மதுரையில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் ரத்து என்ற அறிவிப்பால் அனைத்துக் கிராமங்களும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளன.
டங்ஸ்டன் திட்டம் ரத்து என்ற செய்திவந்த வுடன் அமைச்சர் மூர்த்தியுடன், 48 கிராம மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுசேர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், மக்களின் சார்பில் பாராட்டு விழா நடத்தப் போகிறோம். கட்டாயம் வரவேண்டும் என்று கோரினர். அதை ஏற்றுக்கொண்டு ஜனவரி 26-ஆம் தேதி மதியம் 4.30 மணிக்கு மதுரை வந்த முதல்வர், மேலூர் அரிட்டாபட்டி வந்தபோது வழிநெடுக வரவேற்பு கொடுத்து சாலையில் இருபுறமும் மக்கள் நிற்க கொஞ்சம் அசந்துதான் போனார்.
"உங்களால்தான் இந்த ஆட்சியில் இருக் கிறேன். நான் பொறுப்பில் இருக்கும்வரை டங்ஸ் டன் திட்டம் வராது என்றேன். ஊர்ப் பெரியவர் கள் எனக்கு நன்றி சொல்ல என்னை அழைத்தார் கள். உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மக்கள் சக்தியோடு டங்க்ஸ் டன் திட்டத்தை நாம் தடுத்து நிறுத்தியிருக் கிறோம். மூன்றே மாதத்தில் உங்கள் போராட்டம் வெற்றிபெறக் காரணம் தமிழக அரசு காட்டியுள்ள கடுமையான எதிர்ப்பு.
மாநில அரசினுடைய அனுமதியில்லாமல் முக்கிய கனிம வளங்களை ஒன்றிய அரசு ஏலம் விடலாம் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் இதற்கு மூலகாரணம். இந்த சட்டம் கொண்டுவர பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றிய போது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல, தி.மு.க. கூட்டணியில் இருக்கக் கூடிய எல்லா கட்சிகளும் ஒன்றுசேர்ந்து அதை கடுமையாக எதிர்த்தன. டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்துக்கு தொடக்கத்திலேயே நம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக் கிறோம். நாம எழுதிய கடிதங்களையும் மீறி ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏலம்விடுவதற் கான முயற்சியைச் செய்தார்கள். அதனால் தான் நாம் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நான் இருக்கிறவரை டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. மக்களாகிய உங்கள் உறுதியான போராட்டத்தையடுத்து ஒன்றிய அரசு இப்ப இந்த ஏல அறிவிப்பை ரத்துபண்ணியிருக்காங்க. நான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோதே தெளிவாகச் சொன்னேன். இது என்னுடைய அரசு அல்ல,… இது உங்களுடைய அரசு என்று. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய கடமையை நிறைவேற்று வேன்'' என்றார்
அப்பகுதி மக்களிடம் டங்ஸ்டன் ரத்து அறிவிப்பு குறித்துப் பேசியபோது, ஊர்ப் பெரியவர் செல்வம், "முதலில் யாருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பேச்சு ஓடியது. ஒரு ஊர் நல்லாயிருக்கணும்னா ஒரு வீடு அழியிறதில தப்பில்ல,… அதேமாதிரி ஒரு நாடு நல்லா யிருக்கணும்னா ஒரு ஊர் அழியறதில்ல தப்பில்ல என்று சொன்னவங்களைப் பாராட்டுறதா,… இல்ல சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்தவருக்கு நன்றி தெரிவிக்கணுமா என்று முடிவெடுங்கப்பா என்றோம். இப்பதான் மனசு நிறைஞ்சு இருக்கு'' என்றார் மகிழ்ச்சியாக.
அடுத்து பேசிய பூங்கோதை "எங்க ஊரைச் சுற்றி இருக்கும் 48 கிராமங்களைச் சுற்றி 12 குலதெய்வங்கள் இருக்கு. எல்லோரிடமும் வேண்டாத நேர்த்திக்கடன் இல்ல. சாமி எங்களைக் காப்பாத்திடுச்சு'' என்றார்.
அடுத்து பேசிய வீரம்மாள், “"நான் இந்த ஊரில்தான் இறப்பேனா?…. செத்தா என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணில் புதைக்கமாட் டாங்களோ… அனாதையா வேறு எங்கோ புதைச்சிடுவாய்ங்களோ என்று அழாத நாள் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. இனி நான் செத்தாலும் மனநிம்மதியோட போவேன்'' என்றார் ஆனந்தக் கண்ணீரோடு.
இராமச்சந்திரனோ, "இந்த 48 கிராம பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும்'' என்றார். டங்ஸ்டன் திட்ட ரத்தால் மக்கள் முகங்களில் மகிழ்ச்சி ஒளி பளிச்சிடுகிறது.