தெலுங்கில் திவ்யா!
ஜி.வி. பிரகாஷ் நடித்த "பேச்சுலர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் மாடல் அழகி திவ்யபாரதி. பின்பு முகின்ராவுக்கு ஜோடியாக "மதில் மேல் காதல்', கதிருக்கு ஜோடியாக "ஆசை' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவரும் திவ்யபாரதி, தற்போது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளார். தமிழைத் தாண்டி தற்போது ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் வளர்ந்துவரும் ஹீரோவான சுடிகா- சுதிர், நரேஷ் குப்பி- இயக்கத்தில் நடிக்கிறார். மகாதேஜா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திவ்யபாரதி. இப்படம் வெளியான பிறகு தனது மார்க்கெட் உயரும் என குஷியாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் சொல்லிவருகிறாராம்.
சிம்புவுக்கு குறி!
"பொன்னியின் செல்வன்' படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள மணிரத்னம், அடுத்ததாக கமலை இயக்க வுள்ளார். இப்படத்தைத் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலமாக தயாரிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமலுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில் அதனைப் பூர்த்தி செய்ய பல யோசனைகளை மேற்கொண்டு வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாராவை அணுகியிருக்கிறார். மேலும் இப்போது பாலிவுட் நடிகை வித்யாபாலனையும் புக் செய்துள்ளார். இந்தநிலையில் கமலின் முந்தைய படமான "விக்ரம்' படம்போல் இந்த படத்தையும் ஒரு மல்டி ஸ்டார் சப்ஜெக்ட்டாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இதனால் பல முன்னணி நடிகர்களுடன் மணிரத்னம் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அந்த லிஸ்டில் சிம்புவும் இருக்கிறாராம். சிம்புவை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு, அதற்கான முதற்கட்ட முயற்சி யாகத்தான் 'பொன்னியின் செல்வன் 2' பட ஆடியோ விழாவிற்கு கமலுடன் சேர்த்து சிம்புவையும் சிறப்பு விருந்தினராக அழைத்தாராம்.
ஐஸ்வர்யா குஷி!
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா மேனன், தமிழ்நாட்டில் வளர்ந்து "தமிழ் படம் 2', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்திவந்தார். இருப்பினும் தனது பூர்வீக மொழியான மலை யாளத்தில் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தார். அப்படம் பெரிய பெயரைப் பெற்றுத்தரும் என எதிர்பார்த்த நிலையில் போதிய வரவேற்பு பெறவில்லை. இதனால் மலை யாள பட வாய்ப்பு வரா மல் இருக்க, தென்னிந் திய அளவில் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கிறது. அந்த வருத்தத்தை போக்கும் வகையில் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு வந்துள்ளது ஐஸ்வர்யா மேனனுக்கு. அந்த படம் மம்மூட்டி பட வாய்ப்பு என தெரிந்ததும் துள்ளி குதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் புதிய படமான "பஸூகா' படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இப்படத்தில் கவுதம்மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு கேரளாவில் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது. பெரிய நடிகர் பட்டாளம் நடிப்பதால் தனக்கு கண்டிப்பாக நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
நடிகராகும் டைரக்டர்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யை வைத்து "லியோ' படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார். டைரக்ஷ னுக்கிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் ஸ்டண்ட் மாஸ்டர்களான இரட்டையர்கள் அன்பரிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் நிறைந்த பட மாக உருவாகவுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். "சிங்கப்பூர் சலூன்' என்ற தலைப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வரும் படத்தில் நடித்து முடித்துள்ளார். கோகுல் இயக்கும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் "மாஸ்டர்' படத்தில் ஒரு காட்சியில் தலை காண்பித்து போயிருப்பார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
-கவிதாசன் ஜெ.