வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.
கே.வி.குப்பம் தவிர மற்ற 5 தொகுதிகளும் தி.மு.க. வசம் உள்ளன. எனவே நாடாளுமன்றத் தேர்த-ல் இந்தத் தொகுதி தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என நினைத் தாலும், கோஷ்டி சண்டைகள் அதைக் கவிழ்த்துவிடுமோ? என ஆளுங்கட்சியினரே பயப்படுகின்றனர்.
தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க. பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த். கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இறங்கி வராமல், அரசர் கால அரசியல் செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். கட்சிக்காகவோ, கட்சி நிர்வாகி களுக்காகவோ இவர் செலவும் செய்வதில்லை. தொகுதிக்கும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. அதனால், தேர்தலில் எதைச் சொல்லி வாக்கு கேட்பது என தி.மு.க.வினரே கை பிசைகிறார்கள்.
வேலூர் மா.செ.வும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், தனது தொகுதிக்குள் எம்.பி.யை, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லை. இதனைப் பார்த்து மாவட்டத்திலுள்ள இவரது ஆதரவாளர்களான ஒன்றிய, நகர செயலாளர்களும், சேர்மன்களும் எம்.பி.யை புறக் கணித்து வருகிறார்கள். வேலூர் மாநகர செய லாளரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கார்த்தி, அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். துரைமுருகனுக்கு எதிராக மாவட்டத்தில் இவர் செயல்படுவதால், இவரும் எம்.பி.யை எதற்கும் அழைப்பதில்லை. இவரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர மேயர் சுஜாதாவும் எம்.பி.யைப் புறக்கணிப்பதில் முன்னிலை வகித்துவருகிறார்.
துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த திருப்பத்தூர் மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ.விடமும் எம்.பி. கதிர்ஆனந்த் மரியாதை இல்லாமல் பேசி, அதிகாரத்தை காட்டியதால் அவரும் எம்.பி.யிடம் இருந்து விலகிநிற்கிறார். இப்படி தொகுதியில் களத் தளபதிகளாக இருக்கும் பலரும் கதிர்ஆனந்த்துக்கு எதிராக இருக்கின்றனர். எனவே அவர் மீண்டும் போட்டியிட்டால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உட்கட்சி எதிரிகளே, வருமான வரித் துறை, தேர்தல் பறக்கும் படைக்கு இவரைப் போட்டு தந்து பலகோடி ரூபாயை பறிக்க வைத்து, தேர்தலையும் தள்ளிவைக்கச் செய்ததுபோல், இப்போதும் அதுபோன்ற காரியங்களை அரங் கேற்ற ரெடியாக இருக்கிறார்கள்.
இதையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும் கதிர்ஆனந்த், இந்தமுறை கிருஷ்ணகிரி தொகுதியில் நிற்கலாமா? என யோசித்துவருகிறாராம்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட விரும்பவில்லை என்பதால், அந்தத் தொகுதியில் இப்போதே கவனம் செலுத்தலாமா? என்ற ஆலோசனையிலும் கதிர் ஆனந்த் இருக்கிறாராம்.
இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வேலூர் தொகுதியைத் தங்களுக்குக் கேட்டுவருகிறது. ஏற்கனவே இரண்டுமுறை இந்த தொகுதியில் லீக் தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றி பெற்றுள்ளது. இந்தமுறை திருச்சியை சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு சீட் வழங்கலாம் என்கிறார்கள். தி.மு.க.வோ, அவர்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்கிறது. அவர்கள் ஏணி சின்னத்தில் நிற்கிறோமே என்கிறார்கள். இதனால் இழுபறி யாகிறதாம்.
எதிர்த்தரப்பான அ.தி.மு.க.விலோ, எம்.பி. சீட் கேட்பவர்கள் கட்சித் தலைமையில் 5 கோடி ரூபாய்க்கான அசையா சொத்துக்களைக் காட்ட வேண்டும். 15 கோடி ரூபாய் பணம் கட்டவேண்டும் எனச் சொல்லியுள்ளார் எடப்பாடி. 15 கோடி என்றதும் வேலூர் மாவட்ட செயலாளர் வேலழ கன், மாநகர செயலாளர் அப்பு போன்றவர்கள் பின்வாங்கி நிற்கிறார்கள். அமைப்புச் செயலாள ரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகனிடம் சொற்ப வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியடைந் தவருமான ராமு சீட் கேட்கும் மூடில் உள்ளார்.
வாணியம்பாடி, ஆம்பூர், வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகளவு உள்ளதால் அ.தி.மு.க. சார்பில் இஸ்லாமிய பிரமுகர் ஒருவரை நிறுத்தலாம் என ஆம்பூர், வாணியம்பாடி தோல் தொழிற்சாலை அதிபர்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் வீரமணி தலைமையில் சென்று சந்தித்தனர். சீட் ஆசையில் இருந்த பேரணாம்பட்டு ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும், ஒ.செ.வுமான பொகலூர் பிரபாகரனை முன்னாள் அமைச்சர் வீரமணி உட்பட சில நிர்வாகிகள் முன்மொழிந்ததோடு அவரை நேரடியாக எடப்பாடியிடம் அழைத்துச் சென்று அவரை சந்திக்கச் செய்தனர். நெடுஞ் சாலைத்துறை ஒப்பந்ததாரரான பிரபாகரனிடம் சீட் உறுதி என்று எடப்பாடி சொன்னதாகச் சொல் கிறார்கள். அவரும் தலைமை கேட்ட பணத்தினை தயார் செய்துவிட்டுக் காத்திருக்கிறாராம். அதேநேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டி யிட்டு 18 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய தொழிலதிபர் ஒருவர் எம்.பி. சீட் கேட்கிறார். அவரிடம் பேசி வருகிறோம் என்கிறார்கள் அ.தி.மு.க. பிரமுகர்கள். தொழிலதிபர் சேகர்ரெட்டியின் தம்பி முறை உறவுக்காரரும் பொதுப்பணி மற்றும் நெடுஞ் சாலைத்துறை ஒப்பந்ததாரருமான ரிஷிகுமார் அ.தி.மு.க.வில் சீட் கேட்டு முட்டி மோதுகிறார்.
இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்தத் தொகுதியைக் கேட்கிறது. அ.தி.மு.க.வைத் தவிர்த்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினால், அவர்கள் இரட்டைஇலை சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் எனச் சொல்லிவிட்டோம் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். பா.ஜ.க.விலும் சீட் சலசலப்பு எழுந்துள்ளது. ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங், வேலூர் தொகுதி பொறுப்பாளராக நிய மிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக ஓடியாடிக் கொண்டு இருக்கிறார். தேர்தலில் நின்றால் நிச்சயம் எம்.பி.யாகிவிடலாம் என வேலூர் மாநகர முன் னாள் மேயரான பா.ஜ.க. மாநில பொதுச்செயலா ளர் கார்த்தியாயினி, மாநிலச் செயலாளர் வெங்க டேசன் உட்பட சிலர் சீட் கேட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. சார்பில் தாமரைச் சின்னத்தில் புதிய நீதிக்கட்சி நிறுவனரான நான்தான் நிற்கப்போகி றேன் என ஏ.சி.சண்முகம் இன்னொரு பக்கம் சொல் வது பா.ஜ.க. நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது. 2019 தேர்தலில் தோற்றவர் வேலூரில் இருந்து வெளியே சென்றவர் இப்போது மீண்டும் தேர்தல் வருவதால் வந்துள்ளார். இவருக்கு நம் கட்சி சார்பில் சீட் தரக்கூடாது என தங்கள் தலைமையிடம் பா.ஜ.க.வினர் வலியுறுத்துகின்றனர்.
2014ல் தாமரைச் சின்னத்திலும் 2019-ல் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டி யிட்டு தோல்வியடைந்த புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறை யாக வேலூர் தொகுதியில் களமிறங்குவது 100 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்கிறார் கள் அவர் தரப்பினர். அனுதாப வாக்குகளில் இந்தமுறை வெற்றி பெற்றுவிடலாம் என அவர் நம்புகிறாராம். மாவட்ட பா.ஜ.க.வின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொகுதியில் மருத்துவ முகாம், வேலை வாய்ப்பு முகாம் போன்றவற்றை கடந்த இரண்டு மாதங்களாக நடத்திக்கொண்டு இருக்கிறார் ஏ.சி.எஸ். அணைக்கட்டில் இவரது மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக வந்த ஒரு பெரியவருக்கு சரியாக சிகிச்சையளிக்காததால் அடுத்த சில நாட்களுக்கு பின்னர் இறந்துவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் மருத்துவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து ஏ.சி.எஸ். தரப்பு புகார் தரவில்லை. இறந்தவர்கள் தரப்பும் புகார் தரவில்லை. இதற்கு பின்னணியில் தி.மு.க.தான் இருக்கிறது என முடிவு செய்தவர், அதற்குப் பதிலடியாக தி.மு.க. எம்.பிக்கு எதிரான பிரச்சினைகளை தொகுதியில் கிளப்பிவிட்டு வருகிறார்.
தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள தன் சாதி முக்கியஸ்தர்களி டம் இப்போதே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி ஆளுக்குத் தகுந்தாற்போல் எல்., சி என்கிற கணக்கில் கவனிப்பு செய்து இப்போதே பலகோடி ரூபாய்களை தொகுதிக்குள் இறக்கிவிட்டுள்ளாராம் ஏ.சி.எஸ். அ.தி.மு.க.வின் போட்டி அமைப்பான ஓ.பி.எஸ். தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதற் கான வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை வேட்பாளரை நிறுத்தி னால் திருப்பத்தூர் மா.செ. கோதண்டம் அல்லது சுரேஷ், இவர் களில் ஒருவரை நிறுத்துவதற்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.
தே.மு.தி.க.வில் பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்த ஊர் அருகிலுள்ள குடியாத்தம் செம்பேடு என்பதால், இங்கு அவரது தம்பியான துணை பொதுச்செயலாளர் சுதிஷ் போட்டியிடலாம் அல்லது பிரேமலதாவே கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் தகவல் பரவுகிறது.
இதற்கிடையே பிரேமலதா கள்ளக்குறிச்சி தொகுதியைக் குறிவைத்திருக்கிறார் என்ற டாக்கும் இருக்கிறது. அதோடு, ஏ.சி.எஸ். இங்கே நின்றால் சுதிஷ், அவரை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.
இப்படியாக வேலூரைக் குறிவைத்து விறுவிறு தகவல்களும், தொகுதியைக் கைப்பற்றும் போட்டிகளும், அரசியல் கட்சிகளில் அரங்கேறி வருகின்றன.