"பொங்கலோ பொங்கல் என்று தமிழர் திருநாளைக் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கலன்று, ஊசிபோடும் மருத்துவர்களைக் கோசம் போடவைக்காதே! தையல் போடும் மருத்துவர்களை மறியல் செய்ய வைக்காதே!" என்ற கோசம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணி யாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதைத் கண்டித்து, சுமார் 75க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், 14-ந் தேதி பொங்கலன்று திடீர் போ ராட்டத்தில் இறங்கினர்.
போராட் டத்தில் தீவிரமாக ஈடு பட்ட பயிற்சி மருத்துவர் சக்திபிரியா கூறுகையில், "இங்கு பயிற்சி மருத்துவர்கள் 149 பேர் பணியாற்றி வருகிறோம். கொரோனா வார்டில் தொடர்ந்து பணியாற்றியதில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு, கடந்த 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாதாந்திர உதவித்தொகையாக ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால் இங்கோ, கடந்த 25 வருடத்திற்கு முன் வழங்கிய ரூ.3 ஆயிரத் தைத்தான் இன்னும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதையும் கடந்த 8 மாதங்களாக வழங்கவில்லை'' என்றார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷிடம் கேட்டபோது, "தற்போது போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்து வர்கள், சுயநிதி அடிப்படையில்தான் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகக் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். மாணவர்கள் கல்விக் கட்டணத்தைக் குறைக்கப் போராடியதால் அரசு கல்வி கட்டணத்தைக் குறைத்தது. எனவே ஊக்கத்தொகை இல்லை என்று ஆணையிட்டுள் ளது. இருந்தாலும் இவர்களின் நிலைமையை எடுத்துக்கூறி ஊக்கதொகை கிடைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். வரும் 2022-23ம் கல்வி ஆண்டு முதல் வரும் மருத்துவ மாணவர்களுக்குத் தான் அரசின் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும். பயிற்சி மருத்துவர்கள், கல்லூரியில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று தெளிவாக எடுத்துக்கூறியும் புரியாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மருத்துவக் கல்லூரிக்கும், மருத்துவர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும்'' என்றார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வெறும் ஆணையை மட்டும் வெளியிட்டு விட்டு நிதி ஒதுக்காமல் சென்றதால், முழுவதுமாக அரசுக் கல்லூரி யாக மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அனைத் தும் சரிசெய்யப்பட்டு, போராட்டத்திலுள்ள பயிற்சி மருத்துவர்களின் துயர் களையப்பட வேண்டும்.
-காளிதாஸ்