தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தமிழக அரசு எப்படி கையாண்டு வருகிறது என்பதை துறைவாரியாக அறிந்து கொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்புவதால் அதற்கு ஏற்பாடு செய்யவும் என தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சமீபத்தில் கட்டளை பிறப்பித்திருக்கிறது ஆளுநர் மாளிகை.
இதனையடுத்து, துறைகளின் செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள கவர்னர் விரும்புவதால் பவர் பயிண்ட் பிரசண்டேஷன் மூலம் அவைகளை விளக்க வேண்டும். அதற்கான தேதி, நேரம் விரைவில் தெரிவிக்கப்படும் என அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் உத்தரவிட்டார் இறையன்பு.
கவர்னர் மாளிகையின் கட்டளைகளுக் கேற்ப தலைமைச் செயலாளரின் இத்தகைய உத்தரவு கோட்டையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆட்சியின் நிர்வாக அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக தனி ராஜ்ஜி யத்தை நடத்த அவர் திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
கவர்னரின் இத்தகைய அதிகார தலையீடுகள், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழக அமைச்சரவையின் ஆலோசனைப்படியும் அறிவுரையின்படியும்தான் ஆளுநர் செயல்பட முடியும். துறைகளின் செயல் பாடுகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. உரிமையும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்கும் முயற்சி இது''’என்கிறார் காட்டமாக. அதேபோல, விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா வளவனும் கவர்னரின் நிர்வாக தலையீட்டை கண்டித்திருக்கிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினோ இதில் எந்த கருத்தையும் நேரடியாக வெளிப்படுத்த வில்லை. மாறாக, தலை மைச் செயலா ளர் இறையன்பு மூலம், "அலுவல் ரீதியாக துறை களின் செயலாளர் களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற் றுள்ள ஆளுநருக்கு அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களைத் தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவது அரசு நிர்வாகத்தில் வழக்கமானது தான். இதனை அரசியலாக்குவது சரி அல்ல! அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர் களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும்' என்று விளக்கமளிக்க வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
"மத்திய அரசின் தூண்டுதலில் தி.மு.க. அரசை சீண்டிப்பார்க்கிறார் கவர்னர். அதனை நாங்கள் கண்டிப்பது எப்படி அரசியலாகும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
இதே கேள்வியை முன்னிறுத்தும் "நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,’"ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் முகவராக செயல்படும் ஆளுநரின் அத்து மீறல்களுக்கு இது வழிவகுத்துவிடும். தி.மு.க. அரசின் இத்தகைய செயல் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இதற்கு இறையன்பு போன்றவர்களும் துணைபோவது ஏமாற்ற மளிக்கிறது. ஏழு தமிழர் விடுதலையில் மாநில அமைச்சரவை இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் தர மறுத்து தனது கடமையைச் செய்யத் தவறும் ஆளுநர், அரசு நிர்வாகத்தை ஆய்வு செய்வதாகச் சொல்வது கேலிக் கூத்து. அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநரின் ஆய்வுகளுக்கெதிராகப் போராடிய தி.மு.க., ஆளுநரின் முடிவுக்கு அடிபணிவது மிகப்பெரும் சனநாயகத் துரோகமாகும்''’என்று சீறுகிறார் சீமான்.
கவர்னரின் அதிகார மீறலை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ரசிக்கவில்லை. அவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "ராஜ்பவனிலிருந்து அரசுக்கு இப்படி ஒரு கடிதம் வந்தபோதே, "துறையின் செயலாளர்களிடம் நேரடியாக ஆலோசிக்கவோ, ஆய்வு நடத்தவோ உங்களுக்கு அதிகாரமில்லை. துறைரீதியாக நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் அதனை உங்களுக்கு அரசு அனுப்பித்தரும்' என அரசு தரப்பிலிருந்து ராஜ்பவனுக்கு பதிலடி தந்திருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் கவர்னருக்கும் மத்திய மோடி அரசுக்கும் மம்தா தரும் பதிலடிகளை தி.மு.க. அரசு கவனிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்க வேண்டும்.
கலைஞர் தலைமையிலான 2006-2011 தி.மு.க. ஆட்சியின்போது, ஊட்டி வெலிங்டனில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியளிக்க இந்திய ராணுவம் சென்ற வாகனத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் தாக்கிய சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்ய கலைஞர் அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மாலதி ஐ.ஏ.எஸ்.ஸுக்கு உத்தரவிட்டது மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு. இதனையடுத்து தடை செய்வதற்கான ஒரு ரிப்போர்ட்டை தயாரித்து அந்த கோப்பினை கலைஞரிடம் எடுத்துச் சென்றார் மாலதி.
அதைப் பார்த்து கடும் கோபமடைந்து கோப்புகளை வீசியெறிந்த கலைஞர், ‘"என் தலைவர் பெயரில் இருக்கும் இயக்கத்தை தடை செய்ய என்னிடமே அனுமதி கேட்பீர்களா? தடை செய்ய முடியாதுன்னு டெல்லிக்கு கடிதம் அனுப்புங்கள்'’என உத்தரவிட்டார். தந்தையின் வழியில், தற்போதைய கவர்னரின் கடிதத்தையும் முதல்வர் திருப்பியனுப்பியிருக்க வேண்டும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
உளவுத்துறையில் அதீத அனுபவம் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவியை தமிழக கவர்னராக மத்திய பா.ஜ.க. அரசு நியமித்தபோதே, தி.மு.க. அரசுக்கு குடைச்சல்தான் என எதிர்பார்க் கப்பட்டது. அதற்கேற்ப தி.மு.க. அரசின் பல் வேறு துறைகள் சார்ந்த புகார்களை சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து விவரித்தார் ஆளுநர் ரவி. இதனை கடந்த இதழில் நாம் பதிவு செய்திருக்கிறோம். டெல்லி யிலிருந்தபடியே... மோடியின் உத்தரவுக் கேற்ப அடித்து ஆடத் துவங்கினார் ஆளுநர்.