தொடர் பேச்சுவார்த்தை!
"இந்தியன் 2' தோல்வியால் கடும் அப்செட்டில் இருக்கும் ஷங்கர், தற்போது வெற்றி கொடுத்தாக வேண்டும் என கடுமையாக உழைத்துவருகிறார். கைவசம் "இந்தியன் 3' மற்றும் "கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களை வைத்துள்ள அவர், "இந்தியன் 3' பட போஸ்ட் புரொடக்ஷன் பணி களையும், "கேம் சேஞ்சர்' பட பேட்ச் ஒர்க் பணிகளையும் ஒரு சேர பார்த்து வருகிறார். இப்படங்களை முடித்தபின் அடுத்ததாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை திரைப்படமாக்கும் பணிகளை தொடங்க வுள்ளார். இப் படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்ததாக பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓ.கே. வாங்கி யிருந்தார். ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்தி நடிகர் ரிஸ்க் என யோசித்த அவர் தமிழ் நடிகர்கள்தான் சரியாக இருப்பார்கள் என தற்போது டாப் தமிழ் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சூர்யா மற்றும் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அவர், அடுத்ததாக மற்ற முன்னணி நடிகர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். "இந்தியன் 2' தோல்விதான் ஷங்கரின் முடிவிற்கு காரணம் என கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
ஆடிஷனில் அவுட்!
"ஊ சொல்றியா மாமா... ஊ ஊ சொல்றியா மாமா'’என சமந்தா குத்தாட்டம் போட்ட பாடல் "புஷ்பா' பட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால், அதே பாணியில் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடலை வைத்திருக்கிறது படக்குழு. இதற்காக மீண்டும் ஆட சமந்தாவை கேட்டபோது அவர் சில காரணங்களால் மறுத்ததால், மலைக்கா அரோரா, திஷா பதானி, ஸ்ரீலீலா என மூத்த நடிகை முதல் இளம் நடிகைகள் வரை பலரிடமும் படக்குழு அணுகியது. ஆனால் எதுவும் கைகூடவில்லை. இதையடுத்து "அனிமல்' படத்தில் நடித்த த்ரிப்தி டிம்ரி இறுதியாக கமிட் செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின்படி அவரும் வெளியேறியுள்ளார். அதாவது த்ரிப்தி டிம்ரியை கமிட் செய்துள்ள படக் குழு, அவரை ஆடிஷன் செய் திருக்கிறார்கள். அப்போது அவர் படக்குழு எதிர்பார்த்த அளவு நடனமாடாததால் ரிஜெக்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
அப்பா ராசி!
தந்தையைப் போலவே மகனுக்கும் கரியர் கிராஃப் அமைந்து வருகிறது. விக்ரமுக்கு முதல் படம் தோல்விப் படமாக அமைந்தததுபோல் துருவ் விக்ரமுக்கும் முதல் படம் சரியாக போகவில்லை. இதையடுத்து விக்ரமுக்கு நான்கு படங்கள் நடித்து முடித்தவுடன் மற்ற மொழி படங்களின் வாய்ப்பு வரத்தொடங்கியது. இப்போது அதேபோல் துருவ்விக்ரமுக்கும் நான்கு படங்கள் கழித்து மற்ற மொழி பட வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளது. அதாவது "ஆதித்ய வர்மா', "வர்மா', "மகான்' உள்ளிட்ட படங்களில் நடித் துள்ள துருவ் விக்ரம் நான்காவது படமாக "பைசன்' படத்தில் நடித்துவருகிறார். மாரிசெல்வராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் துருவ்விக்ரம். தெலுங்கில் வளர்ந்து வரும் இயக்குந ராக இருக்கும் அஜய் பூபதி சமீபத் தில் துருவ்விக்ரமை சந்தித்து தனது படக்கதையை கூறி யுள்ளார். அவருக்கும் கதை பிடித்துப்போக உடனே ஓகே சொல்லியுள்ளார். இருவர் இணையும் படம் அடுத்த வருடம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டில் இப் படம் உருவாகிறது.
மஞ்சு நம்பிக்கை!
"அசுரன்' மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்த மஞ்சுவாரியர், அடுத்தாக அஜித்தின் "துணிவு' படத்தில் நடித் திருந்தார். இப்படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததாக சில பேச்சுகள் அடிபட்டது. அதனால் சற்று வருத்தமடைந்த மஞ்சு, இப்போது அந்த பேச்சுக்களை "வேட்டை யன்' சரிசெய்யும் என நம்புகிறார். இதில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் வலுவான கதாபாத்திரம் என்றும் ஏற்கனவே ‘"மனசிலாயோ'’பாடல் தனக்கு போதுமான வரவேற்பை பெற்று தந்துவிட்டது என்றும் கூறிவருகிறார். இப்படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், ராணாடகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என ஏகப்பட்ட பிரபலங்கள் இருப்பதால் "துணிவு' படத்தைப்போல் இந்தப் படத்திற்கும் பேச்சு வரலாம் என சுதாரித்த மஞ்சுவாரியர் அதற்கு முன்கூட்டியே பதிலடி தந்துள்ளார்.
-கவிதாசன் ஜெ.