"பாகுபலி' வரிசை படங்கள், "ஆர்.ஆர்.ஆர்.' போன்ற படங்களின் வெற்றி காரணமாக இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான "ஆர்.ஆர்.ஆர்.' படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்தது. இந்த இமாலய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகத் தெலுங்கு சூப்பர்ஸ்டாரான மகேஷ்பாபுவை வைத்து அடுத்த அப்படத்தை இயக்க உள்ளார் ராஜமௌலி. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஃபாரஸ்ட் அட்வென்ச்சர் ஜானரில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை ஆப்பிரிக்காவில் உள்ள காடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
"இவ்வாண்டின் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கும்...' எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறாராம் இயக்குநர். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடக்கும்பட்சத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் இணைவார் எனச் சொல்லப்படுகிறது.
பீஃப் பாலிடிக்ஸில் கிடாரி ஹீரோயின்!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத விஷயமாக மாறியுள்ளது மாட்டுக்கறி சர்ச்சை. கோமாதாவைக் கறியாக்கிச் சாப்பிடக் கூடாதெனவும், அதன் சிறுநீரை மட்டுமே வேண்டுமானால் குடிக்கலாம் என்றும் ஒரு சிறு கூட்டமும், மாடு தான் நமது பராம்பரிய உணவு என்று ஒரு பெரும் கூட்டமும் வாதிட்டு வருகின்றன. இது பல நேரங்களில் வன்முறை அளவுக்குச் சென்று உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில், கிடாரி, வெற்றிவேல் போன்ற படங்களில் நடித்த நிகிலா விமல் இதுகுறித்து பேசியது சமீபத்தில் பேசுபொருளாகியுள்ளது. நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியில், "பசுவைக் கொல்லக் கூடாது என்ற சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அது நம் பிரச்சனை இல்லை. விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவும் இல்லை. மாட்டைக் கொல்லக் கூடாது, ஆனால் கோழியைக் கொல்லலாம் என்பது என்ன நியாயம்? கோழியும் உயிர்தானே! எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றால் எல்லாரும் சைவமாகத்தான் மாற வேண்டும். அது சாத்தியமில்லை'' எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், "அவரது லாஜிக் சரிதானே' என்ற ஆதரவுக் குரல்கள் நிறையக் கேட்கத் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா போகும் அண்ணாத்த!
"அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியானாலும், படப்பிடிப்புக்கான வேலைகள் இன்னும் தொடங்கப் படாமலேயே உள்ளன. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் பரவிவந்தாலும், இவை எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்குப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஜூலை மாதம் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இதனிடையே, படப்பிடிப்பிற்கு முன்பு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கியிருந்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பிக்-அப் ஆகும் பத்து தல!
கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, அடுத்ததாக 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "பத்து தல' படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத் தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்ற னர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
"பத்து தல' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், "வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்துகொண்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், "வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளதால் தற்போது "பத்து தல' படத்தின் படப்பிடிப்பு மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
அம்மாவுக்கு ஆடி கார் பரிசு!
"ஹேய் சினாமிகா' படத்தின் தோல்வியில் சோர்வாக இருந்த அதிதிராவிற்கு உற்சாக டானிக்கை புகட்டி யிருக்கிறார் அமீர்கான். ஆம்... அவரின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள் ளாராம். இந்த உற்சாகத்தில் அதிதி, தனது அம்மாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடி காரை வாங்கி பரிசாக வழங்கி யுள்ளார்.
-எம்.கே.