திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில், லட்டு மூலமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீசிய குண்டு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சியமைத்து 100-வது நாளான அக்டோபர் 18-ஆம் தேதி, தலைநகர் அமராவதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இந்தக் கூட்டத்தில் பேசியவர், "திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வழங்கப்படும் பிரசாதத்தில்கூட ஊழல் நடைபெற்றுள்ளது. பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கு கொழுப்பு கலந்து லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தவறைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார். திருப்பதி லட்டுவில் நெய்க்குப் பதிலாக விலங்குக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என்கிற குற்றச் சாட்டு ஆந்திராவைத் தாண்டி இந்தியாவையே பரபரப்பாக்கியுள்ளது.
இதற்குப் பதிலளித்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், திருப்பதி திருமலை தேவஸ் தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரு மான சுப்பாராவ், "மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் முதலமைச்சர் சந்திரபாபு. இப்படிப் பேசுவது சரியல்ல. நான் என் குடும்பத்தோடு வந்து திருப்பதி யில் சத்தியம் செய்யத் தயா ராக இருக்கிறேன். சந்திர பாபுநாயுடு சத்தியம் செய்ய தயாரா?''’என சவால் விட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து பொது மக்களிடம் சந்திரபாபு நாயுடு செய்யும் மத அரசியல் குறித்து கருத்துக்களை வாங்கி பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அதற்கெதிராக, செப்டம்பர் 19-ஆம் தேதி தேசிய மீடியாக்களுக்கு ஒரு அறிக்கை லீக் செய்யப்பட்டது. அதில், கடந்த ஜூன் மாதம் திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யை ஆய்வு செய்ததாகவும், அந்த ஆய்வின்படி மாட்டுக் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை அதில் கலந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்றது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய்க்கு நெய் கொள்முதல் செய்யப் படுகிறது. தினமும் லட்டு தயாரிக்க 14 டன் நெய் வரை பயன்படுத்தப் படுகிறது. பல ஆண்டுகளாக கர்நாடக அரசு பால் கூட்டுறவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நந்தினி நெய் அதிகளவு கொள்முதல் செய்யப்பட் டது. கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் முதல்., இரு தரப்புக்குமான முரண்பாட் டில் நந்தினி நெய் கொள்முதலை நிறுத்திவிட்டது தேவஸ்தானம். வேறு 5 நிறுவனங்களிலிருந்து நெய் கொள் முதல் செய்யத் துவங்கினர். அதில் சில நிறுவனங்கள் வழங்கிய நெய் கலப் படம், தரமற்றது என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கோவில் அலுவலர் கள் தரப்பில் பேசியபோது, “"ஜெகன் ஆட்சிக்கு வந்ததும் அறங்காவலர் குழு தலைவராக தனது சித்தப்பா சுப்பா ரெட்டியை நியமித்தார். கோவில் செயல்அலுவலராக தலைமைச்செய லாளர் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவர். அப்படி நியமிக்கப் பட்டவரை டம்மியாக வைத்தனர். ஐ.டி.ஆர்.எஸ். அதிகாரியும், ஜெகன் குடும்பத்தின் உறவினருமான தர்மா ரெட்டி ஏ.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். இவர் இ.ஓ.வைவிட சூப்பர் பவர் அதிகாரியாகச் செயல் பட்டார். தேவஸ்தானத்தில் எங்கெல்லாம் ஊழல் செய்யவேண்டுமோ அங்கெல்லாம் ஊழல் செய்தார். தன்னைக் கேட்காமல் நிர்வாகத்தில் ஒரு துரும்பும் அசையவிடாமல் செய்தார். அறங்காவலர் குழு தலைவராக இருந்த சுப்பாரெட்டி, அதன்பின் அறங்காவலர் தலைவரான கருணாகர் ரெட்டியையே டம்மியாக வைத்திருந்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இங்கிருந்து உடனே போய்விட்டார். கோவில் செயல்அலுவலராக ஷ்யமளா ராவ் நியமிக்கப்பட்டதும், அவர் நிர்வாகத்தில் ஆய்வுநடத்தினார். கோவிலின் ட்ரேட் மார்க்கான லட்டு தரமற்றதாக இருப்பதாக பக்தர்கள் ஏன் குறை சொல்கிறார்கள் என கேள்வியெழுப்பி னார். தரமற்ற பொருட்களைத் தந்ததால் தரமான லட்டு வழங்கமுடியவில்லை என குற்றம்சாட்டினார்கள் லட்டு தயாரிக்கும் பணியாளர்கள்.
நெய்யில் கலப்படம் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. நெய்யை அறிவியல்ரீதியாக ஆய்வு செய்யவேண்டும் என புகழ்பெற்ற பால் நிபுணர்களான மருத்துவர்கள் விஜயபாஸ்கர்ரெட்டி, சுரேந்திரநாத்ரெட்டி ஆகிய இருவரை அழைத்து ஆலோசித்தவர், அதுவரை பயன்படுத்திவந்த நெய் சாம்பிள்களை குஜராத்திலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தார். உடனே பழைய ஒப்பந்ததாரர்கள் நீக்கப்பட்டு புதிய ஒப்பந்ததாரர்களுக்கு பொருள் சப்ளை செய்யும் டெண்டர்கள் வழங்கப்பட்டது. ஒரு கம்பெனி பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுவிட்டது. அதேபோல் உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதித்து வாங்க விஜயபாஸ்கர், சுரேந்திரநாத், டாக்டர் மகாதேவன், ஸ்வர்ணலதா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுதான் பர்ச்சேஸ் செய்கிறது. ஜூன் மாதம் வெளிவந்த ரிப்போர்ட்தான் இப்போது கசியவிடப்பட்டுள் ளது''’என்கிறார்கள்.
இதுகுறித்து ஆந்திர அரசியல் வட்டாரங் களில் கேட்டபோது, "ஜெகன்மோகன் ரெட்டியை அரசியலிலிருந்து எழமுடியாத அளவுக்கு நசுக்கி விடவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அவரை கைதுசெய்து சிறையில் தள்ளும்போது, அனுதாபம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, ஜெகன்மோகன் இந்து மக்களுக்கு விரோதமானவர், அவர் கிறிஸ்துவர் என்பதால் இந்து மக்களின் ஆச்சாரங்களை திருப்பதியிலேயே கடைப்பிடிக்கவில்லை என மக்களிடம் பிரச்சாரம் செய்து ஒதுக்கிவைக்கவே லட்டு விவ காரத்தை கையிலெடுத்துள்ளார். ஏற்கனவே நடிகை ஒருவரின் புகாரின்கீழ் 3 காவல்துறை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப் போது திருப்பதியில் சர்வாதி காரிபோல் செயல்பட்ட தர்மா ரெட்டி குறிவைக்கப்பட்டுள் ளார். அவர் சிக்குவதன்மூலம் இன்னும் பல அதிரடிகளை நடத்த திட்டமிடுகிறார், அதன் வெளிப்பாடுதான் இது'' என் கிறார்கள்.
இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி, "மோசமான அரசியலுக்காக கடவுளைப் பயன்படுத்துகிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. மக்களை திசை திருப்பவே லட்டு தொடர்பான கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். முதல்வராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொய் கூறுவது நியாயமா?'' என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சை இந்துக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் பார்க்காமல் தீர விசாரித்து பக்தர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டிய கடமை ஆந்திர அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் உள்ளது.
____________
நெய்யை வைத்து அரசியல்!
திருப்பதி தேவஸ்தான லட்டு விவகாரத்தில், நெய் தயாரிப்பு நிறுவனமான திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட். நிறுவனம் ப்ளாக் லிஸ்ட்டில் கொண்டுவரப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக, ஏ.ஆர். நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லைனி மற்றும் கண்ணன் கூறும்போது, "திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களில் நெய் அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. 25 வருடத்திற்கு மேல் இத்துறையில் இருந்துவருகிறோம். எங்களது நெய்யை பல இடங்களுக்கு அனுப்புகிறோம். அவற்றின் தரத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. எங்களது தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல நிறுவனங்கள் நெய் அனுப்பியுள்ளன. நாங்கள் அனுப்பியது 1% நெய் மட்டுமே. 99 சதவீதம் மற்றவர்களிடம் வாங்கி வருகிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் பரிசோதனை செய்துள்ளோம். தரத்தில் எந்த குறையுமில்லை. உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் ஐ.எஸ்.ஐ. அக்மார்க் ஆகியோரின் ஆய்விலும் இதுவரை எந்த குறையும் இல்லை'' என்றனர்.
ஏ.ஆர். டெய்ரி ஃபுட் (பி) லிட். உரிமையாளர் ராஜசேகர் கூறும்போது, "நாங்கள் அனுப்பிய நான்கு லோடு நெய்க்கு உண்டான பணத்தை தேவஸ்தானத்திலிருந்து ஏற்கெனவே பெற்றுவிட்டோம். அப்படியிருந்தும் இரண்டு மாதத்துக்கு முன்பு நாங்கள் அனுப்பிய நெய் தரமில்லை என்றார்கள். நாங்கள் அனுப்பிய நெய் தரமாகவே இருக்கிறதென்ற ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறோம். அதைத் தொடர்ந்துதான் மற்ற ஆய்வுகளும் நடந்து, பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. நெய்யை வைத்து அரசியல் செய்கிறார்கள்'' என்றார்.
-சக்தி