டப்பாடியின் நிழலாக வலம்வந்த சேலம், ஆத்தூர் இளங்கோவன் இப்போது ரெய்டு பொறியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்.. சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார். மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்தப் பதவி, அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உடையது.

eps

இவருடைய மனைவி பானுரேகா. உள்ளூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். இளங்கோவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், பிரவீன்குமார், திருச்சி மாவட்டம் முசிறியில் எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் கல்லூரிகளை நடத்தி வருகிறார். சுவாமி அய்யப்பன் எஜூகேஷனல் டிரஸ்டின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

Advertisment

இளங்கோவன் வருமானத்தை விட 1-4-2014 முதல் 31-3-2020-ம் ஆண்டுவரை தனது பதவி அதிகாரத் தைப் பயன்படுத்தி யும், உயர்மட்ட அரசியல் புள்ளிகளுடன் உள்ள தொடர்புகள் மூலமாகவும் தன் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக 3.78 கோடி ரூபாய் சொத்துகளைக் குவித்ததாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 21-ஆம் தேதி, அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதாவது, 131 சதவீதம் கூடுதலாக சொத்துகளை குவித்துள்ளதாக சொல்கிறது லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆர். அந்த குற்றத்தில் இளங்கோவனின் மகன் பிரவீன்குமாரும் உடந்தையாக இருந்ததாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட மறுநாள், அதிகாலை 6:15 மணிக்கெல்லாம் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பு, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன், ஆய்வாளர் மைதிலி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிந்தனர்.

அந்த சின்ன தெருவின் நடுப்பகுதி வரை, அவர் வீட்டு வாசலுக்காக இடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இளங்கோவனின் சொகுசு பங்களா, 2400 சதுரடிக்கும் சற்று அதிகமான பரப்பளவில் மொத்தம் மூன்று தளங்கள் கொண்டிருந்தது. அண்டர்கிரவுண்டிலும் ஒரு ரகசிய அறை இருந்தது. வீட்டைச் சுற்றிலும் நான்கு புறத்திலும், ஒவ்வொரு தளத்திலும் ஹெச்.டி தரத்திலான சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரதான நுழைவு வாயில் கதவு உள்பட எல்லா கதவுகளும் சென்சார் தொழில் நுட்பத்துடன் இருந்ததால், ரிமோட் கன்ட்ரோல் மூலமே திறக்க முடிந்தது. இந்த வீடு ஓராண்டுக்குள்தான் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

Advertisment

ee

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சென்றபோது அங்கு இளங்கோவன் இல்லை என்றும், அவர் சென்னையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்திருக்கும் விவரங்கள் அவருக்கு சொல்லப்பட்டதை அடுத்து, உடனடியாக கார் மூலம் சேலம் புறப்பட்டார். மதியம் 12.15 மணியளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் இளங்கோவன். அதன்பிறகே, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் அவருடைய வீட்டில் சோதனையைத் தொடங்கினர்.

இது ஒருபுறம் இருக்க, இளங்கோவனின் நெருங்கிய ஆதரவாளர்களான அசோக்குமார் என்பவருக்குச் சொந்தமான ஈஸ்வர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை, அவருடைய வீடு, வரதராஜ் என்பவருக்குச் சொந்தமான நிவேதா எலக்ட்ரிக்கல்ஸ், ஜெய ராமன் என்பவருடைய வீடு, குபேந்திரன் என்பவரின் வீடு, இவருக்குச் சொந்தமான கே.கே. ஜூவல்லர்ஸ் நகைக்கடை, அ.தி.மு.க ஆத்தூர் நகர செயலாளர் மோகனின் வீடு, இவருடைய தங்கை உமாசங்கரி வீடு, சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான சேகோ ஆலை, தம்மம்பட்டி குமரன், இளங்கோவனின் மாமனார் சாம்ப மூர்த்தியின் வீடு, இளங்கோவனின் அக்காள் ராஜகுமாரி வீடு, மின்னாம்பள்ளி ராஜராஜசோழன் வீடு, சேலம் மரவனேரியைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயப்பிரகாஷின் வீடு மற்றும் அலுவலகம் என சேலம் மாவட்டத்தில் மட்டும் 23 இடங்களில் சோதனை நடந்தது.

முசிறியில் இளங்கோவனின் மகன் நடத்திவரும் கல்வி நிறு வனங்கள் மற்றும் சென்னை, கோவை, நாமக்கல் ஆகிய ஊர்களில் உள்ள இளங்கோவனின் ஆதர வாளர்களுக்குச் சொந்தமான இடங்கள் என சேலம் மாவட்டத்திற்கு வெளியிலும் 13 இடங்களில் சோதனை நடந்துள்ளது.

சுமார் 12:00 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில், இளங்கோவனின் பினாமிகள் என்று கருதப்படும் நபர்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் இருந்து ஏராளமான சொத்துகளும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள் ளன.

இந்த சோதனையில், மொத்தம் 29.77 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ பேருந்துகள், 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், 21.20 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருள்கள், வங்கி டெபாசிட் 68 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சோதனையின்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, நல்லதம்பி, ஜெய்சங்கர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள், அங்கே குவிந்து பரபரப்பை ஏற்படுத்தினர். ரெய்டு முடிந்து வெளியே வந்த இளங்கோவன், முகம் வெளிறிக் காணப்பட்டார்.

அவர் அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் “''அம்மா வழியில் வந்த நாங்கள் நேர்மையான முறையில் அரசியல் செய்து வருகிறோம். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்''’என்றார் பதட்டம் மாறாமலே. அந்தப் பதட்டமும் டென்ஷனும் எடப்பாடிக்கும் உள்ளது.