கேப்டன் நினைவுகள்...!
நடிகர் சங்கம் சார்பில் மலேசியா -சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிக்கு போயிருந்தபோது, ரஜினியின் உடைகள் அடங்கிய சூட்கேஸ் மிஸ்ஸிங். இதனால் அதிர்ச்சியான விழா ஏற்பாட்டாளர்கள், "நிகழ்ச்சிக்கு நேரமாச்சு, இனிமே ரஜினி சாருக்கு டிரெஸ் ரெடி பண்ணுவது' என திகைக்க...
உடனே ரஜினி, ""தம்பி விஜிகிட்ட போய் ஒரு சட்டை வாங்கிட்டு வாங்க'' எனச் சொல்லி அனுப்பினார்.
அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் வெள்ளை கதர் சட்டை -வேட்டியைத் தான் அணிந்து பங்கேற்றார் ரஜினி.
உலகத் தமிழர்களிடம் பேசப்பட்ட விஜயகாந்த்தின் நக்கீரன் பேட்டி!
""அரைப் பக்கமோ, ஒரு பக்கமோ பேட்டி போடப் போறீங்க. இதுக்கு அரைநாள் இன்டர்வியூ எடுத்திருக்கீங்களே சக்திவேல்'' என நம்மிடம் கேட்டபோது, ""இந்த பேட்டி ரொம்ப பேசப்படும். அவ்வ ளவு விஷயம் சொல்லீருக்கீங்க'' என்றோம்.
அதன்படியே அந்த பேட்டி பரபரப் பானது.
கலைஞரின் அபிமானியான விஜயகாந்த் தான், அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 2000 பிப்ரவரியில், "நக்கீரன்' இதழுக்கு அரசியல் விமர்சனப் பார்வையோடு அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி பேட்டியளித்தார்.
அந்த பேட்டியை படித்துவிட்டு லண்டன் பி.பி.சி. தமிழ் சேவை வானொலியின் முக்கியப் பொறுப்பிலிருந்த திருமதி.ஆனந்தி அவர்கள், நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு போன் செய்து, சிறப்பு அனுமதி பெற்று நக்கீரன் கேட்ட கேள்விகளையும், விஜயகாந்த் சொன்ன பதில்களையும் வாசிக்கச் செய்து, உலகத் தமிழர்களிடம் ஒலிபரப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து வந்த பாராட்டுகளால் விஜயகாந்த் மிகவும் மகிழ்ந்துபோனார்.
எம்.ஜி.ஆரின் ரசிகன்! கலைஞரின் அபிமானி!
விஜயராஜாவாக மதுரையில் வளைய வந்தபோது... எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தவர் விஜயகாந்த். "ராமன் தேடிய சீதை' படம் வெளியானபோது, தியேட்டருக் குள்ளேயே இருந்து காலை -மதியம் -மாலை ஆகிய மூன்று காட்சிகளையும் தியேட்டரை விட்டு வெளியேறாமலேயே இருந்து, இப்ராஹிம் ராவுத்தருடன் படம் பார்த்தார். அவ்வளவு தீவிரமான எம்.ஜி.ஆர். ரசிகர்.
நடிகரான பிறகு கலைஞர் அபிமானியாக மாறியதால், எம்.ஜி.ஆரை தனியே சந்திக்கவே இல்லை. "உழவன் மகன்' படம் வெளியாகி ஹிட்டாகியிருந்த நேரம். டி.வி.டி.யில் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு "விஜி ரொம்ப நல்லா சண்ட போடுது'' என, தன் அருகிலிருந்த ஜானகி அம்மையாரிடம் சொல்லிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர். இதை பின்னாளில் விஜயகாந்த்திடம் தெரிவித்தார் ஜானகி அம்மா.
ரஜினியை சந்தித்த விஜயகாந்த்!
மதுரையின் பிரபல விநியோகஸ்தரான மொகத் மசூரின் அலுவலகம்தான் விஜயகாந்த் மற்றும் ராவுத்தரின் டேரா சென்டர். விஜயகாந்த்தை எம்.ஏ.காஜா மூலம் சினிமாவுக்கு கொண்டுவந்தவர் இந்த மசூர்தான். அப்போது ரஜினி நடிகராக பிரபலமாகிக்கொண்டிருந்த நேரம். ""விஜி மதுரை பாண்டியன் லாட்ஜ்ல ரஜினிகாந்த் தங்கப்போறாரு. பசங்க யாரும் அவரை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும். அதுக்கு ரஜினிக்கு பாதுகாப்பா நீ போகணும்'' என்றார்.
கராத்தே கற்றிருந்த விஜயராஜ் (விஜயகாந்த்) அதன்படியே ரஜினியின் அறைக்கு வெளியே நின்று பாதுகாப்பு அளித்தார்.
மறுநாள் நிகழ்ச்சி முடிந்ததும் ரஜினியிடம் ""சார் நீங்க சிகரெட்ட ஸ்டைலா தூக்கிப் போடுறீங்கள்ல... எனக்காக ஒருவாட்டி அத செஞ்சு காமிங்க'' என விஜயகாந்த் கேட்க... ரஜினியும் செய்து காண்பித்தார்.
ரஜினி வீட்டில் விஜயகாந்த் போராட்டம்!
நடிகர் சங்கம் கடன் சுமையால் திணறிக்கொண்டிருந் தது. ராதாரவி மற்றும் சரத்குமாரின் நிர்வாகத்தை ஏற்க மறுத்த ரஜினியும் கமலும், நடிகர் சங்க விஷயங்களில் ஈடுபாடு காட்டவில்லை.
விஜயகாந்த் தலைமையேற்றதும் கடனை அடைக்க மலேசியா -சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார்.
""ஏம்ப்பா... ரஜினியும் கமலும் வரமாட்டாங்கய்யா... பந்தயம் வேணும்னா கட்டிக்கலாமா?'' என பலரும் கேலி செய்தபோது, ""ரஜினியும், கமலும் கண்டிப்பா வருவாங்க'' எனச் சொல்லி அதிரடியில் இறங்கினார்.
ரஜினியின் வீட்டிற்கு விரைந்த விஜயகாந்த்தை, தனது கண்ணாடி அறையில் சந்தித்தார் ரஜினி.
சோபாவில் அமர்ந்த ரஜினி, ""உட்காருங்க விஜி'' என தன் அருகிலிருந்த சோபாவில் அமரச் சொன்னார். ரஜினியே எதிர் பாராதவிதமாக சடாரென தரையில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டார் விஜயகாந்த். ரஜினிக்கு அதிர்ச்சி!
""ஏன்... எதுக்கு... என்னாச்சு விஜி?'' என கேட்டார்.
""நடிகர் சங்கம் நடத்துற கலை நிகழ்ச்சிக்கு நீங்க வர மாட்டீங்கன்னு சொல்றாங்க. நீங்க வர்றதா உறுதி கொடுத்தாத்தான், நான் சோபால உக்காருவேன். இல்லன்னா இங்கதான் உக்காருவேன்'' என விஜயகாந்த் சொல்ல... ரஜினி வருவதாக உறுதியளித்தார். கமல் வீட்டிலும் இப்படியே தர்ணா செய்தார்.
சொன்னபடியே கமலும், ரஜினியும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
விஜயகாந்த்தின் துணிச்சலை வியந்த ரஜினிகாந்த்!
விஜயகாந்த், தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்த சமயம் சென்னை அண்ணாசாலையில் நடிகர் திலகம் சிவாஜி சிலை திறப்பு விழா, கலைஞரின் தலைமையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், அந்த மேடையிலேயே விஜயகாந்த்தின் அரசியல் துணிச்சலை மனம்விட்டுப் பாராட்டினார். கலைஞர் அதை கவனித்துக்கொண்டிருந்தார்.
எளிய மக்களின் இனிய நடிகனாய், தலைவனாய் வாழ்ந்த கேப்டன் எனும் "புரட்சிக் கலைஞர்' ஆகிய விஜயகாந்த்தின் மரணம் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. கேப்டனின் முதல் படம் "இனிக்கும் இளமை'.
எத்தனையோ புதுமுக இயக்குநர்களுக்கு, இயக்குநர் அந்தஸ்து கொடுத்து வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். முகவரி இல்லாத பலருக்கு தயாரிப்பாளராய் முகவரி தந்தவர் விஜயகாந்த். வறுமை காரணமாக கல்வி எனும் அறிவொளி பெற முடியாதவர் களுக்கு அறிவொளி கிடைக்கச் செய்தவர் விஜயகாந்த்.
காலங்காலமாய் அரசியலில் உழன்று அங்கீகாரம் கிடைக்காமல் ஏங்கியவர்களை, பல்வேறு பதவிகளில் ஏற்றிவைத்து ஏணியாய் நின்று அழகு பார்த்தவர் விஜயகாந்த்.
இப்படி பல தரப்பினரையும் வாழ வைத்தவர், இதோ... வீழ்ந்து கிடக்கிறார்!
இது யாரால் நடந்தது?
பதிலுக்காக காத்திருக்கிறார்கள் மக்கள்!
-இரா.த.சக்திவேல்
படங்கள் : ஸ்டாலின், குமரேஷ்
____________
கலைஞர் மீது அன்பு கொண்ட விஜயகாந்த்!
திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, திரைத்துறையினர் பலருக்கும் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் வாழ்வளித்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்க முன்னணி நடிகர்கள் பலர் தயங்கிய நிலையில், அந்தப் பொறுப்பினையேற்று சங்கத்தின் பல கோடி ரூபாய் கடன்களை அடைத்தவர்.
அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற சூழலிலும், நடிகர் சங்கத்தின் சார்பில் கலைஞருக்கு கலையுலகப் பொன்விழாவை சென்னை கடற்கரையில் பிரம்மாண்டமாக நடத்தி, தங்கப் பேனாவைப் பரிசளித்தவர்.
தமிழ் மொழி மீது பற்று கொண்டவர். ‘"வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்'’ என்ற கலைஞரின் வரிகளே அவரது ரசிகர் மன்ற பதாகைகளில் இடம்பெற்றிருக்கும்.
ஈழத்தமிழர் மீது உண்மையான அக் கறை கொண்டவர். அவர்களின் உரிமை காக்கும் போராட்டங்களில் பங்கேற்றவர், நிதியளித்தவர். ஈழத்தமிழர் பெயரைச் சொல்லி சல்லிக்காசு சம்பாதிக்காதவர்.
தனிக்கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே 2001 உள்ளாட்சித் தேர்தலில் மன்றக் கொடியுடன் ரசிகர்களைப் போட்டியிடச் செய்து, அரசியல் நாடித்துடிப்பை சரியாக அறிந்துகொண்டவர். அரசியல் சூழல்களை உணர்ந்து, தனிக்கட்சி தொடங்கி, முதல் முறையாகப் போட்டியிட்ட தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினரானவர்.
தன் வாக்குபலத்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சித் தலைவரானவர்.
2016-ல் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பெரும்சுமையை ஏற்றியவர்களால், அரசியல் களத்தில் பெரும் சரிவை சந்தித்தவர்.
அரசியல் களத்தில் தி.மு.க.வுடன் தொடக்கத்திலிருந்தே மோதல்கள் இருந்தபோதும், கலைஞர் மீது என்றென்றும் அன்பு கொண்டவர். கலைஞர் மறைவுச் செய்தியை வெளிநாட்டிலிருந்தபோது தெரிந்துகொண்டு, கதறி அழுத காணொளியை தன் அஞ்சலியாக அனுப்பியவர். தாயகம் திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராக கலைஞரின் நினை விடம் சென்று தன் மரியாதையை செலுத்தியவர்.
-கீரன்
____________
டூப் போடாத டாப் ஹீரோ!
விஜயகாந்த் என்றாலே அவரது ஆக்ஷன் படங்கள்தான் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வரும். "தூரத்து இடி முழக்கம்' படத்துக்காக துடுப்பைச் சுழற்றியடித்ததால் அவரது வலது கை தோள்பட்டை மூட்டே விலகிவிட்டது. "பட்டணத்து ராஜாக்கள்' படத்துக்காக பாறையில் சறுக்கிக்கொண்டே சண்டையிட்டதில் முதுகில் கற்கள் குத்திக் கிழித்திருக்கின்றன. "சாட்சி' படத்தில் பீப்பாய்களை அடுக்கி அதன்மேல் சண்டையிட்டதில், பீப்பாய்கள் அவர்மீது விழுந்து வலது கண்ணோரத்தில் குத்திக் காயம்பட்டிருக்கிறார். "காலையும் நீயே மாலையும் நீயே' படப்பிடிப்பில் துப்பாக்கியால் இவரை சுடும் காட்சியில் டம்மி தோட்டா காரில் பட்டுத் தெறித்து இவரது கண்ணுக்கு மிக அருகில் பட்டு ரத்தம் வழிய, மயங்கி விழுந்தார். இப்ராஹிம் ராவுத்தர் அலறியடித்துக்கொண்டு அப்பல்லோவில் விஜயகாந்த்தை சேர்த்து சிகிச்சையளிக்க... நண்பனின் நிலை கண்டு இப்ராஹிம் ராவுத்தல் அழுது தீர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று மாத காலத்துக்கு மதுரையில் ரகசிய இடத்தில் விஜயகாந்த்தை ஓய்வில் இருக்கச்செய்து, பெங்களூரில் விஜயகாந்த் ஓய்வெடுப்பதாக திரைத்துறையினரிடம் கூறிவந்திருக்கிறார். அன்றைய சூழலில், விஜயகாந்த் கதை அவ்வளவுதான் என்று பலரும் கதை கட்டியிருக்கிறார்கள். அதையெல்லாம் தவிடுபொடியாக்கித்தான் மீண்டெழு ந்திருக்கிறார்.
"உளவுத்துறை' படத்துக்காக நிஜமாகவே கடலுக்கடியில் இருநூறடி உள்ளே சென்று சண்டைக் காட்சியில் நடித்தார். "கேப்டன் பிரபாகரன்' படத்துக்காகவும், "செந்தூரப்பூவே' படத்துக்காகவும் ஓடும் ரயி லில் சண்டையிடும் காட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தார். "கருப்பு நிலா' படத்தின் க்ளைமாக்ஸில், நடுக்கடலின் மீது ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டு வில்லனோடு சண்டையிடும் காட்சியில் நடித்தார். ஆனால், அந்த ஷூட்டிங்கைப் பார்த்து பயந்துபோன அவரது மனைவி, "இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம்' என வற்புறுத்த, விஜயகாந்த்தோ மறுக்க, உடனே இப்ராஹிம் ராவுத்தரைத் தொடர்புகொண்டு, "அந்த சீனை வேண்டாம்னு சொல்லுங்க' என வற்புறுத்த, உடனே இப்ராஹிம் ராவுத்தர் ஃபைட் மாஸ்டரை அழைத்து, "எடுத்தவரைக்கும் போதும், ஹெலிகாப்டரிலிருந்து கேப்டனை இறங்கச் சொல்' எனக்கூறி அதோடு நிறுத்தியிருக்கிறார்கள். இப்படி ரிஸ்க் எடுப்பது குறித்து விஜயகாந்த் கூறுகையில், ""உலகம் முழுக்க இப்போது ஆக்ஷன் ஹீரோக்களுக்குத்தான் பெரிய மவுசு இருக்கு. ஆக்ஷன் படங்களைத்தான் மொழிகளைக் கடந்து பலரும் ரசிக்கிறாங்க. என்னோட படங்களும் தெலுங்கில் டப் பண்ணி நல்லா ஓடுறதுக்கு ஆக்ஷன்தான் காரணம். தமிழ் இலக்கியத்துல கூட காதல், வீரம்னு ரெண்டும் தான இருக்கு. ஆக்ஷன் ஹீரோக்களில் நீர், நிலம், ஆகாயம்னு மூணு இடத்துலயும் டூப் போடாமல் நடித்தவன் நானாகத்தான் இருக்கும்'' என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.