தென் மாவட்டத்திற்காக கலைஞ ரால் கொண்டுவரப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு, பச்சையாறு ஆகிய நதிகளை ஒன்றிணைக் கும் நதிநீர் இணைப்புத் திட் டம், தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் பணிகள் முடிகிற தருணத்திலிருக்கின்றது என்கி றார்கள். இப்பணியிலிருக்கும் பொறியாளர்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளை வளமாக்கி விட்டு புன்னக்காயல் சென்று கடலில் சங்கமிக்கிறது தாமிரபரணி ஆறு. தாமிர பரணியோடு, ராம நதி, கடனா நதி, கொடு முடியாறு, பச்சையாறு, கருமேனியாறு, நம்பியாறு என மொத்தம் ஏழு நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியான இவற்றால் மாவட்டத்தின் பிற பகுதிகள் வளமானாலும், மாவட்டத்தை ஒட்டியுள்ள நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளை இந்நதிகள் எட்டவில்லை. இப்பகுதிகள், மழையை மட்டுமே நம்பியிருக்கிற வறட்சியான மானாவரிப் பகுதியாகும்.
பெருமழைக்காலங்களில் ஏழு ஆறுகளிலும் வெள்ளம் பிரவாகமெடுத்து, முக்கூடலில் சங்கமித்து, கரைபுரண்டு வீணாகப் புன்னக்காயல் கடலில் கலக்கின்றன. இப்படியாக ஆண்டுக்கு 31 டி.எம்.சி. அளவு தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதனைத் தேக்கி, ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளின் விவசாயத்தை செழிக்கவைக்க, மாநில விவசாய சங்கத் துணைத் தலைவர் பெரும்படையாரும், விவசாயிகளும் குரல் கொடுத்துவந்ததை அப்போதே நக்கீரன் வெளிப்படுத்தியிருந்தது.
இப்போதைய சபாநாயகரான அப்பாவு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே இதற்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜெ. ஆட்சி மாறி, கலைஞர் ஆட்சி வந்ததும், 2010ஆம் ஆண்டு, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதி நீர் இணைப்பின் வெள்ள நீர்க்கால்வாய் திட்டம் எனப் பெயரிட்டு, அதற்கென ரூ.369 கோடியை ஒதுக்கினார் கலைஞர். இத்திட்டத்தின் இரண்டு கட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெ. முதல்வராகவும் இத்திட்டம் முடக்கப்பட்டது. அவருக்குப்பின் வந்த எடப்பாடியும் இத்திட்டத் தைக் கண்டுகொள்ளவில்லை.
காலமாற்றத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்தது. ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, சட்டப்பேரவைத் தலைவரானார். முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இத்திட்டம் குறித்து விவரிக்க, உடனடியாக ரூ.933.23 கோடி ஒதுக்கீடு செய்தார் முதல்வர். இரண்டு வருடமாக நடைபெற்று வரும் நதி நீர் இணைப்புப் பணிகளை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்தினார். கல்லிடைக்குறிச்சியின் வெள்ளாங்குழியிலிருந்து வெள்ள நீர்க்கால்வாய் தோண்டுவது, பாளை, திடியூர் வழியாக நாங்குநேரியின் மூலக்கரைப்பட்டி, முனைஞ்சி பட்டி, ராதாபுரத்தின் நடுவக்குறிச்சி, திருச் செந்தூரின் தட்டார்மடம் என 80 கி.மீ தொலைவு கால்வாய் அமைப்பது என அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன.
பூச்சிக்காடு ஜெயராமன், மருதாச்சிவிளை லிங்கராஜ், எருமகுளம் லிங்கபாண்டி, முருகானந்தம் உள்ளிட்ட விவசாயிகள் கூறுகையில், "குடிக்கிற தண்ணிக்கி பல நூறு அடி போர் போட்டாத்தான் உப்பு கலந்த சவர் தண்ணீர் கிடைக்கும். எல்லா மக்களுக்கும் இதே கஷ்டம் தான். சில சமயம் போர்த் தண்ணி கெடைக்காம வற்றியும் போயிரும். தண்ணியில்லாமல் காய்ஞ்சிபோன எங்க பூமிகள வித்துவிட்டு பொழைப்புத் தேடி வெளியேறுவோமாங்கிற முடிவுக்கு வந்திட்டோம். ஆட்சி மாறி ஸ்டாலின் முதல்வரானதும், சபாநாயகர் அப்பாவு முயற்சியால கிடப்புல கெடந்த நதிக இணைப்பு எம்எல்தேரி திட்டம் முடியப் போறது எங்களுக்கெல்லாம் வாழ்க்கையில நம்பிக்கையை உண்டாக்கியிருக்கு.'' என்றனர் தெம்பான குரலில்.
பேரவைத் தலைவரான அப்பாவு கூறுகையில், "மேற்குத் தோடர்ச்சி மலைல உற்பத்தியாகிற ஆறுகளால எங்க பகுதிக்குப் பிரயோஜனமில்ல. வானம் பார்த்த ராதாபுரம் பூமியில செங்கல், ஓடுக தயாரிப்பு தான் மக்களோட வாழ்வாதாரம். விவசாயமில்ல. சொல்லும்படியான தொழிலுமில்ல. நீர்ப்பிடிப்பான எம்எல்தேரி பகுதி பல நூறு அடிகள் ஆழத்துக்கு மணலால் ஆனது. அந்தப் பகுதியில உள்ள தண்ணிய ஆழமா போர் போட்டுக் குடிப்பதற்கு எடுத்ததால் நல்ல தண்ணீர் போயி, கடல் நீர் உள் வாங்கிருச்சி. மக்கள் அதப் பயன்படுத்த வேண்டிய கட்டாயமாப் போச்சு. மழையத் தவிர வேற எங்களுக்கு ஆதாரமில்ல.
அதுக்காகத்தான் வெள்ளமாய் வீணா கடல்ல கலக்கிற நதிகளோட நீரை, வெள்ள நீர்க்கால்வாய் மூலம் இணைச்சி எங்க பகுதிக்குக் கொண்டுவரப் போராடுனோம். பிரயோஜனமில்ல. தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தப்ப, சந்திச்சி நிலைமைகளைச் சொன்னோம். தலைவரும் ஆய்வுக்குப் பின்ன நிதி ஒதுக்குனாக. 2 கட்டப் பணி நடந்த நிலையில ஆட்சி மாற்றமாயிருச்சி. ஜெ. அரசும், எடப்பாடி அரசும் கவனிக்கல. திட்டம் தடையானது. பின்பு ஆட்சி மாற்றமானது. முதல்வர் ஸ்டாலினிடம் பாதியில நின்றுபோன திட்டம் பற்றி விரிவாகக் கூறினேன். விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலின், இதுக்காக ரூ.933 கோடி ஒதுக்கினார். தற்போது பணிகள் முடிவு பெறும் நிலையிலிருக்கு. விரைவில் தாமிரபரணி எங்கள் பகுதியை எட்டிப் பார்க்கும்" என்ற அவரின் குரலில் நிம்மதியும், திருப்தியும் வெளிப்பட்டது. கலைஞரின் கனவுத் திட்டமான நதிநீர் இணைப்பை ஓசையில்லாமல் சாத்தியமாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-பி.சிவன்
படங்கள்:ப.இராம்குமார்