கடந்த 20-ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி சம்பகுளம் பகுதியில், பொதுமக்கள் வாய்க்கால் ஆக்ரமிப்பு செய்திருப்பதாகக் கூறி வீடுகள் மற்றும் கடைகள் என்று 31 இடங்களை இடிக்க அதிகாரிகள் குவிய, அவர்களுக்கு எதிராய் குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் குதித்தனர்.
மக்களின் போராட்டம் தீவிரமாகவும், அவர்கள் வைக்கும் வாதம் நியாயமாகவும் இருந்ததால் அதிகாரிகள் படை, ’பிறகு வருகிறோம்’ என்றபடி அங்கிருந்து நகர, அதன் பிறகே அங்கே இயல்பு நிலை திரும்பியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவ ரான மாரி நம்மிடம், "கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையா இருக்கு. எங்களைப் போன்ற ஏழைகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லிக்கொண்டு ஏற்கனவே இடிக்க வந்தார்கள். நாங்கள் ஒற்றுமையாக இருந்ததோடு, எங்கள் வீடுகளை இடித்தால் அதை ஒட்டி இருக்கும் தனியார் கட்டிடங்களையும் இடிக்கவேண்டும். இல்லாத வாய்க்காலுக்கு எப்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு வரும்? என்று போராடித் தடுத்து நிறுத்தினோம். 100 வருடத்திற்கு முன்னால் இங்கு ஒரு கால்வாய் இருந்திருக்கிறது. அதன் கரையில் இருந்து தள்ளிதான் ஆடு மாடுகளை வைத்துகொண்டு எங்கள் மூதாதையர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். வழிவழியாக இங்கே வசித்துவரும் எங்களை காலி செய்யச் சொன்னால் எப்படி?''’என்று கேள்வி எழுப்பியவர்...
மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, கட்டிடங்களை எப்படி இடிக்கலாம்? மேலும் இதை இடித்தால், இதை ஒட்டி இருக்கும் தென்னிந்திய திருச்சபை யினர் கட்டி உள்ள 200 கடைகளையும் இடிக்க வேண்டும். அது கண்மாய் நீர் நிலை இருந்த இடத் தில்தான் உள்ளது. மேலும் அரசுக்கு சொந்தமான 31 ஏக்கரையும் அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக் கிறார்கள். அதுகுறித்து அதே தென்னிந்திய திருச்சபையின் உறுப்பினர் தேவசகாயம் என்பவர் ’"நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அதை அரசுக்கு தெரியாமல் விற்றுள்ள தென்னிந் திய திருச்சபையை தீர விசாரிக்க வேண்டும். அதற்கு சி.பி.ஐ விசரணை வேண்டும்'னு வழக்கு தொடர்ந் துள்ளார். ஆனால் அவரையும் திருச்சபையினர் மிரட்டியிருக்கிறார்கள்''’என்றார் விரிவாகவே.
அந்தப் பகுதியில் வசிக்கும் நல்லதம்பியோ, "100 வருடங்களுக்கு மேல் இங்கு இருக்கோம். எல்லா இடத்திற்கும் பட்டா இருக்கு. குடிசையாக இருந்த வீடுகளுக்கு 1985-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சுவர் எழுப்பி ஓடு போட்டுக் கொடுத்தார்கள். இது ஊரணி பகுதி இல்லை. ஆனால் எங்கள் இடத்திற்கு அருகில் வாய்க்கால் இருந்தது. இப்ப அதை அழித்துவிட்டார்கள். அந்த ஓடை முழுவதும் அரசு ஹைவேஸ் ரோடு போட்டு முக்கிய சாலையாக இருக்கிறது. இந்த ஓடை போய்ச்சேரும் இடம் குச்சிகுறிச்சி ஊரணி. அது இப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலகமாக இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தை ஒட்டி 20-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டியுள்ளார்கள். எனவே அதற்கு இடைஞ்சலாக நாங்கள் இருக்கிறோம் என்று இந்த பகுதி கவுன்சிலர் ஆழ்வாரும், தென்னிந்திய திருச்சபையின் ஆவணக் காப்பாளரான ஜான்ஸனும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீர்வளத்துறை செயற்பொறியாளரான ராஜ்குமார் உத்தரவின் படி எங்கள் வீடு கடைகளை இடிக்க வந்தார்கள். நாங்கள் ஆதாரங்களைக் கேட்டுப் போராடியதால், இடிப்புப் பணி தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் வீடுகளை இடிக்காமல் விடமாட்டார்கள். அவர்களிடம் பண மும் அதிகாரவர்க்கத்தின் செல்வாக்கும் இருக்கிறது. அதேபோல் தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த சமூக சேவகரான தேவசகாயம் என்பவர், ஏழை களான எங்களுக்கு ஆதரவாக வழக்கு போட்டதால், அவரையும் திருச்சபையைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். நாங்கள் இருப்பது மிக மிகச் சிறிய இடம். அதில்தான் 100 வருடங்களாக இருக் கிறோம். மாற்று இடம் கொடுத்தாலும் செல்லத் தயாராக இருக்கிறோம்''’என்றார் பரிதவிப்பாக.
இது குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட தேவசகாயத்திடம் பேசினோம். அவர் நம்மிடம் “"எல்லாவற்றுக்கும் காரணம் தென்னிந்திய திருச்சபையினர்தான். 1912-ல் ஆங்கிலேயே அரசு, அனாதை குழந்தைகளுக்கான கல்விக்கூடம் நடத்திவந்த அமெரிக்கன் மிஷினரியின் பராமரிப்பு செலவுக்காக 31 ஏக்கரில் விவசாயம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை எடுத்துக்கொள்ளும் படி சொன்னது. இதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்கவேண்டும் என்றும் இதை நடத்த முடியவில்லை எனில், அதை மீண்டும் அரசு எடுத்துக்கொள்ளும் என்றும் அப்போது நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆங்கி லேயர் ஆட்சி போனதும் தென்னிந்திய திருச்சபை முழு தாக எல்லாவற்றை யும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது. அதோடு அந்த இடத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உதவியாளரான கொல்கத்தாவைச் சேர்ந்த அபிசேக், மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜூபாய் ஆகியோருக்கு விற்றுவிட்டனர். அதில் தற்போது ”லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்” என்று மதுரையிலேயே மிகப்பெரிய அபார்ட்மெண்ட் கட்டியுள்ளனர். மீதம் உள்ள இடத்தில் ரோட்டின் மேல் 200 கடைகளை திருச்சபையினர் கட்டியுள்ள னர். அதில் 30 கடைகளுக்கு முன் ஏழைமக்களின் குடியிருப்புகள் இருப்பதால், அவற்றை இடித்து அவர்களைத் துரத்தியடிக்க நினைக்கிறாங்க. நீதி எல்லோருக்கும் ஒன்று. இவர்களின் குடியிருப்பை இடித்துதான் ஆகவேண்டும் என்றால் திருச்சபை யினர் கட்டியுள்ள 100-க்கும் மேற்பட்ட கடை களையும் இடிக்கவேண்டும். அதற்கு அவர்கள் தயாரா? திருச்சபையினர் நிறைய முறைகேடு களைச் செய்திருக்கிறார்கள். அதனால்தான் நான் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறேன்''’என்றார் அழுத்தமாய்.
இதுகுறித்து தென்மண்டல திருச்சபையின் ஆவணக் காப்பாளர் ஜான்ஸனிடம் கேட்ட போது “புதிதாகக் கட்டிய எங்கள் திருச்சபைக்கு சொந்தமான கடைகளுக்கு முன்னால் உள்ள இடத்திற்கும், எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த இடம் எல்லாம் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறையின் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக ஆவணங்கள் சொல்வதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தார்கள். இந்த விவகாரத்தில் எங்களை எதற்கு இழுக்கிறார்கள்?''’என்றார் எரிச்சலாக.
பொதுப்பணித்துறை ஊழியர் சங்க தலைவர் வரதமுனீஸ்வரன் நம்மிடம், "கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ஒரு இடத்தில் வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றப் போன அதிகாரிகளுக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். அவர்கள் சொல்வது போல, அந்த சம்பகுளம் ஏரியாவில் குச்சிகுறிச்சி கண்மாயை மூடிவிட்டார்கள். அங்கே எல்லாம், கட்டிடங்களாக நிற்கின்றன. அடுத்து அந்த சர்ச்சுக்குப் பின்புறம் உள்ள கண்மாய் கட்டிடங்களாக இருக்கிறது. அந்த இடத்தில் இருந்த கால்வாய் இப்போது ஹைவேஸாக இருக்கிறது. இதேபோல் மதுரையில் பல இடங்களிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எல்லாம் கட்டிடங்கள் முளைத்துள்ளன. குறிப்பாக கியூன் பள்ளி மற்றும் மங்கையர்க்கரசி பள்ளி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சுகன்யா மருத்துவமனை, தேவதாஸ் மருத்துவமனை, மதுரை உயர்நீதிமன்றம், காவல் கண்காணிப்பு அலுவலகம்னு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல் கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஞாயிற்றுக் கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. தெப்பக்குளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்தத் தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெரு என்று, பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அடுத்து எழுகடல் தெப்பக்குளம். இங்கு தெப்பக்குளம் இருந்தது யாருக்குமே தெரியாது. கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக் குளம். இன்மையிலும் நன்மை தருவார் கோவில் தெப்பக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் தெப்பக்குளம், வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்னு பெரும்பாலான தெப்பக் குளங்கள் கட்டிடங்களாகிவிட்டன''’என்றார் ஆதங்கமாக.