கலைஞரின் மரணத்தின்போது இரங்கல் கவிதையை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தவர் தலைமைக் காவலர் செல்வராணி. திருச்சி மாநகரம் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் முகநூல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த செல்வராணி ராமச்சந்திரன், கலைஞருக்காக இயற்றிய இரங்கல் கவிதை, சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த இரங்கல் கவிதைக்காக மெமோ அனுப்பியது காவல்துறை. அந்த இரங்கல் கவிதையில் கலைஞரை அப்பா என்று குறிப்பிட்டிருந்தார் செல்வராணி. அதுதான் அன்றைய அ.தி.மு.க. அரசின் காவல் துறைக்கு கோபத்தை வரவழைத்தது.
மெமோவுக்கு பதில் தந்து, நேரில் விளக்கம் அளித்த செல்வராணி, "ஜெயலலிதாவை "அம்மா' என்று காவல்துறை அதிகாரிகள் சொல்வதுபோலத்தான் கலைஞரை "அப்பா' என்றேன்'’எனத் தெரிவித்திருந்தார். அவருடைய பதிலோ, விளக்கமோ ஏற்கப்படாத நிலையில், அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதனால் தனது பணியை இராஜினமா செய்தார் தலைமைக் காவலர் செல்வராணி. அதன்பின் திருச்சி சென்ற மு.க.ஸ்டாலின், செல்வராணியையும் அவரது குடும்பத்தாரையும் வீடு தேடி சந்தித்ததுடன், கலைஞரை அப்பா எனக் கவிதை எழுதிய செல்வராணியைத் தன் தங்கையாகக் கருதுவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். இயக்கப் பணிகளிலும் பொதுநலத்திலும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் செல்வராணி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, காவல்துறை சார்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. ஒன்று "வி.வி.ஐ.பி.கள் வரும்போது பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் சாலையில் நிற்பது கூடாது' என்பது. மற்றொன்று, "கண்டிப் பாக வாரத்திற்கு ஒருமுறை காவலர்களுக்கு விடுப்பு வழங்கவேண்டும்' என்பது. இதனை யடுத்து, பந்தோபஸ்து உள்ளிட்ட வெளியிடப் பணிகளில் இருக்கும் காவலர்களுக்காக கழிப்பறை யுடன் கூடிய நடமாடும் ஓய்வறை வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மு.க.ஸ்டாலினை "ஆண் தாய்' என குறிப்பிட்ட செல்வராணியிடம், "தற்போதைய நடவடிக்கைகள் என்ன பலன் தரும்' எனக் கேட்டோம்.
"முதல்வர் அவர்கள், பெண் காவலர்கள், வி.வி.ஐ.பி.கள் வரும்பொழுது சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாம் என்ற அறிவிப்புக் கண்டு வியந்துபோனேன். என்ன ஒரு ஆழமான சிந்தனை. பெண் காவலர்களின் மனநிலையை யாருமே இதுவரை புரிந்ததில்லை. நாங்கள் புரிய வைக்க முயற்சித்து, முயற்சித்து பலமுறை தோற் றுப்போயிருக்கிறோம். ஒரு பெண் முதலமைச்ச ராக இருந்தபோதும்கூட எங்களின் நிலையை அவர்கள் உணரவே இல்லை. "ஒரு பெண்ணின் வலி இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்' என்பதெல்லாம் பொய்த்துப் போய்விட்டது. ஒரு பெண்ணின் வலி ஆணுக்கும் தெரியுமென நிரூபித் திருக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 21 ஆண்டுகள் காவல்துறை பணியில் இருந்திருக்கிறேன். கர்ப்பிணியாக இருக்கும் போதும் இரவுப்பணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
வி.வி.ஐ.பி.கள் வருகை என்றால் பலமணி நேரங்களுக்கு முன்ன தாகவே ரோட்டுக்கு போய்விட வேண்டும். சாப்பாட்டைப் பற்றி யோ, இயற்கை உபாதை களைப் பற்றியோ யாரும் கவலைப்பட மாட்டார் கள், கவலைப்பட்டதும் இல்லை. ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "நடமாடும் ரெஸ்ட் ரூம்' வாகன வசதி யை பெண் காவலர்களுக்கு செய்து கொடுத்திருப்பது கண்டு கண்கள் ஆனந்தத்தில் நனைகிறது.
2005-ல் அம்மையார் ஜெயலலிதா திருச்சிக்கு வருகிறார். எனக்கு திருச்சி விமான நிலைய சாலை யில்தான் பணி. நாலுமணி நேரத்துக்கு முன்னதாகவே டூட்டி பார்க்கும் இடத் துக்கு போய்விட வேண்டும். என் நான்கு மாத கைக் குழந்தையை பால் கொடுத்து வீட்டில் விட்டுட்டு டூட்டிக்கு வந்து விட்டேன். குழந்தை வீட்டுல் பசியில் கத்திக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. குழந்தை பசியில அழற சேதி கேட்டதுமே, பால் கசிந்து என் காக்கி உடை நனைந்துகொண்டிருக்கிறது. ஆண் காவலர்களின் மத்தியில் கூனிக் குறுகிப்போய் நின்றேன். தண்ணீரை எடுத்து நெஞ்சு முழுவதும் நனைத்துக்கொண்டேன். யாராவது கேட்டால், "தண்ணீர் குடிக்கும்போது தவறி சட்டையில் ஊத்திவிட்டது' என்று சொல்லலாம் என்று.
பால் கொடுக்க அனுமதி கிடைக்கவில்லை. வருவது வி.வி.ஐ.பி. என்பதால் ஆப்சென்ட் ஆனால் தொல்லை. ஆகவே குழந்தையை ஆட்டோவில் கொண்டுவரச் சொல்லி நான் டூட்டி பார்த்த இடத்திலேயே ஆட் டோவில் அமர்த்து என் மகளுக்கு பாலூட்டி அனுப் பினேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில் லை. யார் என்ன நினைப்பார்களோ என்று நான் கவலைப்படவும் இல்லை. யாருமே வலியை எழுதாவிடில் எப்படி வலி பிறருக்குத் தெரியும்? இந்த மாதிரியான சிரமங்களைக் கடந்த என்னைப் போன்ற பெண் காவலர்களால்தான் முதல்வர் அவர்களின் இந்த அறிவிப்பையும் தாயுள்ளத்தையும் கொண்டாட முடியும்.
1973-ல் கலைஞர்தான் முதன்முதலில் பெண் காவலர்களை பணிக்கு அமர்த்தினார். ஒரு அரசியல் சாணக்கியனால்கூட சிந்தித்து செயல்படுத்த முடியாத ஒன்றை, அவர் பெற்ற பிள்ளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்துவதைக் கண்டு மகிழ்கிறேன். இவற்றையெல்லாம் கண்டு மகிழ கலைஞர் இன்று இல்லையே என்று வருந்துகிறேன்.
காவலர்கள் போதுமான நேரத்தை குடும்பத்தோடு செலவிட முடியாததால்தான் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மனைவி, குழந்தைகளோடு சேர்ந்து மூன்றுவேளை உணவு கூட உண்டிருக்கமாட்டார்கள். அதனால்தான் காவலர்கள் பெரும்பாலும் விரக்தியில் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் அறிந்து வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவித்திருப்பது காவலர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சரை காவலர் குடும்பங்கள் கொண்டாடு கிறார்கள். நிறைய காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், "ஸ்டாலின் நல்லா இருக்கணும்'னு வாழ்த்துகின்ற செய்தியை என் காதால் கேட்கும்பொழுது ஆனந்தமாய் இருக்கிறது. முதல்வரைக் காணும் ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் முதல்வர்மீது கொண்ட தாயன்பும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எத்தனை எத்தனை போராட்டங்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள். எல்லா வற்றையும் கடந்து போராடி ஆட்சியைப் பிடித்த பின்னும் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஆகச்சிறந்த உழைப் பாளியை நாம் பாராட்டத்தான் வேண்டும். முன்னாள் காவலர் என்ற முறையிலும், தங்கை என்ற மகிழ்ச்சியிலும் இரு கரம் கூப்பி நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். காவலர் பணியை உதறித் தள்ளிய செல்வராணி யின் மனநிலையில்தான் இருக்கிறார்கள், பணியில் இருந்துவரும் பெண் காவலர்கள்.
தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளில் ஒன்றைத்தான் ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர். அதனை நடைமுறைப் படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார் டி.ஜி.பி. சைலேந் திரபாபு. காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு, வி.வி.ஐபி. வருகையின்போது பெண் காவலர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்புவதிலிருந்து விலக்கு போன்ற நடவடிக்கைகள் காவல்துறையில் பணியாற்று வோரை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்திருக்கிறது.