எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள படம், "பொன்னியின் செல்வன்', கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், ராஜராஜசோழன் குறித்து சொன்ன கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
"ராஜராஜ சோழனுக்கு காவி நிறம்..?''
தமிழனின் ரத்தத்தோடு கலந்தது சினிமா என்பது உண்மைதான். ஆனால் அந்த ரத்த அணுக்களில் ஜாதி, மதமும் ஊறிக் கலந்துவிட்டதுதான் அரசியல் அக்கப்போர். இலக்கியம், சினிமா எல்லாம் "அவங்க' கையில் இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமாவை அவங்க கையில் இருந்து எடுத்தது திராவிட இயக்கம்தான். அதன் மூலமாகத்தான் தமிழகம் இப்போதுவரை மதச்சார்பற்ற மாநிலமாகவும், வெளியிலிருந்து வரும் அழுத்தங்களின் விளைவை தடுத்து நிக்குதுன்னும் நான் நினைக்கிறேன். சினிமாங்கிறது வெகுமக்களை மிக எளிதாக சென்றடையக்கூடிய கலை வடிவம். இந்த கலையை நாம இப்ப சரியா கையாளணும். அதில் தவறினால் நம்முடைய அடையாளங்களை அவங்க எடுத்துடுவாங்க. ஏற்கெனவே அப்படி எடுத்திட்டிருக்காங்க. வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கறதா இருக்கட்டும். இப்படி தொடர்ந்து நடக்குது. சினிமாவிலும் இது நடக்குது. அதனால நம்முடைய அடையாளங்களை நாம காப்பாத்தியாகணும். இதுக்காக நாமெல்லாம் ஒற்றுமையா இருக்கணும். அதுக்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவைத் தருகிறேன்.
"ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது''
"பொன்னியின் செல்வன்' படத்தின் சிறப்புக்காட்சியை விக்ரம், கார்த்தி ஆகியோருடன் பார்த்த கமல்ஹாசனிடம், வெற்றிமாறன் சொல்லியிருந்த கருத்துகள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் மட்டுமே இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர். தூத்துக்குடியை டூட்டிகொரின் எனச் சொன்ன மாதிரிதான் இதுவும். எங்களுக்கு வெவ்வேறு மதங்கள் இருந்தன. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் செய்தார். இவையெல்லாம் வரலாற்றில் இருப்பவை.
"பொன்னியின் செல்வன்' படம் வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தைப் புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம். மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்'' என்றார்.
"இளைஞர்களின் நேரத்தை திருட போட்டி நடக்கிறது'' -நடிகர் விஜய் சேதுபதி
"யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள். ஏனென்றால் நேரம் இருக்கிறது. இன்றைக்கு நம்முடன் சண்டை போட்டவனை கல்லூரி முடிந்த பின்னர் சந்திக்கும்போது அவன் நமக்கு நண்பனாகிறான். எல்லாவற்றுக்கும் நேரம் கொடுங்கள். உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல் ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம், உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளைய செயல்பட விடாமல் தடுப்பது எப்படி என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான போட்டி நடக்கிறது. சமூக வலைத்தளங்கள் வாயிலாக சண்டை போட வைக்கலாம், அசிங்கமாக பேச வைக்கலாம், அதன் மூலம் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறார்கள்... நம்பி விடாதீர்கள்.
டெக்னாலஜி உங்களைத் தின்னப் பார்க்கிறது. உங்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்து காசு சம்பாதிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். என்னவெல்லாம் சாப்பிட வைக்கலாம், எதெல்லாம் சாப்பிட்டால் நீங்க நோயாளி ஆவீர்கள், நோயாளி ஆனால், என்ன மருந்து சாப்பிடுவீங்க., எவ்ளோ நாள் நோயாளியா உங்களை கஷ்டப்பட வைக்க முடியும், உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது...'' இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.
-கீரன்