திராவிட அரசியல் கட்சித் தலைவர்களான அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லாருக்குமே திருச்சி என்றால் ராசியான சென்ட்டிமெண்ட்தான். தி.மு.க. முதன்முதலில் தேர்தல் களம் இறங்கியதே, திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் எடுத்த முடிவின்படிதான். அதனால், திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்புமுனையாக அமையும் என்பது அக்கட்சியின் நம்பிக்கை.
கலைஞர் தலைமையில் 1990, 1996, 2006, 2014 என பலமுறை திருச்சியில் தி.மு.க. மாநாடு நடந் துள்ளது. வரும் பிப்ரவரியில் மற்றொரு மாநாட்டுக் காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு உரிய வர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு, மாநாட்டு பணிகளுக்கான பூஜை 18-01-2021 அன்று போடப்பட்டது.
""மாநில மாநாடாக இது அமையும் என்றாலும், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கம்'' என்கிறார்கள் மாநாட்டுப் பொறுப்பாளர்கள். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் அடையாள அட்டையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களாம். மாநில -மாவட்ட -ஒன்றிய -நகர -கிளைக்கழகங்கள் வரையிலான சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்படுகிறது
மாநாட்டிற்கான பணிகளை பூஜை போட்டு துவங்கிய தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாநாட்டு பணிகளை பலருக்கும் பிரித்துக் கொடுத்து பணியாற்றிட அறி வுறுத்தியுள்ளார். செவ்வாயன்று நாமக்கல்லில் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்து வந்து திருச்சி மாநாட்டிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
மேடை அமைப்பு, கட்சி பொறுப்பாளர்களின் வருகை, இருக்கை, அமர்வு மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என அனைத்தையும் வரைபடம் மூலம் தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு விரிவாக விளக்கிக் கூறினார். மாநாட்டுப் பொறுப்பில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் சௌந்திர பாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் உள்ளனர்.
2014-ல் நாடாளுமன்றத்திற்குமுன் திருச்சியில் நடந்த மாநாடு, தேர்தல் களத்தில் வெற்றியாக கனியவில்லை. ஆனால், தற்போதைய நிலையில், தி.மு.க.வினருக்கு உத்வேகம் கொடுத்திட ஒரு மாநாடு தேவைப்படுகிறது. "2021-ல் நடக்கவிருக்கும் இந்த மாநாடு கண்டிப்பாக தி.மு.க.விற்கு ஒரு திருப்புமுனையாக அமையும்' என்று நம்புகிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள்.