புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இழிசெயலை மனிதத்தன்மை கொண்டவர்கள் யாரும் செய்யமாட்டார்கள். யாரோ மனிதத்தன்மையற்ற சமூக விரோதிகள் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதன்முத-ல் சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வக்கோட்டை சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட வேங்கைவயல், இறையூர் கிராம மக்களும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.
முத-ல் வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்துவந்த நிலையில் பிறகு தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து நேரில் விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேங்கைவயல், இறையூர், காவேரி நகர் உள்பட பல கிராமங்களிலும் உள்ள சந்தேக நபர்களை அழைத்து விசாரணை செய்தனர். 231 பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். விசாரணையின்போது செல்போனில் பகிரப்பட்ட சில குரல் பதிவுகள் உள்ளிட்ட பதிவுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வாட்ஸ் அப் குழுவில் பயணித்த சிலரது செல்போன்கள் ஆய்வு, டி.என்.ஏ. பரிசோதனை, குரல் மாதிரி சோதனைகளும் நடத்தப்பட்டது. இந்த வழக்கு அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது. விரைவில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து கூறிவந்தனர்.
இந்த நிலையில்தான் குடிதண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த உண்மைக் குற்றவாளிகளை கைதுசெய்து வெளி உலகிற்கு காட்டும் வரை நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். வாக்குப்பதிவு நாளில் இரு கிராம மக்களிடமும் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில், வேங்கைவயல் மக்கள் மாலையில் வாக்களித்தனர். ஆனால் இறையூர் மக்கள் குற்றவாளியைக் கைது செய்யும்வரை எந்தத் தேர்த-லும் வாக்களிக்கமாட்டோம் என்று முழுமையாகத் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 23-ஆம் தேதி வியாழக்கிழமை, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கு புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் (ஐ.பி.சி. 41ஏ அடிப்படையில்) அனுப்பியுள்ளனர். இந்த நபர் ஏற்கனவே பல விசாரணைகளுக்கு ஆஜரானதுடன் குரல் மாதிரி சோதனைக்கும் சென்றுவந்தவர்.
இந்த சம்மன் பற்றிய தகவல்கள் வெளியே பரவிய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாதிக்கப்பட்ட தரப்பில் உள்ளவருக்கே சம்மன் அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டுகளை எழுப்பினர். ஆஜராகச் சென்ற போலீஸ்காரருக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அதற்கான பாஸ் கொடுத்து அனுப்பியது.
வியாழக்கிழமை காலை நீதிமன்ற வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தபிறகு அவர்களுடன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட வேங்கைவயலைச் சேர்ந்த போலீஸ்காரர் ஆஜராக வந்தார். ஆனால் அலுவலகத்திற்குள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபரைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கமுடியாது என்று மற்றவர்களை வெளியில் அனுப்பிவிட்டு புதிய விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா தத் விசாரணையைத் தொடங்கினார். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 6.50 மணி வரை தொடர்ந்தது.
விசாரணை முடிந்து வெளியேவந்த போலீஸ்காரரை வி.சி.க.வினர், சி.பி.எம். கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்பட சி.பி.எம்., வி.சி.க நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடந்தது. இதில் அந்தந்த கட்சித் தலைமைக்கு தற்போதைய நிலையைக் கொண்டுசெல்வது என்று முடிவெடுத்து அங்கிருந்து சென்றனர். அதேபோல வி.சி.க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் வெள்ளிக்கிழமை சென்னையில் வி.சி.க தலைவர் திருமாவளவனைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.
சி.பி.சிஐ.டி. விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. கல்பனா தத் கூறும்போது, ""வேங்கைவயல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் ஒருவருக்கு சம்மன் அனுப்பி வரவைத்து விசாரித்திருக்கிறோம். மேலும் சிலருக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்வோம். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்''’என்றார்.
இதுகுறித்து விவரமறிந்த மேலும் சிலர், ""வேங்கைவயல் வழக்கு விசாரணை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும் சிலரும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். அவர்களையும் விசாரித்து முடித்தபிறகு ஏற்கனவே நடந்த குரல் மாதிரி சோதனை, விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு கைது நடவடிக்கை இருக்கும். அதற்கான காலம் குறைவாகவே உள்ளது''’’ என்றனர்.
இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறும்போது, ""இந்த மனிதத்தன்மையற்ற செய-ல் ஈடுபட்ட சமூகவிரோதி யாராக இருந்தாலும் ஜாதி, மத பாகுபாடின்றி கைது செய்யப்படவேண்டும்''’என்கின்றனர்.