ரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 200 கோடி, 300 கோடி செலவழிப்பதாகச் சொல்லி கட்சியின் தலைமை முதல் நிர்வாகிகள் வரை எல்லோருக்கும் அல்வா கொடுத்ததால் இந்த தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் மாஜி தங்கமணி, "நேற்றுவரை அட்ரஸே இல்லாத எந்த நபருக்கோ நான் செலவழிக்க வேண்டியிருக்கே'' என அவரது தொகுதி முழுக்க ஓட்டுக்கு 500 என சொந்தக் காசைக் கொடுத்து நொந்துபோயி ருக்கிறார். அதேபோல் தாராபுரம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகளில் மா.செ. மகேந்திரனும், பொள்ளாச்சி ஜெயராமனும் வேலுமணியிடம் பணம் பெற்று ஓட்டுக்கு 200 கொடுத்தார்கள். ஆனால், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரான மாஜி கே.வி.ராம லிங்கமோ, "இவருக்கு நான் ஏன் செல வழிக்க வேண்டும்? கொடுக்கமாட் டேன்'' என ஒதுங்கிக்கொள்ள, இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தரப்பில் பணப்பட்டுவாடா இன்றி ர.ர.க்கள் நொந்து போனார்கள்! ஆற்றல் அசோக்குமாரோ பிரச்சாரம் முடிந்த அன்று மாலையே எஸ்கேப்பாகிவிட்டார். அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரைத் தொடர்புகொண்டால், தொடர்பு எல்லைக்கப்பால் இருப்பதாகப் பதில் வந்திருக்கிறது. அனேகமாக, வாக்கு எண்ணிக்கை முடிந்ததுமே அ.தி.மு.க.வி-ருந்து அவர் விலக்கப்படுவதாக எடப்பாடியிடமிருந்து செய்தி வரக்கூடும் என்கிறார்கள்!

vv

ரோடு தொகுதியில் வாக்காளர்களுக்கு வைட்டமின் "ப', தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு 500 எனத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே பட்டுவாடா முடிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளி லும், ஏற்கெனவே உள்ளூர் தி.மு.க.வினரால் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகி களும் முன்னின்று, எந்தவிதமான குளறுபடி யும் இல்லாமல் கனகச்சிதமாக உடன் பிறப்புகள் மற்றும் ஆதரவாளர்களின் வாக்குகளைத் தக்க வைத்திருக்கிறார்கள்.

சேலம் பாராளுமன்றத் தொகுதியில், ஓமலூர், வீரபாண்டி, சேலம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு 250 ரூபாயும், எடப்பாடி பழனிசாமியின் சொந்த சட்டமன்றத் தொகுதியான இடைப்பாடியில் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாயும், அவருடைய சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் 1000 ரூபாயும் இலை கட்சியினர் பட்டுவாடா செய்துள்ளனர். தி.மு.க. தரப்பில் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, தொகுதி முழுக்க வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் கரன்சியை கச்சிதமாகப் பாய்ச்சியுள்ளார். வலுவான கூட்டணி, ஆளுங்கட்சி பலம் என்று இருந்தும் தி.மு.க. தரப்பில் 500 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள், "நாமும் தி.மு.க.வைப் போல 500 ரூபாய் கொடுத்தால்தான் சொந்த மண்ணில் கவுரவமான வாக்குகளைப் பெற முடியும்'' என்று கட்சி நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. கூட்டணியிலுள்ள பா.ம.க., சேலம் தொகுதியில் களத்திலிருந்தே காணாமல் போய்விட்டதாகப் பேசப்படுகிறது.

Advertisment

vv

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் ஓட்டுக்கு பணம் தருவதில்லை என முடிவெடுக்க, தி.மு.க. தரப்பிலும் பணம் தருவதில்லையென தேர்தல் பணிக்குழுவினர் முடிவெடுத் தனர். கடுமையான போட்டியுள்ள இத்தொகுதியில் இப்படி கடைசி நேரத்தில் ஓட்டுக்கு பணம் தரவில்லை எனச் சொன்னது தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தனை அதிர்ச்சி யடையச் செய்தது. மற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் தந்துவிட்டு திருவண்ணாமலை, ஆரணியில் மட்டும் பணம் தரவில்லையென்றால் மக்கள் கடுப்பாகிவிடுவார்கள் என நிர்வாகிகள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் சொல்லியுள்ளனர். அதற்கு அமைச்சரோ, "வருமானவரித்துறை தொகுதியில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பணம் சிக்கினால் தேர்தலையே நிறுத்தலாமென்று திட்டமிடுகிறது. அதனால் தேர்தல் முடிந்தபின் ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் தருவதாகச் சொல்லி டோக்கன் தரலாம் என்று சொன்னதில் நிர்வாகிகள் அதிருப்தியானார்கள். டோக்கனை மக்களிடம் கொடுத்த போது, "ஓட்டு போட்ட பிறகு நீங்க பணம் தருவீங்கன்னு எப்படி நம்புவது?'' என எதிர்கேள்வி கேட்டதால், டோக்கன் காரணமாக தி.மு.க.வுக்கு வாக்கு சதவீதம் குறையுமோவென்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் உ.பி.க்கள்!

க்கத்து தொகுதிகளான ராமநாதபுரத்திலும், தூத்துக்குடியிலும் ஓட்டுக்கு ரூ.300, ரூ.500, ரூ.1000 என வேட்பாளர்கள் தரப்பு தாராளம் காட்டிய நிலையில், விருதுநகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவே நடக்காததால், "ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் முகத்தில் தேர்தல் நாளில் எப்படி விழிப்போம்? ஓட்டுக்கு முன்னூறாவது கொடுப்பதுதான் நல்லது''’என்று நகரம், ஒன்றியம், பேரூர் பகுதி பொறுப்பாளர் கள் மன்றாடிக் கேட்டுப்பார்த்தார்கள். “"இப்ப ரொம்ப கெடுபிடியா இருக்கு. மாணிக்கம் தாகூருக்காக போன தடவை நாம கொடுக்கலியா. அதெல்லாம் ஜெயிச்சுருவோம். கொடுக்குற பணத்துல நம்மாளுங்க பாதிக்குப் பாதி அமுக் கிட்டா விழற ஓட்டும் விழாமப் போயிரும். இந்த நேரத்துல வாக்காளர் களுக்கு பணம் ஒழுங்கா போய்ச் சேராது. முரசுக்காரங்களும் பணம் கொடுக்கலைல்ல. தாமரைக்கும் பட்டுவாடா நடக்கல. அப்புறம் எதுக்கு நச்சரிக்கிறீங்க?''’எனக்கூறி வாயை அடைத்துவிட்டார்கள், மேலிடத்து நிர்வாகிகள். அதேநேரத்தில், இறுதிக்கட்ட தேர்தல் வேலை பார்க்கும் செலவுக்கான தொகையைத் தருவதில் வேகம் காட்டியது ஆளுங்கட்சி. "நல்லவேளை கை சின்னத்துக்காரங்க கொடுக்கல. நாமளும் பணத்த இறைக்கவேண்டிய அவசியமில்லாமப் போச்சு''’என்று பெருமூச்சுவிட்டது முரசுத் தரப்பு.

Advertisment

vv

சிவகாசியில், வடநாட்டுத் தொடர்புடைய பட்டாசு உரிமையாளர்கள் பலரும் "மீண்டும் மோடி'’என்ற நினைப்பில், ராதிகா சரத்குமாருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து "பட்டாசுத் தொழிலாளர்கள் ஓட்டு உங்களுக்குத்தான். எங்க தொழிலாளர்களை நாங்களே கவனித்துக்கொள்கிறோம்''’என்று உறுதியளித்திருக்கிறார்கள். இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, "சிவகாசில எப்படியும் பட்டாசுத் தொழிலாளர்களோட ஓட்டு அம்பதாயிரத்துக்கும் மேல இருக்கும். ராதிகாவும், சரத்குமாரும் சில குறிப்பிட்ட கிராமப் பகுதிகளிலுள்ள பட்டாசு ஆலைகளுக்குத்தான் போனாங்க. பெரிய ஃபேக்டரி முதலாளிகளுக்குத்தான் மோடி திரும்பவும் வந்திருவாரோங்கிற பயம் இருக்கு. மற்றபடி, பட்டாசு முதலாளிகள் தொழிலாளிகள் கிட்ட இந்தக் கட்சிக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லவும் மாட் டாங்க. சொன்னா, தொழிலாளிகள் கேட்கவும் மாட்டாங்க. சினிமாக்காரங்களான ராதிகாவும் சரத்குமாரும் தொகுதிக்குள்ள ரீல் சுத்தினத, பட்டாசுத் தொழிலாளர்கள் யாரும் நம்பத் தயாரில்ல. உண்மையில், பட்டாசு முதலாளிகள் ராதிகா சரத்குமார்கிட்டயே நடிச்சிருக்காங்க! ஏன்னா, மோடியோட பத்து வருஷ ஆட்சியில தான பட்டாசுத் தொழில் படாதபாடு பட்டுக்கிட்டிருக்கு''’என்றார்.

நெல்லையில் காங்கிரஸ், தாமரை தரப்பு இரண்டுமே கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 300 என்ற லெவ லில் கரன்சிப் பாசனத்தை நடத்தியது. பாளையின் 50-வது வார்டு பீடி காலனியில் பட்டுவாடா செய்வதற்காக காங்கிரஸ் தரப்பு கொடுத்த பணத்தை நிர்வாகி பட்டுவாடா செய்யாமல் கட்டிங் செய்துவிட, இதையறிந்த பண்ணையார் தரப்பு அந்தப் பகுதி மக்களை தங்கள் பக்கம் திருப்புவதற்காக ஓட்டுக்கு 500 தரும் தீவிரத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் 35 “எல்“ தொகையை ஏப் 16 அன்று, கடவுள் பெயர் கொண்ட அந்த இளைஞனிடம் நாங்குநேரிப் பகுதிக்குக் அந்தியில் கொடுத்தனுப்பியிருக்கிறார். டூவீலரில் கொண்டுவந்த அந்த இளைஞனும், சாலையில் வாகைகுளம் அருகே வரும்போது தன்னை பைக்குகளில் வந்து வழிமறித்தவர்கள், தான் வைத்திருந்த மொத்தத் தொகையையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாகக் கொடுத்தனுப்பியவரிடம் தெரிவிக்க, அவரோ அதிர்ச்சியாகி விட்டாராம். தொடர்ந்து வழிப்பறி சம்பவத்தைப் பார்ட்டி போலீசிலும் புகார் செய்துவிட.. சம்பவ இடம் வந்து விசாரணை நடத்திய போலீசுக்கு கொள்ளைக்கான சிம்டமே இல்லாமலிருந்தது தெரியவந்திருக்கிறது. இறுதியாக போலீஸ் விசாரிக்கவேண்டிய பாணியில் விசாரித்தபோதுதான், பணம் கொண்டுவந்த புள்ளியே தனது சகாக்களை வரவழைத்து மொத்தப் பணத்தையும் கொள்ளையடிக்க, டிராமா செட் செய்தது தெரிய வந்திருக்கிறதாம்.

நாகை நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் சுர்ஜித் சங்கர்தொடக்கத்தில் வேட் பாளராக அறிவிக்கப்பட்டதும், தான் எம்.பி. ஆகிவிட்டதாகவே நினைத்து வாக்குறுதிகளையும், பணத்தையும் அள்ளியிறைத்தார் வேட்பாளர் சுர்ஜித்சங்கர். ஆனால் கடைசி நேரத்தில். “"பூத் செலவுக்கே என்கிட்ட பணமில்ல, எப்படி நான் ஓட்டுக்கு பணம் கொடுக்குறது''’என வேட்பாளர் கைவிரித்துவிட்டார். "என்னப்பா பணம் இருக்கு, எல்லா செலவையும் நானே செய்திடுறேன்னு சொன்ன, கடைசில கை விரிக்கிறியே'' என ஓ.எஸ்.மணியன் வேட்பாளர் சுர்ஜித்சங்கரிடம் கேட்க, “"இருந்த பணமெல்லாம் செலவழிச் சுட்டேன். சொத்துக்களா இருக்கிறதை வித்து பணம் புரட்டமுடியல'' என கூறியிருக்கிறார். “ஏதாவது டாக்கு மெண்ட் கொண்டுவாங்க, பணம் புரட்டிடுவோம் என சென்னையிலுள்ள சொத்துக் களின் டாக்குமெண்டை வாங்கி பஸ் அதிபர் ஒருவ ரிடம் கொடுத்து மூன்று கோடி ரூபாய் வாங்கி, அதில் ஒன்றரைக் கோடியை தன் பங்கிற்கு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளி லுள்ள 689 பூத்துகளுக்கு கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் தொகுதிகளில் உள்ள 862 பூத்துகளுக்கும் காமராஜிடம் கொடுக்கச் சொல்லியிருக் கிறார். அ.தி.மு.க. நிர்வாகி களோ, "இரண்டு முன்னாள் அமைச்சர்களுமே கோடிக்கணக்கில் சொத்து வாங்கி பினாமி பெயரில் குவித்து வைத்திருக்கின்றனர். இரண்டுபேரும் தலா ஐந்துகோடி செலவு செய்தாலே இந்த தொகுதியை கைப்பற்ற முடியும். ஆனால் ஈகோவால் தொகுதியை தாரைவார்க்குறாங்க'' என்கிறார்கள்.

நெல்லை தொகுதியின் சிறுபான்மையினர் சமூக ஏரியாவான பாளையின் மத்திய சிறைச்சாலை சமீபமுள்ள காது கேளாதோர் பள்ளி பூத், அடுத்து குலவணிகபுரம் ஊட்டச்சத்து மையம் பூத், மேலப் பாளையம் குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி பூத், மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி பூத் இந்த நான்கு பூத்களிலும் வாக்குப் பதிவு ஆரம்பமான காலை முதலே தி.மு.க.வினரில் தொகுதி எம்.எல்.ஏ. வகாப் தரப்பினர், மா.செ. தரப்பு கட்சியினர் யாருமே சிறுபான்மையினர் வாக்கு தங்களுக்குத்தான் என்ற நம்பிக்கையில் தலைகாட்டவில்லையாம். இதனால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நயினாரின் பா.ஜ.க. தரப்பினர் தடையின்றி தாமரைக்கு வாக்கு சேகரித்துள்ளனராம்.

யிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காருகுடி மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த மக்கள், வாக்களிக்க மாட்டோம் என அவரவர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். இதையறிந்த அதிகாரிகள் வயற்காட்டுக்கு சென்றவர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த கிராமத்துப் பெண்களோ, "நாங்க ஓட்டு போட்டு என்னாகப்போகுது, எங்களை மனிதர்களாகவே அதிகாரிகள் நினைக்கிறது இல்ல. இருபது வருடமா இருண்டுகிடக்கிற தெருவுக்கு விளக்கு கேட்கிறோம், சாலைகளை போட சொல்லி மாவட்ட ஆட்சியர்வரை கெஞ்சிட்டோம்''’என பிடிவாதம் பிடித்தனர். இறுதியில் சீர்காழி மதுவிலக்கு டி.எஸ்.பி. லாமேக்கோ, "உங்க கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு நிச்சயமா நான் கொண்டு போறேன். உங்க கடமைய நீங்க செய்யுங்க''’என உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டு வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

ள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செந்தாரப் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு, 1வது வார்டு பகுதியை சேர்ந்த ரெங்கசாமியின் மனைவி சின்னப்பொண்ணு (வயது 77) என்ற மூதாட்டியை, அவரது உறவினர்கள் தள்ளுவண்டியில் அமரவைத்து வாக்களிக்க அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, வாக்களிப்பதற்காக மூதாட்டியின் விர லில் மை வைத்துவிட்டு வாக்குப்பதிவு செய்யுமிடத்திற்கு அழைத்துச் செல்லும்போது மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து வாக்குச்சாவடி மையத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமலிருந்ததும், இந்நிலையில் கடும் வெயிலில் வாக்களிக்க அழைத்து வந்தநிலையில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. இதேபோல், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவர் வாக்களிக்க வந்தபோது உயிரிழந்தார்.

-ராம்கி, ஜீவா, சிவன், ராஜா, நாகேந்திரன், செல்வகுமார், இளையராஜா