பூமர் அங்கிளான நேசமணி!
கோலிவுட்டில் காமெடி நடிகராக கலக்கி வரும் யோகி பாபு, அவ்வப்போது கதாநாயகனாகவும் தலைகாட்டுகிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படம், 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்' படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கத்தில் ஒரு படம், ஸ்வதீஸ் இயக்கத் தில் ஒரு படம் என அடுத்தடுத்து அவரது ஹீரோ லைன்அப்பும் டைட்டாக உள்ளது. ஸ்வதீஸ் இயக்கும் படத்தில் யோகி பாபுவுடன் நடிகை ஓவியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு "காண்ட்ராக்டர் நேசமணி' என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பெயர் "பூமர் அங்கிள்' என மாற்றப்பட்டுள்ளது. பட வேலைகள் ஆரம்பித்த போது ’காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற வார்த்தை அகில உலக ட்ரெண்டிங் கில் இருந்தது. ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான ’காண்ட்ராக்டர் நேசமணி’ திடீரென உலகம் முழுவதும் ட்ரெண்டாக, அதையே படத்திற்கு பெயராக வைத்தது யோகி பாபு படக்குழு. தற்போது ’காண்ட்ராக்டர் நேசமணி’ இடத்தை பூமர் அங்கிள் ட்ரெண்ட் பிடிக்க, சோசியல் மீடியா தட்பவெப்பம் அறிந்து படத்தின் பெயரை மாற்றியுள்ளது படக்குழு.
அஜித் பட டைட்டில் ரெடி!
அஜித்-எச்.வினோத் கூட்டணியில் உருவான "வலிமை' திரைப்படம் கமர்ஷிய லாக எதிர்பார்த்த கலெக்சனை அள்ளினாலும், படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் எச்.வினோத்திற்கு ரொம்பவே அப்செட்டை கொடுத்ததாம். பெரிய ஸ்டாருடன் படம் பண்ணும்போது ரைவல்ரி ஸ்டாரின் ரசிகத் தரப்பு நெகட்டிவ் கமெண்ட்ஸ் பரப்புவது வழக்கம்தான் என்றாலும், "நேர்கொண்ட பார்வை'யைவிட தான் எழுதி இயக்கிய "வலிமை' அதிகம் குறிவைக்கப்பட்டதே அந்த அப்செட்டிற்கு காரணமாம். அதனால் அடுத்த படமான ’ஏகே 61’ஐ மிகக்கவனமாக இயக்கிவருகிறாராம். ஹைதராபாத் ஷெட்டியூலை முடித்துவிட்டு புனே ஷெட்டியூலில் படக்குழு கவனம் செலுத்திவரும் நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 13ஆம் தேதி படத்தின் டைட்டில் அறிவிப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாம். யூரோப் டூரில் இருக்கும் அஜித் இந்தியா திரும்பிய பிறகு, அஜித்திற்கும் நாயகி மஞ்சு வாரியருக்கும் இடையேயான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
ரெடி ஜூட் இந்தியன்-2!
"விக்ரம்'’வெற்றிக்கு பிறகு, கமலும் ராஜ்கமல் நிறுவனமும் பரபரப்பு மோடிலேயே உள்ளதாம். அது மட்டுமல்ல, விக்ரம் வெற்றி இன்னொரு விஷயத்திலும் எதிரொலித்துள்ளது. கொரோனா முடக்கம், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் லைகா, ஷங்கர் இடையேயான மனக் கசப்பால் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2க்கும் மறுஉயிர் கிடைத்துள்ளதாம். பின்னணியில், உதயநிதியும் அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இருப்ப தாகக் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து உதயநிதி தரப்பிலிருந்து லைகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. பேசப்பட்ட டீல் இரு தரப்பிற்கும் கையைக் கடிக்காத வகையில் இருக்க, லைகாவும் இந்தியன் 2 படத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாம். ராம் சரண் படத்தில் பிஸியாக இருக்கும் ஷங்கர், இரு படங்களிலும் ஒருசேர கவனம் செலுத்தவுள்ளாராம். ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கு கிறதாம். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விவேக் காலமாகி விட்டார். காஜல் அகர்வாலோ திருமணம் செய்து குழந்தையே பெற்றுவிட்டார். நிலைமை இப்படி இருக்க, எல்லாம் கைகூடி வரும் நேரத்திலேயே படப்பிடிப்பைத் தொடங்கிவிட வேண்டும் என படக்குழு ஆயத்தமாகிவருகிறது. ஆக, இவர்கள் தொடர்பான காட்சிகள் ரீ-ஷூட் செய்யப்படுமா அல்லது கதையில் மாற்றம் செய்யப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
ஆடி அடங்கிய கங்கனா!
வாயைக் கொடுத்து ஊர் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கங்கனா ரணவத் கொஞ்ச நாட்களாக வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறார், கவனிச்சீங்களா? "தாக்கட்'’ படத்தின் தோல்விதான் அதற்கு காரணமாம். 85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ’"தாக்கட்', வெறும் நான்கு கோடி மட்டுமே பாக்ஸ்ஆபிஸில் கலெக்ட் செய்தது. அந்தத் தோல்வியைக்கூட கங்கனா தாங்கிக்கொண்டாராம். அதை வைத்து வரும் மீம்ஸ்களையும் கிண்டல்களையும் அவரால் எதிர்கொள்ள முடியலையாம். "தாக்கட்'’படத்திற்கு வாங்கிய கடனை அடைக்க தயாரிப்பாளர் அவரது அலுவலகத்தை விற்றுவிட்டதாக கங்கனாவுக்கு பிடிக்காதவர் யாரோ கிளப்பிவிட, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரோ மறுப்பு தெரிவித்தார். ஊர் முழுக்க வம்பிழுத்து வைத்துள்ளதால் யார் இப்படி கிளப்பிவிடுவது என்பது தெரியாமல் திணறுகிறாராம் கங்கனா
-இரா.சிவா