தி.மு.க.வில் 15-வது அமைப்புத் தேர்தலில், ஆங்காங்கே சில அதிருப்திகள் கிளம்பினாலும், பெரிய அளவில் ரசாபாசம் ஆகாத வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சித் தேர்தலின்போது இரண்டு வகையான அதிருப்திகள் கிளம்பின. ஒன்று, ஏற்கனவே மா.செ.வாக உள்ள எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு எதிராக இந்தமுறை பனமரத்துப்பட்டி மாஜி ஒ.செ. பாரப்பட்டி சுரேஷ்குமார், ஆத்தூர் ஒ.செ. செழியன், அயோத்தியாப்பட்டணம் ஒ.செ. விஜயகுமார் ஆகியோர் மா.செ. பதவிக்காக மல்லுக்கட்டினர்.
சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவுக்கு நெருக்கமானவராக வளைய வரும் பாரப்பட்டி சுரேஷ்குமார்தான் இந்தமுறை சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் புதிய மா.செ. என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கட்சி மேலிடத்திலும் கே.என்.நேரு அவரையே பரிந்துரை செய்ததாகவும், கட்சித் தலைமையோ அவரை நிராகரித்து விட்டதாகவும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
கடந்த 2010-ஆம் ஆண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப் பட்ட வழக்கில் பாரப்பட்டி சுரேஷ்குமாரும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர், அவருக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லையென்று விடுதலையானாலும், மக்கள் மனதில் பாரப்பட்டி சுரேஷ்குமார் மீதான பார்வை மாறாததால்தான் அவருக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதாகக் கூறுகிறார்கள் கட்சியினர்.
அதேநேரம், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்ப வகையறாக்களில் இருந்து 6 பேருக்கு கட்சிப்பதவிகள் கொடுக்கப்பட்டிருப்பதும் உடன்பிறப்புகளிடம் உச்சகட்ட அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல் கின்றனர். இது தொடர்பாக, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வினர் சிலர் நம்மிடம் பேசினர். "சேலம் கிழக்கு மாவட்டத்தில் கழகத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும், கிளீன் இமேஜ் உள்ள ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் வீரபாண்டியார் மறைந்த பிறகும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் அவருடைய குடும்ப ஆதிக்கம்தான் தொடர்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோதே, அவருடைய மகன் ராஜாவை எம்.எல்.ஏ. ஆக்கினார். வீரபாண்டி ராஜா இறப்பதற்கு முன்பு, அவருடைய மகள் டாக்டர் மலர்விழியையும் அரசியலில் இறக்கிவிட்டார். சமீபத்தில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி யின் மகன் டாக்டர் பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக் கிறார். அவருடைய மூத்த மகன், மறைந்த வீரபாண்டி செழியனின் மருமகன் டாக்டர் தருண், மாநில தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் பதவியில் தொடர்கிறார். வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு பனமரத்துப் பட்டி ஒ.செ. பதவியிலிருந்து மாவட்ட துணைச் செயலாளராக புரமோஷன் கொடுத்திருக்கிறது தி.மு.க. தலைமை. தற்போது, சேலம் கிழக்கில் அவர்தான் மா.செ. போல கெத்து காட்டுகிறார்.
மா.செ. பதவிக்கு அடிபோட்ட சுரேஷ்குமார், தன்னிடமிருந்த பனமரத்துப்பட்டி ஒ.செ. பதவியை அவருடைய அண்ணன் பாரப்பட்டி உமாசங்கருக்கு விட்டுக்கொடுத்து விட்டார். மேலும், உமாசங்கரின் மகன் கரிகாலன், பனமரத்துப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கிறார்'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள். இதுமட்டு மின்றி, வீரபாண்டியாரிடம் உதவியாளராக இருந்த சேகரின் மனைவி வெண்ணிலாவுக்கு மீண்டும் வீரபாண்டி ஒ.செ. பதவி தரப்பட்டு உள்ளதையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்றொரு தரப்பினரோ, "வீரபாண்டியாரின் லேபிளில் மட்டும் 6 பேருக்கு பதவிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வீரபாண்டி ராஜாவை மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து தூக்கியபோது மு.க.ஸ்டாலினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த சங்கர், சந்திரமோகன் ஆகியோருக்கும் பதவி கொடுக் கப்பட்டுள்ளது. மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீராம், கட்சிக்காக எந்த வேலையும் செய்ததில்லை. அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. ஆட்டையாம்பட்டி பேரூர் கழகச் செயலாளராக முருகபிரகாஷ் உள்ள நிலையில், அவருடைய மனைவி கோமதிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. கட்சிக்கு ஆட்களே கிடைக் காமல்தான் கணவன், மனைவி இருவருக்கும் பதவி கொடுத்ததா?" என்று பொருமித் தள்ளினர்.
இது தொடர் பாக சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங் கத்திடம் கேட்ட போது, "சேலம் மாவட் டத்தில் தி.மு.க.வை வளர்த் தெடுத்த மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய பெயருக்கு இப்போதும் மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அதனால் கட்சித் தலைமை அவருடைய குடும்ப வகையறாவைச் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கலாம். ஏற்கனவே, ஒ.செ. நிர்வாகிகள் தேர்தலின்போதும் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்கியதாக கட்சிக்காரர்களே பொய்ப் புகார்களைக் கிளப்பிவிட்டனர். பதவி கிடைக்காத விரக்தியில் சிலர் இப்படி சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்'' என்றார்.
இதுகுறித்து பாரப்பட்டி சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, "தி.மு.க. அமைப்புத் தேர்தல் என்பது ஜனநாயகப்பூர்வமானது. அதனால் நானும் மா.செ. பதவிக்காக முயற்சி செய்தேன். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பரிசீலனை செய்த பிறகே என்னை மாவட்ட துணைச் செயலாளராக்கி இருக்கிறது. ஆறு பேர் கொலை வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று நீதிமன்றமே சொல்லிவிட்ட பிறகு, என்னை இணைத்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது'' என்றார்.