பாலிவுட்டில் அஸ்வின்!
சாதி அரசியலை நையாண்டி செய்து தன் முதல் படமான "மண்டேலா'வுக்காக தேசிய விருதை வாங்கிய மடோன் அஷ்வின், பலரின் கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து "மாவீரன்' படத்தை இயக்கியிருந்தார். முதல்படத்தில் சமகால அரசியலை அழுத்தமாகக் கூறிய அஷ்வின், "மாவீரன்' படத்தில் போகிறபோக்கில் சென்னையின் பூர்வக்குடி மக்களை ஆதிக்க வர்க்கம், அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அகற்றும் சம்பவத்தை மையமாகக் கொண்டு தமிழக அரசியலைப் பட்டும் படாமல் தீண்டிச் சென்றிருப்பார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரன் ஜோகர், மடோன் அஷ்வினிடம் கதை கேட்க, ஒரு ஒன் லைனை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக டெவலப் செய்யச் சொல்லி மடோனை புக் செய்திருக்கிறார் கரன் ஜோகர்.
அம்மனாக த்ரிஷா!
வடிவேலுக்குப் பிறகு காமெடிக்கு வறட்சி ஏற்பட்டுள்ள தமிழ் சினிமாவில், அவ்வப்போது சீசனுக்கு சில காமெடி நடிகர்கள் வருவதும் போவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி சீசன் காமெடி நடிகராக என்ட்ரி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி ஆரம்பத்தில் காமெடி நடிகர், பின்பு ஹீரோ, அப்புறம் இயக்குநர் என சென்றுகொண்டிருக்கிறார். கைமேல் பலனாக ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி., ‘சிங்கப்பூர் சலூன், ‘ரன் பேபி ரன்’ போன்ற படங்கள் ஹிட்டித்தது. இதனிடையே "மூக்குத்தி அம்மன்'’ படத்தை இயக்கி நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். அம்மனாக நயன்தாரா நடிக்க, ஆங்காங்கே போலிச் சாமியார்களின் அட்டகாசங்களை அப்பட்டமாகப் போட்டு உடைத்திருப்பார் ஆர்.ஜே.பாலாஜி. படம் வெற்றிபெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். நாயகியாக த்ரிஷாவை தேர்ந்தெடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
க்ரீன் சிக்னல்!
தமிழ் சினிமாவில், தொடர் தோல்வியால் துவண்டு கிடத்த சூர்யாவை ‘"சூரரைப் போற்று'’ படத்தின் மூலம், கம்பேக் கொடுக்க வைத்தவர் சுதாகொங்கரா. இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. பின்னர் மீண்டும் இவர்களது கூட்டணியில் "புறநானூறு'’என்ற படம் உருவாவதாக அறிவிப்புகள் எல்லாம் வெளியானது. ஆனால் அரசியல் சப்ஜெக்ட் என்பதால் சூர்யா கதையில் மாற்றம் செய்யச் சொல்ல, அதற்கு மறுத்த சுதா கொங்கரா, தனுஷை அப்ரோச் செய்திருக்கிறார். கதையைக் கேட்டு இம்ப்ரஸôன தனுஷ் படத்திற்கு க்ரீன் சிக்கலும் கொடுத்திருக்கிறார்.
மகாராஜாவுடன் நயன்!
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்து, ஹீரோயின் சப்ஜெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தனது பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடும் நயன்தாரா, இடையிடையே படத்திற்கான கதைத் தேர்விலும் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் நித்திலன் சாமிநாதன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நித்திலன் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் ‘"மகாராஜா'’ படம் கோலிவுட்டில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்க, திரைப் பிரலங்கள் நித்திலனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.