தமன்னா ரிட்டர்ன்!
இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான "காஃபி வித் காதல்' தோல்வியை தழுவியதால் மீண்டும் தனக்கு ராசியான அரண்மனையைக் கையில் எடுத்துள்ளார். இதனை முடித்துவிட்டு அவரது கனவு படமாகச் சொல்லப்படும் "சங்கமித்ரா' படத்தைத் தொடங்கவிருக்கிறார். சமீபத்தில் அரண்மனை நான்காம் பாகத்தில் விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வுள்ளதாகவும் ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. பின்பு சம்பள பிரச்சினை காரணமாக விஜய்சேதுபதி விலகிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. அதனால் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர்.சி முடிவெடுத்துள்ளாராம்.
இந்த நிலையில், நடிகை தமன்னாவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னொரு கதாநாயகியாக இப்படத் தில் நடிக்கிறாராம். கடந்த மூன்று ஆண்டுகளாக தமன்னா தமிழில் நடிக்காத நிலையில்... தற்போது ரஜினியின் "ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக சுந்தர் சி. இயக்கிய "ஆக்ஷன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்ஸான ரஜினி! சிக்கிய சிம்பு!
"பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. பின்பு மிஷ்கினுடன் இணையவுள்ளதாகவும் சொல் லப்பட்டது. இப்படி அடுத்த பட இயக்குநர் லிஸ்டில் முன்னணி இயக்குநர்கள் இடம்பிடிக்க திடீரென ஒரு இளம் இயக்குநர் என்ட்ரி கொடுத்துள்ளார். "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மூலம் தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த தேசிங் பெரியசாமி, சிம்புவின் புது படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை கமலின் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல்' தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளாராம். தேசிங் பெரியசாமி, தனது இரண்டாவது படமாகப் பெரிய ஸ்டாரான ரஜினியுடன் இணைந்து படம் பண்ணவுள்ளதாக இருந்தது. சில காரணங்களால் அது நடக்காமல் போக, தற்போது லிட்டில் ஸ்டாருடன் இணையவுள்ளது, படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கைவிடாத சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தற்போது "மாவீரன்' படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பின்பு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு மத்தியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு வெங்கட் பிரபு நாக சைதன்யா படத்தில் பிசியாக இருக்க, சிவகார்த்தி கேயனும் அவரது லைனப்பில் பிசியாக இருக்க, இவர்கள் இணையும் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமலிருந்தது.
இதனால் இப்படம் தள்ளிப் போகிறதா அல்லது கைவிடப்படுகிறதா என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாக சைதன்யா படம் மே மாதம் வெளியாகவுள்ளதால் அந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவகார்த்தியேன் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. இப்படத்தை முடித்துவிட்டு கன்னட நடிகர் கிச்சா சுதீப் படத்தை இயக்கவுள்ளாராம். இதனால் வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் நிச்சயம் எடுக்கப்படும் என்றும், கைவிடப்படவில்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணன்-தம்பி கெமிஸ்ட்ரி!
தெலுங்கில் தனது முதல் படமான "வாத்தி' படம் அங்கு வெற்றிபெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ், தற்போது "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தனது 50வது படத்தை அவரே இயக்கவுள்ளாராம். இதனால் கிடைக்கும் நேரங்களில் ‘டி - 50’ படத்தின் பணிகளைக் கவனித்து வருகிறாராம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கப் படத்திற்கு 'ராயன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கச் செல்வராகவனை அணுகியுள்ளாராம் தனுஷ். சமீப காலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன், தனுஷ் இயக்கவுள் ளார் என்பதாலும் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போனதாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். வட சென்னை பேக் ட்ராப்பில் ஆக்ஷன் அதிகம் நிறைந்த ஒரு படமாக இப்படம் உருவாகிறதாம். படப்பிடிப்பு மே மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-கவிதாசன் ஜெ.