தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே இடைத்தேர்தல் வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தார் தி.மு.க. தலைவர் முதல்வர் ஸ்டாலின். உடனடியாக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட புதிய செயலாளர் கௌதமசிகாமணி தலைமையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் அன்னியூர் சிவாவை அறிமுகப்படுத்தி நிர்வாகிகளுடன் சேர்த்து மாலை அணிவித்து வாழ்த்தினர்.
தி.மு.க. தலைமை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் பொன்முடி, நேரு. எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ், ஜெகத்ரட்சகன் எம்.பி., விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் உள்ளடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் கலந்துகொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் அருகேயுள்ள ரைஸ்மில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சி தலைவர்களான காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தை தலைவர் திருமா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கூட்டணிக் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி ""நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் அதிக வாக்குகள் பெற்றார். அதைவிட கூடுதலான வாக்குகளை இடைத்தேர்தலில் பெறவேண்டும். இதற்காக கட்சியினர், கூட்டணிக் கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும்'' என்று பேசி கட்சித்தொண்டர்களை முடுக்கிவிட்டார்.
21-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இறுதிநாள். தற்போதுவரை ஐந்து சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் 242-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அக்னி ஆழ்வார், திருச்சி உறையூர் பகுதி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர் ராஜேந்திரன் ஆகியோரும் அடக்கம்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஹோமியோபதி டாக்டர் அபிநயாவை சீமான் களமிறக்கியுள்ளார். தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் இறங்கி வேலைசெய்வதற்காக விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய நகர பகுதிகளிலுள்ள தனியார் ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றை புக்கிங் செய்துவந்தனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “""ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடப்பது சந்தேகம். தி.மு.க. அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் அராஜகத்தை, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள். சுதந்திரமான முறையில் தேர்தல் நடக்காது என்ற காரணத்தால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். இதுவொன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கெனவே 2009-ல், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம், ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை எங்கள் கட்சியின் மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்துள்ளார். அந்த அடிப்படையில் நாங்களும் இந்த முடிவை எடுத்துள்ளோம்''’என்று கூறியுள்ளார்.
பலமான எதிரிகளே இல்லாத இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சிவா வெற்றி மிகவும் எளிதாகியுள்ளது. இந்த நிலையில் பி.ஜே.பி., பா.ம.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டதோடு, விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் பகுதியைச் சேர்ந்த அன்புமணியை வேட்பாளராக அறிவித்துள்ளார். இவர், கட்சியில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவராக உள்ளவர். ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர். இந்த முறை கடந்த தேர்தல்களைவிட அதிக வாக்குகளைப் பெறவேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியில் பா.ம.க.வினர் இறங்கியுள்ளனர். ""தி.மு.க. ஆட்சியமைந்து மூன்றாண்டுகள் கடந்தும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தி.மு.க. தொடர்ந்து துரோகம்தான் இழைத்துவருகிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மும்முனையாக இருந்தாலும் தி.மு.க. என்ற முனை கூர்மையாகி வெற்றியை நோக்கிச் செல்கிறது.