வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான டாக்டர் பரமசிவம் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்ரமணியன் மகன். இரண்டாவது முறையாக அ.தி.மு.க. சார்பில் களமிறங்கியிருக்கிறார். அப்பா வி.பி.பாலசுப்பிரமணியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் துணைசபாநாயகர் காந்திராஜன்தான் தற்போது அவருடைய மகன் பரமசிவனை எதிர்த்தும் தி.மு.க. சார்பில் களத்தில் குதித்திருக்கிறார்.
அப்பாவின் நற்பெயர் மகன் பரமசிவன் வெற்றிக்கு கடந்த தேர்தலில் துணை நின்றது. தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொகுதியிலுள்ள வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியப் பகுதிகளுக்குக் கொண்டுவந்ததுடன் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து நல்லபெயர் எடுத்திருக்கிறார்.
தண்ணீர்பந்தல்பட்டி அருகேயிருந்த வெங்காய குடோனை இடம் மாற்றி உரம் தயாரிப்பு தொழிற்சாலை, அயலூரில் வேளாண்மைப் பூங்கா, சேனையங்கோட்டையில் காய்கறி பதப்படுத்தும் கிட்டங்கி, வடமதுரை குஜிலியம்பாறை பகுதிகளில் தொழில்பேட்டை இப்படி சில திட்டங்களை விவசாய மக்களுக்காக கொண்டு வந்து, அவர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடியிடமும் நெருக்கமாக இருக்கிறார். அதனடிப்படையில் இரண்டு கட்டமாக எடப்பாடி பிரச்சாரத்துக்கு வருவார் என்ற பேச்சு அடிபடுகிறது.
தி.மு.க. சார்பில் களமிறக் கப்பட்டுள்ள காந்திராஜன், 1991-ல் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றதன் மூலம் ஜெ. அமைச்சரவையில் துணை சபாநாயகராக ஆனார். அதன் பின் அரசியல் சூழ்நிலையின் காரணமாக காந்திராஜன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமாகி முன்னாள் அமைச்சர் ஐ.பி.யுடன் கட்சிப் பணியாற்றி வந்தார்.
காந்திராஜன் துணை சபாநாயகராகவும் வாட்டர் போர்டு சேர்மனாக இருந்த போது குடிநீர் வாரியம் மூலம் தொகுதியிலுள்ள பெரும்பாலான ஊர்களுக்கு போர் போட்டுக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்திருக்கிறார்.
தொகுதியிலுள்ள மக்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுத்திருப்பதை இப்போதும் நினைவுகூர்கின்றனர். தொகுதியில் நல்லது- கெட்டது அனைத்திலும் பங்குபெற்று தொகுதி மக்கள் எளிதில் அணுகும் தன்மையுடன் திகழ்பவர்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் விசுவாசிகளான சாமி நாதன், கவிதா, சீனிவாசன் ஆகிய மூன்று ஒன்றியச் செயலாளர்களும் தங்களுக்கு சீட் கிடைக்காத மனவருத்தத் தையும் மறந்து தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்வது காந்திராஜனுக்கு பலம். ஸ்டாலினும் வடமதுரையில் வாக்கு சேகரித்துவிட்டுச் சென்றிருப்பதால் உ.பி.க்களும் உற்சாகமாக தேர்தல் களத்தில் வலம்வருகிறார்கள்.