ்பவானி மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகளிலும், பிரதான கால்வாய்களிலும் வணிக நோக்கில் தண்ணீர் எடுப்பது அதிகரித்து விட்டது. விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கும், தொழிற்சாலைகளுக் கும் தண்ணீர் எடுக்க ஆரம்பித்து விட்டனர். விவசாயிகளில் சிலர் நஷ்டம் ஆகி விட்டதால் கிணறுகளை விற்பனை செய்கின்றனர் அல்லது குத்தகைக்கு தருகின்றனர். அரசாணை மற்றும் முந்தைய தீர்ப்பு, பொதுப்பணித்துறை உத்தரவு களை உறுதி செய்து உத்தரவிட்ட ஐகோர்ட், அதை அமல் செய்யத் தவறும் பட்சத்தில் கலெக்டர் மற்றும் எஸ்.பி. மீது அவமதிப்பு வழக்கு பதியவும் உத்தரவிட்டிருக்கிறது.

இவ்விவகாரத்தில், "வாய்க்காலில் தண்ணீர் எடுக்கும் எல்லோரையும் திருடர்களாக வகைப் படுத்தக்கூடாது. தனித்தனி யாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள் ளேன். வணிகரீதியாக, வாய்க் காலில் இருந்து, 50 மீட்டருக் குள் செயல்படும் கிணறுகள், மோட்டார்களை உடனடி யாகத் தடை செய்யலாம். வணிகரீதியாக, வாய்க்காலில் இருந்து, 50 மீட்டர் முதல், 300 மீட்டர் வரைக்குள் இருக்கும் மோட்டார்கள், கிணறுகளை அடுத்து தடை செய்யலாம். வாய்க்காலில் இருந்து, 300 மீட்டருக்குள் போர்வெல் போட்டு விவசாயம் என்று கூறிக்கொண்டு, வணிகரீதியாகத் தண்ணீர் பயன்படுத்துவோரைத் தடை செய்யலாம்'' என்றார்.

கடந்த 5-ம் தேதியன்று பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் வணிகரீதியாக தண்ணீர் திருடுபவர்களின் மின் இணைப்பினைத் துண்டிக்க உடுமலை கோட்டாட்சியர் கீதா, பி.ஏ.பி. செயற்பொறியாளர் கோபி, டி.எஸ்.பி. தேன்மொழிவேல், பொதுப்பணித்துறையினர் மற்றும் மின்வாரியத்துறையினர் கொண்ட கூட்டுக்குழுவினர் உடுமலை கால்வாய் பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டு, கால்வாய்களின் இரு பக்கங்களிலும் 50 மீ. தூரம் கொண்ட கிணறுகளின் 29 மின் இணைப்புக்களைத் துண்டித்ததில், அ.தி.மு.க.வின் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரனின் கிணற்றின் மின் இணைப்பும் பாரபட்சமின்றி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் ஒன்றிணைந்து அதிகாரிகளைக் கண்டித்து, உடுமலை - மூணாறு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.

watertheft1

Advertisment

இதுகுறித்து பி.ஏ.பி. செயற்பொறியாளர் கோபி, "சட்டவிரோதமாக கால்வாய்க்கு அருகில் இருந்த கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்ததால், நீதிமன்ற உத்தரவு குறித்து நோட்டீஸ் அனுப்பி விரைவில் மின் இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கடைமடை விவசாயிக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்'' என்றார். "தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைத் திருடுபவரின் ரேஷன் கார்டை திரும்ப பெறவும், பதவியை பறிக்கவும் சட்டத்தில் அதிகாரம் உண்டு என்பதால், தண்ணீர் திருடிய மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வின் பதவியை பறிக்க வேண்டும்'' என்கிறார் தளி பகுதி விவசாயி ஒருவர்.

மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன் கூறுகையில், “"அந்த சொத்து என்னுடைய சொந்தக்காரரிடம் வாங்கியது. மழை நீர்ச் சேகரிப்புத் தொட்டி மூலம்தான் கிணறு நிரம்புது. இரண்டு மாடுகள், மரம், செடி, கொடிகளுக்காகத் தான் கிணறு பயன்படுது. வணிக நோக்கம் எதுவும் கிடையாது. என்னுடைய மின் இணைப் பைத் துண்டிக்கும் முன் முறைப்படி நோட்டீஸ் விநியோகித்திருந்தால் என்னுடைய தரப்பு விளக்கத்தைக் கொடுத்திருப்பேன்'' என்றார் அவர். திருட்டு மின்இணைப்புப் பிரச்சனை எம்.எல்.ஏ.வின் பதவியைப் பறிக்குமா என்பதே கேள்வி!

படங்கள்: விவேக்