பேயாக பழகும் சமந்தா!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/touringtalkies_84.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான "தி பேமிலிமேன் 2'’ வெப் தொடர் மூலம் இந்தி திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடர் வெளியாகி ஏகப்பட்ட விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ’தி பேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமந்தா ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை அமர் கௌசிக் இயக்க, சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். ஒன்றில் இளவரசியாகவும், மற்றொன்றில் பேயாகவும் நடிக்கிறாராம். அதற்காகத் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ளப் பயிற்சியும் எடுத்து வருகிறாராம். இதனிடையே லோகேஷ் இயக்கத்தில் "தளபதி 67' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/touringtalkies1_38.jpg)
ஜெயிலரில் ஜெய்!
"பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து "ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். விஜய்யை வைத்து "பீஸ்ட்' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்த நெல்சனுக்கு, அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. படத்தின் வெளியீட்டிற்கு முன்பு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வாக பேசப்பட்டாரோ, அதைவிட வெளியீட்டுக்கு பிறகு நெகடிவ்வாக பேசப்பட்டார். இதனால் தன்மீது உள்ள நெகட்டிவ் ஷேடோவை நீக்க "ஜெயிலர்' படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துள்ளாராம். அதன்படி படத்தில் ரஜினியை போன்றே இன்னும் சில கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதற்காகத்தான் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த்ரவி போன்ற முன்னணி பிரபலங்கள் "ஜெயிலர்' படத்திற்குள் கொண்டுவரப்பட்டார்களாம். அந்தவகையில் தற்போது நடிகர் ஜெய்யும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதுகுறித்து படக்குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, இதனை உறுதி செய்த அவர்கள், "படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் குறுகிய கால அளவே வரும் என்றும், ஆனால் அந்த கதாபாத்திரம் படத்தின் டர்னிங் பாயிண்டாக இருக்கும்' எனவும் தெரிவித்தனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது
கதை கதையாம்... காரணமாம்!
"மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், முதல் படத்திலேயே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தார். அதன்பிறகு "ஆடை', "குலு குலு' போன்ற படங்களை இயக்கியிருந்தார். இதனிடையே தனது நெருங்கிய நண்பரான லோகேஷின் படங்களுக்கு அவருடன் இணைந்து தொடர்ச்சியாகத் திரைக்கதை எழுதி வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கும் "தளபதி 67' படத்திற்கும் திரைக்கதை எழுதும் பணியில் ரத்னகுமார் ஈடுபட்டுள்ளாராம். இந்நிலையில் ரத்னகுமார் அடுத்ததாக ராகவா லாரன்ஸை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு லோகேஷ் கனகராஜ்தான் கதை எழுதியுள்ளாராம். பொதுவாக லோகேஷின் படங்களுக்கு திரைக்கதை பணிகளில் ரத்னகுமார் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவை லோகேஷ் எடுத்துள்ளாராம். ஆனால் இந்த படத்தின் கதை வழக்கமான லோகேஷின் ஸ்டோரியில் இருந்து மாறுபட்டு இருக்கும் என சொல்லப்படுகிறது.
குத்தாட்ட தீபாவளி!
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் "வாரிசு' படத்தில் நடித்துவருகிறார். இவருடன், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இப்படம் "பூவே உனக்காக', "காதலுக்கு மரியாதை' போன்று குடும்பப் பின்னணி படமாக உருவாகி வருகிறதாம். இந்தநிலையில்... "வாரிசு' படத்தின் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் படங்களில் அவரது நடனத்திற்காகவே ஒரு குத்து பாடல் ஒன்று வைக்கப்படும். அந்த வகையில் இந்த படத்திலும் அப்படி ஒரு பாடலை இசையமைப்பாளர் தமன் ரெடி பண்ணியுள்ளாராம். மேலும் இந்த பாடலை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
-அருண்பிரகாஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-09/touringtalkies-t.jpg)