"ஹலோ தலைவரே, காங்கிரசின் இடைத் தேர்தல் வெற்றியை, அறிவாலயத் தரப்புதான் உற்சாகமாகக் கொண்டாடி இருக்கு''.”
"ஆமாம்பா, காங்கிரஸ் தரப்பில் பேச்சு மூச்சைக் காணோமே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கடுமையான உழைப்பால்தான் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறார். அதனால் வெற்றிச்செய்தி வந்த வேகத்திலேயே, அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார். அப்போது அவர், "உங்களின் ஆட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், அமைச்சர்களின் வியூகமும்தான் இந்த இமாலய வெற்றியை எனக்கு கொடுத்திருக்கு'ன்னு சொல்லி நெகிழ்ந்திருக்கார். வருகிற 10-ஆம் தேதி முறைப்படி எம்.எல்.ஏ.வாக இளங் கோவன் பொறுப்பேற்க இருக்கிறார். இடைத்தேர்தல் ரிசல்ட் வந்தபோது அறிவாலயம் ஏக கொண்டாட்டத்தில் இருக்க, வெற்றியைக் கொண்டாடி மகிழ வேண்டிய சத்தியமூர்த்தி பவனோ வெறிச்சோடிப் போயிருந்தது. அவருடையை வெற்றியை அவங்க கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டவர்களே ரசிக்கலையாம்.''
"இதில் உள் அரசியல் இருப்பது புரியுதுப்பா.''”
"ஆமாங்க தலை வரே, நடப்பு நிதியாண் டுக்கான தி.மு.க. அரசின் பட்ஜெட் தாக்கல், 20 ஆம் தேதி நடக்க இருக்குது. அதற்காகக் கூடும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே, சட்டமன்ற காங் கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு, அவர் ஆதரவாளர்களிடம் அதிகமாக இருக்குது. அதேபோல் தன்னுடைய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோய்விடுமோ என்கிற அச்சம் செல்வப்பெருந்தகையைப் பீடித்திருக்கிறது. அதனால், ’நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது, எனது பதவியை பறித்துவிடாதீர்கள்’ என்று, கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம், கட்சிப் பிரமுகர் ஒருவரைத் தூது விட்டிருக்கிறாராம். அதேபோல் தடாலடி அரசியல் செய்யக்கூடிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, கட்சித் தலைமை, தான் வகிக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் உட்கார வைத்துவிடுமோ என்கிற கவலை, கே.எஸ்.அழகிரி தரப்புக்கும் வந்துவிட்டதாம்.''”
"காங்கிரசின் மகத்தான இடைத்தேர்தல் வெற்றிக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி வகுத்த வியூகங்கள்தான் காரணம்னு பலரும் சொல்றாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, இடைத்தேர்தல் பொறுப்பாளராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகங்கள், ரொம்பவும் ஆச்சரியப்படும்படி இருந்ததாம். அதனால் தான் களத்தில் இருந்த மற்ற அமைச்சர்களும் நிர்வாகி களும் டென்சனே இல்லாமல் செயல்பட முடிந்தது என் கிறார்கள் காங்கிரசைச் சேர்ந்த தொண்டர்களே. அதே போல், அவருடைய சுறுசுறுப்பான வேகத்திற்கும் வியூகத் திற்கும் ரிசல்ட் சூப்பராக அமைந்துவிட்டது என்கிறது அறிவாலயம். முதல்வர் ஸ்டாலினிடமும் இதை சக அமைச் சர்கள் சிலர் பகிர்ந்துகொண்டதால், செந்தில்பாலாஜியை அழைத்து, ஸ்டாலின் உற்சாகமாக வாழ்த்தியிருக்கிறார். இந்த நிலையிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் மற்றும் கோவை பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த உதயநிதியின் பயண ஏற்பாடுகளையும் சிறப்பாக கவனித்துக்கொண்டாராம். அதற்கான பாராட்டும் அவர் பக்கம் குவிகிறது.''”
"பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவராக இருந்த நிர்மல்குமார், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலையின் போக்கால் மனம் வெறுத்துப்போய் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கிறார். கட்சியின் டெல்லி தலைமைவரை செல்வாக்கு பெற்றிருந்த அவரின் விலகல் பா.ஜ.க. தரப்பை அதிரவைத்திருக்கிறது. கட்சியை விட்டுவிலகிய நிர்மல் குமார், அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறிப்பாக, "சொந்தக் கட்சியினரையே வேவு பார்க்கிறார். நிதி மோசடி நிறுவனங்களிடம் பணம் வசூலித்துவருகிறார். கட்சியை வியாபார நிறுவனமாக்கிவிட்டார். அமைச்சர்களுடன் திரைமறைவில் பேரம் நடத்துகிறார். ஃபோர் டுவென்ட்டி நபராக இருக்கிறார், என்றெல்லாம் விமர்சித்திருப்பதோடு, உச்சபட்சமாக "அவர் மன நலம் குன்றியவர்போல் செயல்படுகிறார்' என்றும் போட்டுத் தாக்கி இருக்கிறார். இதைப்பார்த்த பா.ஜ.க.வின் கீழ் நிலைத் தொண்டார்கள், அண்ணாமலை பற்றி நக்கீரன் இதழ் புலனாய்வு செய்து வெளியிட்ட செய்தியெல்லாம் உண்மை என்பது, நிர்மல் குமாரின் புகார்கள் மூலம் உறுதியாகுதேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.''”
"குவாரி அதிபர்களிடமும் பா.ஜ.க. அண்ணாமலை வசூலிக்கிறார்னு புகார் கிளம்புதே?''”
"ஆமாங்க தலைவரே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தான் கோவையில் நிற்கப்போவதாகச் சொல்லிவரும் அண்ணாமலை, தன்னை அழைக்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு, தேர்தலுக்குப் பணம் வேண்டும் என்று ஏகத்துக்கும் வாங்கிக் குவித்து வருகிறாராம். இந்த நிலையில் அண்மையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் பா.ஜ.க. கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, "கோவை மாவட்டத்தில் 75 ஆண்டுகளாக குவாரிகளில் தோண்டப்பட்ட அளவை விட, கடந்த இரண்டு ஆண்டுகளில் பொள்ளாச்சி கிணத்துக் கடவு ஆனைமலை பகுதிகளில் உள்ள குவாரிகளில் அதிகமாக கனிமங்களைத் தோண்டிக் கொள்ளை அடிக் கின்றனர். அவற்றை கேரளாவுக்கும் கடத்துகின்றனர். இதில் ஆளும்கட்சியான தி.மு.க. அதிக லாபம் பார்த்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தாவிடில் அடுத்த 21ஆம் நாள், கனிமவளத்தினை கடத்திச் செல்லும் லாரியை நானே மறிப்பேன்'னு பரபரப்பாகச் சவால் விட்டார். இந்த சவாலுக்குப் பின்னணியில் இன்னொரு கலெக்சன் ரகசியமும் இருக்கு.''”
"அது என்னப்பா கலெக்சன் ரகசியம்?''”
"ஒன்றியத்தில் தங்கள் ஆட்சி நடப்பதால் பா.ஜ.க. புள்ளிகள் பலரும் குவாரி பிசினஸில் குதித்து கனிம வளத்தைச் சுரண்டிக் கொழுத்து வருகிறார்கள். குறிப்பாக, கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கிராவல் மண் மற்றும் வண்டல் மண்ணை ஒரு நிறுவனமும், கற்கள் மற்றும் எம்.சாண்ட்டுகளை இன்னொரு நிறுவனமும் எடுத்துவருகிறது. இவற்றில் ஒரு நிறுவனம் கேரளாவிற்கு கனிம வளங்களைக் கொண்டுசெல்லும் அனுமதியையும் பெற்றிருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் அடிக்கடி தொழில் போட்டியில் முட்டிமோதிக் கொள்வதும் வழக்கம். கேரளாவுக்குக் கனிமவளம் செல்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென நினைத்த அதன் போட்டி நிறுவனம், பா.ஜ.க.வின் நிர்வாகி களை முதற்கட்டமாக ரூ.50 லட்சத்துடன் அணுகி இருக்கிறது. இதைத் தொடர்ந்துதான் பணம் கொடுத்த நிறுவனத்துக்காக வரிந்துகட்டிய அண்ணாமலை, கேரளாவுக்குச் செல்லும் லாரி களை மறிப்பேன்னு சவுண்டு விட்டிருக்கிறா ராம். இது பா.ஜ.க.வினர் மத்தியிலேயே புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.''”
"தன் மீதான அத்தனை வழக்குகளையும் ஊதித்தள்ளி வரும் மாஜி அ.தி.மு.க. மந்திரி விஜயபாஸ்கர், இப்ப லஞ்சப்புகாரில் வசமாக சிக்கி இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சிக்காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கரின் உதவியாள ரான ரவியையும் அவரது கார் ஓட்டுநரான விஜய்யையும் அதிரடியாக கைது செய்திருக்கிறது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ். அரசு வேலை வாங்கித் தருவதாக விஜயபாஸ்கரின் உதவியாளர் தன்னிடமிருந்து 11 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்கிறார் என்றும் அண்மையில், சென்னை குற்றப்பிரிவில் ஒரு பெண்மணி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்துதான் இந்த கைது நடவடிக்கைகள் நடந்திருக்கு. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விஜயபாஸ்கர் சொல்லித்தான் பணத்தை வாங்கினோம் என்றும், அந்தப் பணத்தை விஜய பாஸ்கரிடம் கொடுத்து விட்டோம் என்றும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களாம். இந்த விவகாரத்தில் தரகர்களாக செயல்பட்ட சிலரையும் போலீஸ் தேடி வருகிறது. அவர்கள் பிடிபட்டதும், அவர்களிடம் வாக்குமூலம் பெற போலீஸ் வியூகம் வகுத்துவரும் நிலையில், கைது பயத்தில் இருக்கிறாராம் விஜயபாஸ்கர்.''”
"நானும் ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். செய்தித் துறையைச் சேர்ந்த நான்கு பேர், சென்னை யில் மது போதையில் போலீஸைத் தாக்க முயன்று கைதானது குறித்து, அண்மையில் நாம் பேசி இருந் தோம். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் அவர்கள் மீது செய்தித்துறை இயக்குநர் மோகன், துறை ரீதியிலான நடவடிக்கை கூட எடுக்கவில்லை என்பதையும் பதிவு செய்திருந்தோம். இது கோட்டை வட்டாரம் வரை பரபரப்பை ஏற் படுத்த, இதுகுறித்து, தலைமைச் செயலாளர் இறையன்புவே விசாரணை நடத்தி யிருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். எனினும் அதற்கான ஆர்டரை சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் சர்வ் செய்யாமலே வைத்திருந்தனர் இந்தத் தகவலும் மேலிடத்துக்குப் போக, துறை இயக்குநர் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை வறுத்தெடுத்து இருக்கிறார். இதில் மிரண்டுபோன அதிகாரிகள், சஸ்பெண்ட் ஆர்டரை சம்பந்தப்பட்டவர்களின் வீடு களுக்கே போய் விநியோகித்து விட்டார்கள்.''
_______________
இறுதிச் சுற்று!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் திருச்சி மிளகுப் பாறை பகுதியிலுள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையை 06-03-2023, திங்கள் அன்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அப்போது, "தற்போது வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் உறுதுணையோடு அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 6 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஹார் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வுக் குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில் நேரடியாக தொழிலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள தொழிலாளர்கள், "நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்''” என விளக்கமளித்தார்.
-துரை.மகேஷ்