நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு உதயநிதி வெற்றிபெற்றதுமே அவரது செயல்பாடு குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எகிறியது. அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்பதவி கொடுக்கப்படவில்லை. அதனாலென்ன என்று, தனது தொகுதியில் தெருக்கள் தோறும் சென்று, மக்களின் குறை அறிந்து தீர்த்துவைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டுவருகிறார். அதோடு மட்டும் நின்றுவிடாமல், அறிவிக்கப் படாத அமைச்சராக, தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலப்பணித் திட் டங்களைச் செயல்படுத்துவதற்காக தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கி விட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய கடலூர் மாவட்டத்திலேயே தற்போது தனது, மக்கள் நலப்பணித் திட்ட சுற்றுப்பயணத்தையும் உதயநிதி தொடங்கியுள்ளார். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலுள்ள ஆரம்ப சுகா தார நிலையத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கான முதலாவது தடுப்பூசி போடும் முகாமை உதயநிதி தொடங்கி வைத்தார். அவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வெ.கணேசன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பங்கெடுத்தாலும், முதன்முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள உதயநிதிக்குத்தான் சிறப்பு மரியாதையும், கவனமும் செலுத்தப் பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் சட்டை என்னது' என்பதுபோல இருந்தது. தி.மு.க.வின் இளைஞரணிப் பொறுப்புக்கு வந்ததுமே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காரர்களையும் மக்களையும் சந்தித்த உதயநிதியின் அடுத்தகட்டப் பாய்ச்சலாக, அமைச்சர் பதவிக்கு தயார்படுத்தும் நிகழ்வாகவே இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.
தடுப்பூசி முகாமை காலையில் தொடங்கிவைத்த உதயநிதி, பின்னர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு, திருவள்ளுவர் அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு, திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தை அமைச்சர்கள் குழுவுடன் சென்று பார்வையிடுவது என மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். இடையே, விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறியும்போது, முதலமைச்சரின் மகன் நமக்காக ஏதேனும் செய்துதருவார் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. அதைப் புரிந்துகொண்ட உதயநிதி, ஏரியைத் தூர்வார ரூ.120 கோடியும், கரையைப் பலப்படுத்த ரூ.75 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கவும், விவ சாயிகள் மத்தியில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. பின்னர் அங்கிருந்து விருத்தாச்சலம் சென்றவர், அங்குள்ள அரசு மருத்துவமனையின் சுகாதார அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், அரசாங்கப் பணியிலிருந்து ரிலாக்ஸாகி, கட்சிக்காரர்களைச் சந்திப்பதற்காக, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வடலூரில் நடத்தப்பட்ட, கலைஞரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த டெல்டா பகுதி விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி திட்ட தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட உதயநிதி பேசும்போது, "காலையில் 9 மணிக்கு காலை டிபன் முடிச்சுட்டு அமைச்சர்களோட சேர்ந்து ரவுண்ட்ஸ்லயேதான் இருக்கிறேன். இப்போது மணி 2 ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எனக்கு எந்தவொரு அமைச்சரும் சிங்கிள் டீ கூட வாங்கித்தரல'' என்று அமைச்சர்களைக் கலாய்த்து கலகலப் பாக்கினார்.
தொடர்ந்து பேசியவர், "கடந்த நவம்பர் மாதத்தில் ‘விடியலை நோக்கி’ என தேர்தல் பிரச்சாரத்தை கடலூர் மாவட்டத்தில்தான் முதலாவதாகத் தொடங்கி, வாக்கு சேகரித்தேன். இப்போது வெற்றிபெறச் செய்தமைக்காக நன்றி சொல்ல வந்துள்ளேன். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2 மாதமாக சிறப்பாக ஆட்சி நடந்து வருகிறது. டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர், ரூ.50 கோடியில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அத்திட்டத்தின்படி இந்த விழாவில் 154 பயனாளிகளுக்கு ரூ.1,13,63,200 மதிப்பில் குறுவை சாகுபடி திட்டத் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது துரிதமாகச் செயல்பட்டு, கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். இந்தியாவி லேயே கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக, முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்'' என்று உறுதிபடத் தெரிவித்தார்.
-சுந்தரபாண்டியன்
______________
கவனத்தை ஈர்த்த கண்ணன் ராதை சிலை!
திட்டக்குடி நகரிலுள்ள ஞானகுரு மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்களுக்கு புத்தர் சிலைகளையும், உதயநிதிக்கு "கண்ணன்-ராதை சிலை'யையும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொகுதி செயலாளர் ராஜா அலெக்சாண்டர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள். உதயநிதிக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் கண்ணன்-ராதை சிலை குறித்து விடுதலை சிறுத்தைகளிடம் கேட்டபோது, "ரூ.3.5 லட்சம் மதிப்பிலான இந்த சிலை, குஜ ராத்திலிருந்து வரவழைக்கப்பட்டது. கோபாலபுரம் என்றாலே கண்ணன் வசிக்குமிடம்தான் என்பதாலும், உதயநிதியை கோபாலபுரத்தின் சின்னக்கண்ணனாக வரவேற்பதன் அடையாளமாகவும், தி.மு.க.வில் கொள்கையளவில் கடவுள் மறுப்பு இருந்தாலும், தெய்வத்தை வழிபடுகிற வர்களை எதிர்ப்பவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தும்விதமாகவும், இச்சிலையைத் தேர்ந்தெடுத்தோம்'' என கூறினார்கள்.
-எஸ்.பி.எஸ்.