முன்னர் சிவகாசி தொகுதியாக இருந்து மறுசீரமைப்பிற்குப் பிறகு விருதுநகர் தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தப் பாராளுமன்றத் தொகுதியில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் விருதுநகர் மாவட்டத்திலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்திலும் உள்ளன. இத்தொகுதியின் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
சிவகங்கையைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்தவர். அவருடைய அண்ணன் மகன்தான் மாணிக்கம் தாகூர். புதுமுகமாக 2009 தேர்தலில் இத்தொகுதி யில் வைகோலிவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் இந்திய அளவில் கவனம் பெற்றார். 2019-ல் இரண்டாவது தடவை இவரை எம்.பி. ஆக்கியது இத்தொகுதி. ராகுல் காந்தியின் நண்பர் என்பதும், டெல்லி லாபியும் இவருடைய அடையாளமாக உள்ளன. கட்சியில் ஆக்டிவாகச் செயல்படக்கூடியவர் என்பதால், தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் என்ற கூடுதல் தகுதியை இவருக்கு அளித்தது கட்சி மேலிடம்.
தொகுதி மக்களின் குறைகளை மனுக்கள் வாயிலாகப் பெற்று தீர்வு காண்பதற்காக, விருதுநகரிலும் திருமங்கலத்திலும் அலுவலகம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார் மாணிக்கம் தாகூர். ஆனாலும், எதிர்க்கட்சி எம்.பி. என்பதால், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவராகவும், தொடர்ந்து கோரிக்கை வைப்பவராகவும் மட்டுமே இருக்கிறார்.
விருதுநகர் -மானாமதுரை அகல ரயில்பாதை, விருதுநகரிலும் திருப்பரங்குன்றத்திலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்றவை இவரது சாதனையாகச் சொல்லப்பட்டாலும், ‘அனைத்துத் தரப்பு பட்டாசு உற்பத்தியாளர்களும் புதிய தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ள சிவகாசி யில் பட்டாசுப் பூங்கா அமைக்கவில்லையே? மல்லிகைப்பூ உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு வரும் திருப்பரங்குன்றத்தில் மல்லிகைப்பூ சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படவில்லையே? திருப்பரங் குன்றம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தோப்பூருக்கு இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லையே?’ என விருதுநகர் மக்களவைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் தொடர்ந்து கேள்விகள் எழுப்புகின்றன.
மாணிக்கம் தாகூர் எம்.பி. தரப்பிலோ, "மாணவ- மாணவியருக்கு உயர்கல்வி பயில வட்டார அளவில் சிறப்பு கல்விக் கடன் முகாம்களை நடத்தியிருக்கிறோம். ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை கிடைக்கச் செய்திருக்கிறோம். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். 300-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மருத்துவ நிவாரணத் திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி வரை மருத்துவ நிதி கிடைக்கச் செய்திருக்கிறோம். தொகுதி மேம்பாட்டு நிதியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியிருக்கிறோம்.
சிவகாசி மற்றும் சாத்தூர் தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசுத் தொழிலை, சுற்றுச்சூழலைக் காரணம்காட்டி ஒன்றிய அரசு முடக்கப் பார்த்தபோது, பாராளுமன்றத்தில் தொடர்ந்து கவன ஈர்ப்பு செய்து, பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். பசுமைப் பட்டாசுத் தொழில் உரிமம் பெற முன்பெல்லாம் வெளிமாநிலத்திலுள்ள நாக்பூர் செல்லவேண்டும். அதிகாரிகளிடம் வலியுறுத்தி காரைக்குடியி லேயே உரிமம் பெறுவதற்கு வழிவகை செய்திருக்கிறோம். கடந்த 3 ஆண்டு களாகத் தொடர்ந்து போராடிய தாலேயே, கொல்லம் ரயில் தற்போது சிவகாசியில் நின்று செல்கிறது.
சிவகாசி -சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் வருவதற்கு வழிவகை செய்திருக்கிறோம். இளைஞர் கள் நலன் கருதி வேலை வாய்ப்பு முகாம்களை நடத்திவருகிறோம். கிராமம் கிராமமாகச் சென்று 100 நாள் வேலைத் திட்டத்தை ஆய்வு செய்து வேலை மற்றும் சம்பளம் பெறுவதில் உள்ள குறை பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக தீர்வுகாணச் செய்திருக்கிறோம்''’என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி முழுவதும் சுற்றிவந்து, "என்ன செய்தார் எம்.பி?''’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.
தொகுதி சுற்றுப்பயண விபரம் எனத் தேதியிட்டு ஒவ்வொரு தொகுதி யாகச் செல்வதை மாணிக்கம் தாகூர் வழக்கமாகக் கொண்டிருந்தாலும் சாத்தூரைச் சேர்ந்த சுப்புராஜ், "கண்டா வரச்சொல்லுங்க...''’என்று பாட்டாவே பாடிவிட்டு, ஓட்டு கேட்டு வந்தப்ப பார்த்ததுதான்..” என்று குறைப்பட்டுக்கொண்டார்.
சிவகாசியைச் சேர்ந்த வீரபுத்திரன், "எம்.பி.யா? எம்.எல்.ஏ.வா? இதயெல்லாம் யாரு சரிபண்ணுவாங்கன்னு தெரியல. சிவகாசில ஒவ்வொரு தெப்பமா காணாமப் போகுது. ஊருக்கு நடுவுல நாயக்கர் தெப்பம்னு ஒண்ணு இருந்துச்சு. டவுண்ல உள்ள வீடுகளுக்கு நீராதாரமா இருந்துச்சு. அதை அப்படியே மூடிட்டு, ஆளாளுக்கு கடைகட்டி வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க. பெல் ஓட்டலுக்கு எதிர்த்தாப்ல ஒரு தெப்பம். அதையும் மூடிட்டாங்க. மக்களுக்கு நல்லது பண்ணுவாங்க. ஊருக்கு பாதுகாப்பா இருப்பாங்கன்னு நம்பித்தானே ஓட்டு போட்டோம். ஆனா.. தெப்பத்தை விழுங்கி ஏப்பம் விடறவங்கள வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் என் னைக்கு விமோசனம் பிறக்கப் போகுதோ?''’என்று வேதனைப்பட்டார்.
தாயில்பட்டியைச் சேர்ந்த அய்யனார், "சாட்சியாபுரத்துல ரயில்வே மேம்பாலம் கொண்டு வருவோம்னு தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி தர்றாங்க. அந்தா வரும்.. இந்தா வரும்னு சொல்லுறாங்க. ஆனா.. மேம்பாலம் வந்தபாடில்ல. ரயில் வர்றப்ப கேட் போட்டு, இங்கே ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்ல ஆயிரக் கணக்கான மக்கள் டூவீலர்லயும், கார்லயும், பஸ்லயும் நெருக்கடில நிக்கிறத கண்கொண்டு பார்க்க முடியாது. இந்த எம்.பி. ஒருவாட்டி யாவது இங்க நின்னு பார்த்தாத்தானே தெரியும் மக்கள் படற அவஸ்தைய? இங்க மட்டு மில்ல.. சாத்தூர்லயும், திருமங்கலத்துலயும் ரயில்வே மேம்பாலம் வராம மக்கள் ரொம்ப சிரமப்படறாங்க. ஆனா.. பெரிசு பெரிசா எம்.பி. படத்த போட்டு போஸ்டர் ஒட்டுறாங்க. எல்லாமே அரசியலா இருக்கு''’என்றார் எரிச்சலுடன்.
பூலாவூரணியைச் சேர்ந்த ராஜேஷ், "நாங்கள்லாம் பட்டியலினம். எங்களுக்குள்ள ஏழு உட்பிரிவு இருக்கு. எல்லா பிரிவையும் ஒண்ணா சேர்த்து தேவேந்திரகுல வேளாளர்ங்கிற ஒரே பேர்ல கொண்டுவரணும்னு ஸ்டெப் எடுத்தோம். சட்ட திருத்த மசோதா மக்களவைல தாக்கல் பண்ணுற நேரத்துல.. நாடாளுமன்றத்துல நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துல, எங்களோட முயற்சிக்கு ஒப்புதல் தராம வெளிநடப்பு பண்ணுனாரு மாணிக்கம் தாகூர். இதை அரசியல் காரணம்னு சொல்லமுடியாது. அடுத்து தேர்தல் வருதுல்ல. அதான்.. கடந்த சில மாதங்களா தொகுதியைச் சுற்றிச்சுற்றி வர்றாரு எம்.பி.''’என்றார்.
விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் பேசினோம். "மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சுத்தான் தேர்தல்ல தொடர்ந்து போட்டியிடறேன். மக்களும் நம்பி வாக்களித்து ரெண்டு தடவை எம்.பி. ஆக்கிருக்காங்க. ஆனா.. மோடி அரசாங்கம் ஒரு மாற்றான்தாய் மனப்பான்மைல செயல்படுது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வருது. தொகுதி பிரச்சனைய சொன்னா.. காதுகொடுத்து கேட்கிறது இல்ல. தொகுதி மக்களோட முக்கிய பிரச்சனைளை எடுத்துட்டுப் போனா. ரொம்ப சாதாரணமா நினைக்கிறாங்க. அதனால.. தொகுதிக்கு எவ்வளவோ செய்யணும்னு நினைக்கிறத செய்யமுடியாம பண்ணிடறாங்க. தொகுதியின் தேவைகளை முன்னிறுத்தி பாராளுமன்றத்துல வெறும் குரல் மட்டும்தான் கொடுக்கமுடியுது. இது ரொம்ப வேதனையா இருக்கு. இந்த நிலைமை மாறணும்னா.. இதற்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கணும்னா.. டெல்லில ஒரு நல்லாட்சி அமையணும். தொகுதியைப் பற்றிய சிந்தனைதான் எப்பவும் என் மனசுல ஓடிட்டிருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு என் தொகுதியில் மக்கள் பணியாற்றிட்டு வர்றேன்'' என்றார்.
கூலித் தொழிலாளர்களான ஆவுடைத்தாய், பாண்டியம்மாள், சின்னம்மாள், மாரியம்மாள், கீதா போன்றவர்களிடம், "எம்.பி. மாணிக்கம் தாகூர் எப்படி?''’என்று கேட்டோம்.
"அது யாரு?''’என்று திருப்பிக் கேட்டார்கள்.
கிராமப்புற பெண் வாக்காளர்கள் பலரும், "எம்.பி. என்றால் யார்? எம்.எல்.ஏ. என்றால் யார்? அவர்களது பணி என்ன? நாம்தானே இவர்களைத் தேர்ந்தெடுத் தோம்?'’என்பதை அறியாதவர்களாக உள்ளனர்.