மீண்டும் டெல்லியை நோக்கி திரள் திரளாகப் போராடக் கிளம்பியுள்ளனர் இந்திய விவசாயிகள்.
கடந்த 2020-21-ஆம் ஆண்டில் பா.ஜ.க. அரசு கொண்டுவந்த சர்ச்சைக் குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையுறுதி கோரியும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டனர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் அவர்கள் நடத்திய போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
போராட்டம் வீரியமானதால் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதோடு, பா.ஜ.க. அரசு அளித்த சில உறுதிமொழிகளின் அடிப்படையில் அப்போது போராட்டத்தைத் திரும்பப் பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றப்படாததை அடுத்து 12 அம்ச கோரிக்கைகளுடன் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் "டெல்லி சலோ' போராட்டத்துக்கு தங் கள் டிராக்டர்களுடன் கிளம்பியுள்ளனர்.
பொதுத் தேர்தல் அருகிலிருக்கும் நிலையில், மக்கள் போராட்டங்கள் எதையும் விரும்பாத மத்திய அரசு, விவசாயிகள் போராட்டங்களை முடக்க தீவிர முனைப்புக் காட்டிவருகிறது.
டெல்லியின் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களிலிருந்தும், அந்த மாநிலங்கள் வழியாகவுமே டெல்லிக்குள் நுழையமுடியுமென்பதால், இங்கிருந்து கிளம்பிவரும் 200 விவசாய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளை முடக்க, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் 114 கம்பெனி துணை ராணுவப் படையினரை நியமித்துள்ளது மோடி அரசு.
விவசாயிகள் நுழையாதபடிக்கு எல்லைகளை மூடியும், அந்தச் சாலைகளில் சிமெண்ட் தடுப்பு, செயற்கையாக சாலைகளில் அமைக்கப்பட்ட இரும்பு முட்கள், சாலையின் குறுக்கே கண்டெய்னர் வாகனங்கள், மணல் மூட்டைகள், சாலைகளின் குறுக்கே பள்ளம் என பலவற்றாலும் தடுப்பு களை உருவாக்கியது. மேலும் விவசாயிகள் போலீஸ், துணை ராணுவப்படையினராலும் தடுத்துநிறுத்தப் பட்டனர்.
ஆனால், மாதக்கணக்கில் போராட்டம் தொடர்ந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு வசதியாக டிராக்டரில் உணவுப்பொருட்கள், டீசல், ஜெனரேட்டர், முகாம்களை அமைக்கத் தேவையான பொருட்களுடன் கிளம்பியிருந்தனர் விவசாயிகள். டெல்லிலி அரியானா எல்லையான சம்பூ பகுதியில் சிமெண்ட் தடுப்புகளை விவசாயிகள் தங்களது ட்ராக்டர் மூலம் அகற்றியதால் காவல் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அரியானா போலீசார் துப்பாக்கி மூலமும், ட்ரோன்கள் மூலமும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் முன்னேறிச்சென்ற விவசாயிகள் தடுமாறினர். சில இடங்களில் ஈரச்சாக்குகளில் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பிடித்து போலீசார் இருக்குமிடங்களை நோக்கி வீசிய காட்சிகளையும் காணமுடிந்தது. இதனால் இப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. சில இடங்களில் அரியானா போலீசார், பஞ்சாப் பகுதிகளிலும் கண்ணீர்ப் புகைக்குண்டு களை வீசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
விவசாயிகளின் மீது நீரைப் பாய்ச்சி அவர்களைத் தடுத்துநிறுத்த முயன்றது உத்தரப்பிரதேச அரசு. கடந்த முறை போராட்டத்தின் முக்கியக் களங்களாகத் திகழ்ந்த சிங்கு, திக்ரி எல்லைகளில் விவசாயிகள் வலுக்கட்டாயமாகத் தடுக்கப்பட்டனர். தடையை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைதுசெய்யப் பட்டனர். அதேசமயம், போராட்டக்காரர்களை பவானா மைதானத்தில் கைதுசெய்து சிறைவைக்க, ஒன்றிய அரசின் அமைச்சர் கைலாஷ் கெலாட் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், கெஜ்ரிவாலோ, “"விவசாயிகளின் போராட்டத்தை நியாயமானதாகக் கருதுகிறோம். இந்திய அரசியல் சாசனப்படி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் போராட உரிமை உண்டு. போராட்டம் செய்யும் விவசாயிகளைக் கைது செய்வது தவறான நடவடிக்கையாக அமைந்துவிடும். எனவே ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்''’என்று சொல்லி நிராகரித்திருந்தார்.
போராட்டத்துக்கு முன்பே விவசாய சங்கங் கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. அது தோல்வியடைந்த நிலையில் விவசாயிகள் போராட் டத்துக்கு ஆயத்தமாகியிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த் தைக்கு விவசாயிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அரியானா எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை வீசி விரட்டப்பட்டதை, இந்திய வரலாற்றின் கறுப்பு நாள் என விமர்சித்த விவசாய சங்கத் தலைவர்கள், "விவசாயிகளை மோடி அரசு தாக்கிய விதம் வெட்கக்கேடானது. அரியானா போலீசார் விவசாயிகள் மீது எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். இருந்தபோதும் டெல்லியை நோக்கி நாங்கள் மீண்டும் முன்னேறுவோம்''’என்றார்.
அதேசமயம் விவசாயிகளின் போராட்டம் குறித்து சட்டீஸ்கரில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, "சுவாமி நாதனுக்கு பாரத ரத்னா கொடுத்துள்ள பா.ஜ.க. அரசு, சுவாமிநாதனின் பரிந்துரைப்படி விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தரமறுக்கிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் வழங்கும்''’என்றார்.
பா.ஜ.க.வுக்கு நன்கொடையளித்த கார்ப்ப ரேட்டுகளின் 14 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யும்போது, பாரதத்துக்கே உணவு வழங்கும் விவசாயிகளின் 1 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்யமுடியாதா என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
போராடும் விவசாயிகள் நாடாளுமன்றத்தின் முன்பு திரண்டுவிடக்கூடாது என்பதற்காக, அதனருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டன.
பிப்ரவரி 14 அன்றும் விவசாயிகளின் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், சில இடங்களின் ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. விவசாயிகள் மீதான பிரதான தாக்குதலாக கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு இருப்பதால், விவசாயிகளும் அதைத் தடுக்க தனிப்பட்ட வழிகளைக் கண்டறிந்தனர். வீசப்பட்ட கண்ணீர்ப் புகைக்குண்டு மீது ஈரச்சாக்கைப் போர்த்துவது, பூச்சிக்கொல்லி தெளிக்கும் சாதனத்தில் நீரை நிரப்பி புகைக்குண்டுகள் மீது பீய்ச்சி அதைச் செயலிழக்க வைப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டுகளுடன் வரும் ட்ரோன்களுக்குக் குறுக்காக பட்டங்களைப் பறக்கவிட்டு ட்ரோன்களை முடக்குவது என பல புதிய யுக்திகளைப் பயன்படுத்தினர். கணக்கு வழக்கின்றி அள்ளிவீசப்படும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை அநாயசமாக விவசாயிகள் சமாளித்துவருகின்றனர். போலீஸ் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம், விவசாயிகள் சமூக ஊடகங்கள் வழி தொடர்புகொள்வதையும், ஆட்களைத் திரட்டுவதைத் தவிர்க்கவும் பஞ்சாப்பின் பல பகுதி களில் இணையத் தொடர்பை நிறுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி உயிர்ப்பான செய்திகளைத் தந்ததற்காக சந்தீப் சிங், மந்தீப் புனியா உள்ளிட்ட சில பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
விவசாயிகளை அச்சுறுத்த, மனிதர்களின் செவித்திறனை முடக்கும் அல்ட்ரா சோனிக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பது பலத்த எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது.
என்ன செய்யக் காத்திருக்கிறது மோடி அரசு?