vikkiravandi

தி.மு.க.வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் தந்தை எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளராக கோலோட்சினார்.

Advertisment

அவருக்குப் பிறகு செஞ்சி ராமச்சந்திரன் மாவட்ட செயலாளராக வலம் வந்தார். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டச்செயலாளராக பொன்முடி கை ஓங்கியிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தை கட்சிரீதியாக கலைஞர் இரண்டாகப் பிரித்தபோது, தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அங்கயற்கண்ணிக்கும், வடக்கு மாவட்டச் செயலாளராக பொன்முடிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற குமுறல் கட்சிக்குள் பலமாக ஒலித்ததையடுத்து விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக 2019-ல் பிரிக்கப்பட்டபோது, மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தியை தெற்கு மாவட்டச் செயலாளராகவும் செஞ்சி மஸ்தானை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் கலைஞர் அறிவித்தார்.

Advertisment

இதில் பொன்முடியின் ஆதரவாளர் புகழேந்தி. 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் புகழேந்தி தோற்றாலும், 2021-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சமீபத்தில் அவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

இதனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. வரும் ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் எம்.பி. கௌதமசிகாமணியை வேட்பாளராக நிறுத்துவதோடு, மாவட்டச் செயலாளர் பதவியையும் தன் மகனுக்கு எதிர்பார்த்தார் பொன்முடி. கட்சித் தலைமை, ஒன்று மாவட்டச் செயலாளர் பதவி அல்லது விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர், இரண்டில் எது வேண்டும் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள் என்று கூற, மாவட்டச் செயலாளர் பதவி முக்கியம் என்பதால் அதைப் பெற்றுக்கொண்டார். அந்நியூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சிவாவை கட்சித் தலைமை இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, விழுப்புரம் வடக்கு மாவட்ட மா.செ.வான செஞ்சி மஸ்தானை நீக்கிவிட்டு, டாக்டர் சேகரை மா.செ.வாக்கியுள்ளது தி.மு.க. டாக்டர் சேகர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். புதிய மாவட்டச் செயலாளரான சேகர் கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக இருந்தவர். கட்சிக்கு நன்கு அறிமுகமானவர். எல்லோருடன் இணைந்து பணி செய்யக்கூடியவர் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

வேட்பாளர் அன்னியூர் சிவா அடிப்படையில் தீவிர தி.மு.க. தொண்டர். 1987 முதல் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சிவா, இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட கட்சி அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். பிறகு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகி, 96-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அன்னியூர் கிராம கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி பெற்றார். அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த நேருவின் தொடர்பு அன்னியூர் சிவாவுக்கு கிடைத்தது.

இதுவரை தேர்தலைச் சந்திக்காத சிவா, கட்சி அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, பணிகளை எப்படி செய்யவேண்டும் என்பதை நுணுக்கமாக அறிந்தவர். ஏற்கனவே 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட்டு கேட்டு முயற்சிசெய்து வந்தவருக்கு இடைத்தேர்தலில் தலைமை வாய்ப்பளித்துள்ளது,விக்கிரவாண்டி தொகுதிக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன், முதல்வர் ஸ்டாலின் உட்பட கட்சி முன்னோடிகள் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என ஆலோசனை செய்தனர். அப்போது அமைச்சர்கள் நேரு, துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திருச்சி சிவா எம்.பி., எம்.பி. ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் அன்னியூர் சிவாதான் சரியான வேட்பாளர் என சிபாரிசு செய்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர், புதிய மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி, அவர் தந்தை அமைச்சர் பொன்முடி ஆகியோரிடம் ""சிவாவை வெற்றிபெற வைக்கவேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

பொன்முடி தரப்பில் தற்போதைய மாவட்ட பஞ்சாயத்துக்கு குழு தலைவராக உள்ள ஜெயச்சந்திரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாம். ஆனாலும் அன்னியூர் சிவாவை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

53 வயதாகும் அன்னியூர் சிவாவின் தந்தை அரியபுத்திரன், தாய் ஜெயலட்சுமி. மனைவி வனிதாவுக்கு ஹர்ஷிதா, சுடர் என இரு மகள்களும் திரிலோக ஹரி என்ற மகனும் உள்ளனர். அன்னியூரில் பெற்றோரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்துட்டவளாகம் அருகே வி.ஏ.ஓ. நகரில் அன்னியூர் சிவா குடும்பமும் வசித்துவருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் எசாலம் எம்.பன்னீர்செல்வம் பெயர் அறிவிக்கப்படலாம். அல்லது, கட்சி தலைமை ஏற்கனவே 2019 இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்ற முத்தமிழ்செல்வனை மீண்டும் களமிறக்கலாம். அதேபோல் பி.ஜே.பி., பா.ம.க. கூட்டணி சார்பில் பா.ம.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தவுள்ளனர், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும். இதன்மூலம் விக்கிரவாண்டி தொகுதி நான்குமுனை போட்டியை சந்திக்க உள்ளது.

புதிய வேட்பாளர், புதிய மா.செ.க்கள் என தி.மு.க. அதிரடி காட்டியுள்ளது.

-எஸ்.பி.எஸ்.