அடுத்த வாரிசு!
சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் அதை நோக்கிப் பயணித்து இப்போது தனது மார்க்கெட்டின் பீக்கில் இருக்கிறார் விஜய். இந்நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய், இயக்கத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அத்துறை சம்பந்தமான படிப்பை கனடா மற்றும் லண்டனில் படித்து முடித்தார். பின்பு ஒரு குறும்படம் இயக்கியுள்ள நிலையில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா தயாரிப்பில் இப்படம் உருவாகும் நிலையில் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு இன்னும் ஆரம்பிக்கவில்லையாம். படத்தின் கதையை மட்டும் கேட்டு, லைகா இம்ப்ரஸாகி, உடனடியாக அவரை புக் செய்து படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை கவனிக்க சொல்லியுள்ளது. இப்படத்தில் வளர்ந்து வரும் ஹீரோ நடிப்பதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ள நிலையில், அந்த லிஸ்டில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்ளிட்ட சில நடிகர்கள் இருப்பதாக முணுமுணுக்கப் படுகிறது.
மிரட்டல் கம்பேக்!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, 3 வருட இடைவெளிக்குப் பின்பு தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி' படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இப்படம் வருகிற 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைத்துறைக்கு என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா, சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளார். அதில் முதல் விஷயமாக தன்னுடைய சம்பளத்தை முன்பைவிட இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளார். அதை இப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளார். இரண்டாவது விஷயமாக பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்து விட்டார். 'மிஸ் ஷெட்டி' படத்திற்கு கூட பெரிதளவு கலந்துகொள்ளவில்லை. ஒரே ஒரு பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு அதையே எல்லா ஊடகங்களுக்கும் பகிரச் சொல்லியுள்ளார். கம்பேக்கில் கறாராக இருக்கும் அனுஷ்காவை பார்த்து மிரள்கின்றனர் திரை வட்டாரத்தினர்.
மேனன் நம்பிக்கை!
இயக்குநர் கௌதம் மேனன், "வெந்து தணிந்தது காடு' படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகிவருகிறார். இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனிடையே சமீபத்தில் கமலை வைத்து அவர் இயக்கிய 'வேட்டையாடு விளையாடு' படம் ரீ ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்த கௌதம் மேனன், தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கமல், அவரது லைனப்பில் அ.வினோத் படம், மணிரத்னம் படம், லோகேஷ் கனகராஜ் படம் என ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளதால் அதை முடித்துவிட்டுத்தான் இப்படத்தை பற்றி யோசிக்கவுள்ளார். அதனால் டேட் எப்போது கிடைக்கும் என்று முடிவாகவில்லை. முன்னதாக "விக்ரம்' படத்தை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் ஓ.கே. சொன்ன கமல், அதன் பிறகு அவரிடம் பேசவில்லை. கிட்டத்தட்ட அப்படம் டிராப் என கிசுகிசுக்கின்றனர். அதனால் சற்று பயத்தில் இருக்கும் கௌதம் மேனன், நிச்சயம் அவர் டேட் கிடைத்து விடும் என்ற நம்பிக் கையில் உள்ளாராம். மேலும் கமல் படத்தை தொடங்குவதற்குள் வடிவேலுவின் படத்தை முடித்துவிட பிளான் போட் டுள்ளார் கௌதம் மேனன். மகேஷ் நாராயணன் போல் கௌதம் மேனனும் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் பிரபலங்கள்!
"ஜெயிலர்' பட வெற்றியால் ரஜினியின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தில் ஏகப்பட்ட பிரபலங்களை படக்குழு புக் செய்து வருகிறது. அந்த வகையில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் சர்வானந்த் உள்ளிட்ட பெயர்கள் ஏற்கனவே இருக்கும் வேளையில் தற்போது இன்னும் இரண்டு பிரபலங்களை படக்குழு புக் செய்துள்ளதாம். அதன்படி தெலுங்கு நடிகர் ராணா மற்றும் நடிகை துஷாரா விஜயன் கமிட்டாகியுள் ளாராம். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்க லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்த ஆண்டுக்குள் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
-கவிதாசன் ஜெ.