டோலிவுட்டில் சிவகார்த்திகேயன்!
தமிழ் ஹீரோக்களான தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரும் நேரடி தெலுங்கு படங்கள் மூலம் டோலிவுட்டில் கால் பதித்துள்ள நிலையில், தற்போது அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளார் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் "டாக்டர்'’படம் வெளியானது. இது தெலுங்கு டப்பிங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவர் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான "SK 20' தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளதாம். கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "ஜதி ரத்நாலு' படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், படத்தில் நாயகியாக ரித்து வர்மா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சிவகார்த்திகேயன் படத்தில் இவரை நடிக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து முடிந்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர். தள்ளி வைப்பு ரகசியம்?
பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகி உள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகும் என அறிவிக்கப் பட்டாலும் கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு, இறுதி யாக ஜனவரி 7-ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், தற்போது பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதி கரிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாகப் படக்குழு தெரிவித்தது. ஆனால், அது மட்டுமே படத்தின் ஒத்திவைப்புக்கு காரணமில்லை எனத் தெலுங்குத் திரையுலகில் கூறப்படுகிறது.
அண்மையில் ஆந்திராவில் திரையரங்க டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்துவதாக அறிவித்த அம்மாநில அரசு, டிக்கெட் விலைகளை வெகுவாகக் குறைத்தது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக படங்களின் வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாம். இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பிரச்சனை எழுந்துள்ள சூழலில், இதனை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனிடையே, அரசின் இந்த கடுமையான விதிமுறைகள் காரணமாக ஆந்திராவில் கடந்த சில மாதங்களில் சுமார் 180 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாம். இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் அண்மையில் வெளியான புஷ்பா படம், ஆந்திராவில் முதல் நாளில் 35 கோடி வசூல் செய்திருக்க வேண்டிய நிலையில், வெறும் 13 கோடி மட்டுமே வசூல் செய்ததாம். இதேநிலை, ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் ஏற்பட்டால், நஷ்டமடைய வாய்ப்பிருப்பதாகக் கருதும் படக்குழு, இப்பிரச்சனை முடிந்த பிறகு படத்தை வெளியிடலாம் எனத் திட்டமிட்டு வருகிறதாம்.
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உதயநிதி!
"ஆர்ட்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். "பரியேறும் பெருமாள்', "கர்ணன்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் பணிகள் முடிந்த பிறகு உதயநிதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது. மாரி செல்வராஜ், ஏ.ஆர். ரஹ்மான், ஃபகத் ஃபாசில், வடிவேலு என பல பிரபலங்கள் அடுத்தடுத்து இப்படத்தின் டீமில் இணைந்து வருவது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தச் சூழலில், இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது "நெஞ்சுக்கு நீதி', மகிழ் திருமேனியின் படம் ஆகியவற்றில் நடித்துவரும் உதயநிதி, மாரி செல்வராஜ் படத்தை முடித்த பிறகு அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
-எம்.கே.