தமிழகம் முழுவதுமிருந்தும் சராசரியாக 39 லட்சம் லிட்டர் பாலை தினமும் கொள்முதல் செய்து வருகிறது ஆவின். இதில், 27 லட்சம் லிட்டர் பால்தான் விற்பனையாகிறது. சுமார் 12 லட்சம் லிட்டர் பால் தினமும் உபரியாக நிற்கிறது. இந்த உபரி பாலை பாலாக விற்பனை செய்வதற்கு பதிலாக, பவுடராக உருமாற்றம் செய்து விற்பனை செய்வதன் மூலம் நட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் ஆவின் அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆவின் பணியாளர்கள்,”"12 லிட்டர் பாலை உருமாற்றம் செய்தால் 1 கிலோ பால் பவுடர் கிடைக்கும். அதன்படி உபரி பாலில் இருந்து தினசரி 1 லட்சம் கிலோ பால் பவுடரை தயாரிக்கிறது ஆவின். மாதத்திற்கு 30 லட்சம் கிலோ பால் பவுடர். அந்த பால் பவுடரை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறார்கள் ஆவின் அதிகாரிகள்.
ஒரு கிலோ பால் பவுடரை தயாரிக்க அதிகபட்சம் 310 ரூபாய் செலவாகிறது. ஆனால், தனியாருக்கு 190 ரூபாய் முதல் அதிகபட்சம் 201 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த வகையில், சராசரியாக 110 ரூபாய் ஆவினுக்கு நட்டம். இதனால் மாதந்தோறும் 33 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்து வருகிறது ஆவின்.
பாலை பவுடராக உரு மாற்றம் செய்து விற்பதால்தான் நட்டம் ஏற்படுகிறது என முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் எம்.டி.யாக இருந்த காமராஜ் ஐ.ஏ.எஸ்., அந்த சிஸ்டத்தை ரத்து செய்துவிட்டு, பாலை பாலாகவே விற்பனை செய்யும் முறையை நடைமுறைப் படுத்தினார். அதன்படி இந்திய தேசிய கூட்டுறவு பால் இணையத்தின் மூலம் (சஈஉஎஒ) உபரி பால் பாலாக விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மாதத்திற்கு 150 கோடி ரூபாய் லாபம் பார்த்தது ஆவின். அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த ஒரே நல்ல காரியம் இதுதான்.
இந்த நிலையில், உபரி பாலை பாலாகவே விற்பனை செய்யதுவந்ததை ரத்து செய்துவிட்டு, பால் பவுடராக மாற்றி விற்கும் முறையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் ஆவின் அதிகாரிகள். இதனால், மாதம் சுமார் 33 கோடி ரூபாய் ஆவினுக்கு நட்டம் ஏற்பட்டுகொண்டி ருக்கிறது''‘என்று சுட்டிக்காட்டு கிறார்கள்.
லாபத்தில் இயங்கிக்கொண்டி ருந்த முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏன்? என மேலும் நாம் விசாரித்தபோது,”பா.ஜ.க.வின் நெருங்கிய தொழிலதிபர் பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலியின் தேவையை பூர்த்தி செய்யவே பாலை பவுடராக மாற்றும் முறையை நடைமுறைப்படுத்துகிறார்கள் என தெரிகிறது. அதாவது, பதஞ்சலிக்கு பால் பவுடரை விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனம். அந்த நிறுவனத்தால்தான் பலகோடி ரூபாய் நட்டத்தை ஏற்கனவே ஆவின் சந்தித்தது. அதே நிறுவனத்துக்கு தற்போது பால் பவுடர் தரப்படு கிறது. ஆவினில் இருந்து பால் பவுடரை வாங்கும் அந்த நிறுவனம், பதஞ்சலி நிறுவனத்துக்கு விற்கிறது.
ஆக, தனியார் நிறுவனங்களின் தேவைக் காகவே பாலை பவுடராக மாற்றுகிறது ஆவின். நட்டத்தில் இப்படியொரு சேவையை நடத்து வதற்கு கமிஷன் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் எனக் கேட்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.
பால் விவசாயிகளுக்கு வாரந்தோறும் பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய நிலையில், சுமார் 560 கோடி ரூபாயை தர முடியாமல் பாக்கி வைத்துள் ளது ஆவின். ஏற்கனவே வறுமையில் இருக்கும் ஏழை பால் விவசாயிகள், ஆவினுக்கு கொடுத்த தங்களின் பாலுக்கு பணம் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். இதனால், தனியார் பால் நிறுவனங்களிடம் பாலை கொடுக்கலாமா? என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்தெல்லாம் அக்கறை காட்டாமல் தனியாரின் லாபத்துக்கும் தங்களின் கமிஷனுக்கும் பாலை பவுடராக மாற்றி நட்டத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் ஆவின் அதிகாரிகள்’ என்று ஆவேசப்படுகிறார்கள் ஆவின் பணியாளர்கள்.
கடந்த ஆட்சியில் ஊழல் செய்த 34 அதிகாரிகள், தி.மு.க. ஆட்சியில் மாற்றப்பட்டார் கள். அப்படியிருந்தும் அதிகாரிகள் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. ஆனால், ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொன்ன விசாரணை அதிகாரியையும், பரிந்துரையை நடைமுறைப்படுத்த முயற்சித்த அதிகாரியையும் தண்டித்திருக்கிறது தமிழக அரசு.
ஆவினின் வரவு செலவுகளை தணிக்கை செய்த தமிழக பால் கூட்டுறவு தணிக்கைதுறை, பல்வேறு நிதி இழப்புகளையும் ஊழல்களையும் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆடிட் ரிப்போர்ட்டின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதி 81-ன்படி தமிழக பால்வளத் துறையின் டைரி டெவலப்மெண்ட் ஆபீஸர் அலெக்ஸ் ஜீவதாஸை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார் துறையின் அப்போதைய செயலாளர் வள்ளலார்.
ஆடிட் ரிப்போர்ட்டை ஆராய்ந்த அலெக்ஸ், ரிப்போர்ட்டில் சொல்லப்பட்ட அனைத்து ஊழல்களும் உண்மைதான் என ஆதாரபூர்வமாக கண்டுபிடிப்பதோடு, தணிக்கைத்துறை அதிகாரிகள் செய்த தவறுகளையும் கூடுதலாக கண்டுபிடிக்கிறார்.
அதாவது, ஆவினில் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் நிய மித்ததால் 15 கோடியே 84 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை ரூ.11 கோடியே 44 லட்சம் நட்டம் என ஊழல் தொகையை குறைத்து காண்பித்தது, சம்மந்தப்பட்ட கோப்புகளை ஆவினிலிருந்து எடுத்துச் சென்று விட்டு அதனை திருப்பி ஒப்படைக்காமல் கோப்புகளே காணோம் என சொன்னது, ஆடிட் அதி காரிகள் குறிப்பிட்ட மாதத் திற்குள் தணிக்கை செய்து ரிப்போர்ட்டை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்தது, மாவட்ட பால் சொசைட்டிகளில் பால் வாங்கியதற்கும் விற்றதற்கும் முறையான பதிவேடுகளே இல்லாத நிலையில் நீங்கள் எப்படி ஆடிட் செய்தீர்கள்? என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கூட்டு சதி நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் தனது அறிக்கையில் கூறியிருந்தார் அலெக்ஸ்.
மேலும், ஊழல் செய்த ஆவின் அதிகாரிகள் மற்றும் கடமையை சரியாக செய்யாத கூட்டுறவு பால் தணிக்கைத்துறையின் இயக்குநர் பிரமிளா உள்ளிட்ட ஆடிட் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார் விசாரணை அதிகாரி அலெக்ஸ். அந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த திருவள்ளூர் துணை பால் பதிவாளர் விஸ்வேஷ் வரனை நியமிக்கிறார் தற்போதைய ஆவினின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐ.ஏ.எஸ். அந்த பரிந்துரையை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்புகிறார் விஸ்வேஸ்வரன்.
இந்த நிலையில், நிதித்துறையின் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை சந்தித்து கதறுகிறார் பிரமிளா. அதன்பிறகு உயரதிகாரிகள் சிலருடன் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தீவிரமாக ஆலோசிக்க, எல்லாமே தலைகீழாக மாறிப்போனது. அதாவது, உண்மையை கண்டுபிடித்து ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ரிப்போர்ட் தந்த விசாரணை அதிகாரி அலெக்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். எஸ்கியூஷன் அதிகாரி விஸ்வேஸ்வரன் வேலூருக்கு தூக்கியடிக்கப் படுகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, "ஒரு புகாரை விசாரிக்க அதிகாரி நியமிக்கப்படுகிறார். அவரது அறிக்கையை ஏற்பதும் மறுப்பதும் அரசின் நேர்மையை பொறுத்தது. ஆனால், குற்றச்சாட்டுகள் உண்மை என சொன்னதற்காக அவரை சஸ்பெண்ட் செய்வீர்களா? அதேபோல, அந்த ரிப்போர்ட்டின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதால்தான் அதனை நடைமுறைப்படுத்த ஒரு அதிகாரியை நியமிக்கிறீர்கள். நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை அவரும் எடுக்கிறார். ஆனால், அவரையும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுகிறீர்கள். ஆக, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக நீதிக்கு தண்டனை வழங்கியிருக்கிறார்கள் உயரதிகாரிகள்''’என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்.
இது குறித்து கருத்தறிய தமிழக பால்வளத்துறையின் செயலாளர் ஜவஹர் ஐ.ஏ.எஸ்.சை தொடர்புகொண்டபோது, "ஆவின் எம்.டி. கந்தசாமியிடம் பேசுங்கள்" என தெரிவித்தார்.ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமியிடம் பேசியபோது, "பாலை பாலாக விற்பதிலும், பவுடராக விற்பதிலும் ஆகிய இரண்டு முறையிலுமே நட்டம்தான். தனி நபர்கள் சிலரின் லாபத்துக்காகத்தான் பாலை பாலாக விற்பனை செய்யும் முறை இருந்துள்ளது'' என்று பல்வேறு புள்ளிவிபரங்களை தெரிவித்தவர், "பாலை பாலாக விற்பதில் ஆவினுக்கு வருவாய் வரும் முறையான, ஆரோக்கியமான வழிகளை ஆராயுங்கள் என முதலமைச்சரும், துறையின் அமைச்சரும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதுகுறித்து விரிவாக ஆராய்ந்துவருகிறோம். ஆவினில் எந்த நிலையிலும் ஊழல்களுக்கு இடம் கிடையாது'' என்றார் அழுத்தமாக.
_______________________________
பொய் குற்றச்சாட்டு!
நக்கீரன் 2021, ஆகஸ்ட் 11-13 இதழில் "கலவியல் கல்லூரி! அலறும் மாணவிகள்!' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியில் வணிக வியல் துறை இணைப் பேராசிரியரான என்னைக் குறித்து கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் உண்மைக்குப் புறம்பானவை, பொய்யான குற்றச்சாட்டுகள், என்மீது களங்கம் சுமத்தும் நோக்கமுடையவை.
-வணிகவியல் இணைப் பேராசிரியர்