"பில்டப் பண்றமோ, பீலா விடுறமோ, அது முக்கியமில்லை, நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப் பாக்கணும் -இது "இங்கிலீஸ்காரன்' படத்தில் வடிவேலுவின் காமெடி பஞ்ச். அப்படியொரு பீலாவிட்டு "ஹெலிகாப்டரில், விலை உயர்ந்த காரில் பவனி வருவதோடு, ஹெலிகாப்டரில் பால் வியாபாரம் செய்கிறோம், இருபத்தி மூன்று நாடுகளில் வர்த்தகம் நடக்கிறது, மலேசியாவில் இரண்டாயிரம் கோடிக்கு சொத்து இருக்கு, எங்களிடம் ஒரு லட்சம் கொடுத்தால் ஆறு மாதத்தில் நான்கு லட்சமாகத் தருவோம்' என்றெல்லாம் கலர் கலராக கதைவிட்டு, பலரிடமும் பல ஆயிரம் கோடிகளை ஆட்டையைப் போட்டுள்ளதாக கும்பகோணம் பா.ஜ.க. பிரமுகர்கள் மீது காவல் துறையில் புகாராகி பரபரக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். இருவரும் சொந்தமாக ஹெலி பேட் வைத்துக்கொண்டு ஹெலிகாப்டரிலேயே அடிக்கடி வலம் வருவதால், இவர்களை "ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என்றே பலரும் அழைக்கின்றனர். கிரிஷ் என்கிற பெயரில் வெளிநாட்டு மாடுகளை கொண்டு பால்பண்ணை யும், விக்டரி என்கிற பெயரில் சிட்ஃபண்ட் உள்ளிட்ட பல தொழில்களையும் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பிற்காக பா.ஜ.க.வில் ஐக்கியமானதோடு அமித்ஷா, மோடியோடு டின்னர் சாப்பிட்டேன், காபி சாப் பிட்டேன் என அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடமும் கூறி ஒருவித பிம்பத்தை உண்டாக்கி வைத்துள்ளனர்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு மேல்மட்டத் தொடர்பால் பணத்தை நான்கு மடங்காக்க முடியுமென்று நம்பிய பலரும் அவரது சிட்ஃபண்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தபோது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி ஆசையைத் தூண்டியவர்கள், கோடிக்கணக்கில் முதலீடு செய்தபோது ஏமாற்றத் துவங்கினர். இதில் ஏமாற்றப்பட்ட கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஸ்பானு தம்பதிகள், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகாரளித்ததோடு, முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகாரளித்துள்ளனர்.
அதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "கும்பகோணம் சர்வமங்கலம் திருமண மண்டப உரிமையாளர் ரகு மூலம் எங்களுக்கு எம்.ஆர். கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள் பழக்கமாகினர். பிராமண சமூகத்தவரானாலும் எங்களை அம்மா, அப்பா என்றழைத்து நெருங்கிப் பழகினார்கள். கோல்ட் வியாபாரத்திலிருக்கும் தங்களிடம் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் மும்மடங்கு லாபமீட்டலாமென்று கூறினார்கள். எங்கள் மார்க்கத்தில் வட்டி வாங்கக்கூடாது, இது பிசினஸ் தானேயென்று வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ.15 கோடிவரை கொடுத்தோம். சொன்னபடி செயல்படாததால் பணத்தைத் திருப்பிக் கேட்டால் அடியாட்களைக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மத்தியில் எங்கள் ஆட்சிதான் என்று கூறியும் அதிகாரத்தோடு மிரட்டுகிறார்கள். எங்கள் பணத்தை மீட்டுத் தாருங்கள்'' என்றனர்.
இரட்டை சகோதரர்களின் பின்புலம் குறித்து விசாரித்ததில், "சொந்த ஊர் திருவாரூர், நாகை மாவட்டத்திற்கிடைப்பட்ட கிராமம். கும்பகோணத் தில் மின்சாரத்துறை ஏ.இ.யாக பணியாற்றிய அவர்களுடைய தந்தை எம்.ராமதாஸ், லஞ்சத்தில் கைதேர்ந்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் குடியேறினார் கள். கொற்கை அருகே கிரீஷ் என்ற பெயரில் பால் வியாபாரம் செய்கிறார்கள். காலையில் கறந்த பாலை ஹெலிகாப்டர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பலரையும் நம்பவைத்தனர். துபாய், இங்கிலாந்து, மலேசியாவில் எல்லாம் வர்த்தகம் செய்வதாக பில்ட்-அப் செய்தனர். உண்மையில் தங்கம், வைரம் கடத்தல்தான் அவர்களின் முக்கிய தொழில். ராஜஸ்தான் சேட்டு ஒருவர் மூலமாக கவரிங் நகைகளைக்கூட தங்கம்போல 916 முத்திரையிட்டு விற்றுள்ளனர். இவற்றையெல்லாம் மூடி மறைக்க, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசியிருக் கிறார். முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அ.தி.மு.க. தலைமை கொடுத்த பண விவகாரத்தில் கைதான பிரபல ரவுடி மீது குண்டாஸ் போடாமலிருக்க பேரம் பேசிய காக்கிகளே இதிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் தப்பவைக்கும் முயற்சிகள் நடக்கின்றன'' என்றார்.
கும்பகோணம் வர்த்தகர் சங்கப் பிரமுகர் கூறுகையில், "சில வருடங்களுக்கு முன்பு கணேஷின் மகன் அர்ஜுனுக்கு முதல் பிறந்த நாளில், ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வாழ்த்துவதுபோல் பரபரப்பாகக் கொண்டாடினர். உரிய அனுமதியின்றி ஹெலிகாப்டரைப் பறக்க விட்டது தொடர்பாக விசாரிக்க வந்த அதிகாரி களைச் சரிக்கட்டியதோடு, தங்களது பாதுகாப்புக் காக பா.ஜ.க.வில் இணைந்துகொண்டனர். மோடி, அமித்ஷாவோடு நெருக்கமாக இருப்பதாகவும் காட்டிக்கொண்டனர். அதற்கேற்ப அப்பகுதிக்கு வந்த பா.ஜ.க. தலைவர் முருகனும், கருப்பு முருகானந்தமும் அவர்களின் வீட்டில் உணவருந்தியதை விளம்பரமாக்கிவிட்டனர். அதோடு, கணேஷுக்கு பா.ஜ.க.வின் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பதவியைப் பெற்றனர். எம்.எல்.ஏ. சீட்டுக்கும் முயற்சித்து கிடைக்காததால் அடுத்து எம்.பி. சீட்டுக்குக் குறிவைத்துள்ளனர். சட்டத்துக்குப் புறம்பான தொழிலில் ஈடுபடும் அவரிடம் இருக்கும் பணத்திற்கு கணக்குக்காட்டவே மாட்டுப்பண்ணை, பால் வியாபாரத்தை வைத்துள்ளார். ஸ்ரீநகர் காலனியிலுள்ள அபார்ட் மென்ட் ஒன்றில் வெள்ளைக்காரர் ஒருவர், லேப்டாப்புடன் நடமாடுகிறார். அவருக்கு உணவு இவர்களின் வீட்டி லிருந்து செல்கிறது. தீர விசாரித்தால் உண்மை வெளிவரும்'' என்றார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர், "இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த விவகாரத்தில் சிக்கியவர்கள் யாரும் சாதாரண ஆட்கள் கிடையாது. கோடீஸ்வரர்களும், டாக்டர்களும், பேராசிரியர்களும், அதிகாரிகளும்தான் பெரும்பாலும். கோடி கோடியாகப் பணத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு வரி ஏய்ப்பு செய்யும் பலரும், அவர்களுடைய பணத்தை இவர்களிடம் கொடுத்து ஏமாந்திருக் கின்றனர். திட்டம் போட்டுத்தான் இப்படியானவர்களுக்குக் குறிவைத்து இரண்டு சகோதரர்களும் ஏமாற்றி யிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே கணக்கில் வராத பணத்தைத்தான் அவர்களிடம் கொடுக்கிறார்கள், அவர்களுக்கு இவர்களும் கணக்கில் வராத பணத்தைக் கொடுப்பதால் இதுகுறித்து புகார் அளிப்பது சிக்க லாகும் என்பதையே தங்களுக்கு சாதக மாக்கியுள்ளனர் இந்த இரட்டைச் சகோதரர்கள். ஏமாற்றப்பட்டுள்ள ஒவ்வொருவரும் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை கொடுத்துள்ளனர். குறிப்பாக, மறைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்து அவரை முழுமையாகச் சுரண்டி பல ஆயிரம் கோடிகளைக் குவித்து ராஜா போல் வாழ்ந்து வந்தவரும், இவர்களிடம் பல கோடிகளை இழந்துவிட்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார். பணம் கொடுக்கல் வாங்கல் லிஸ்ட்டை வருமானவரித்துறை கையிலெடுத்து, அவர்களின் வருமானத்தைச் சோதித்துக் கணக்கிட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும். கணக்கில் வராத மொத்தப் பணத்தையும் அரசு கஜானாவிற்கு கொண்டுசெல்ல வேண்டும். அப்போதுதான் ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் திருந்துவார்கள்''’என்கிறார் கோபத்துடன்.
இந்த விவகாரத்தில் ஹெலிக்காப்டர் சகோதரர்களுக்கு மட்டும் சம்பந்தமில்லை. இன்னும் சிலர் உள்ளனர் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் குருமூர்த்தியிடம் கேட்டோம். "ஹெலிகாப்டர் சகோதரர்கள் செய்த தவறுக்கு உறுதுணையாக இருந்தது பேருலால் என்கிற மார்வாடிதான். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் கும்பகோணத்தில் மகாலெஷ்மி என்கிற நகைக்கடை நடத்திவருகிறார். கணேசன், சாமிநாதனிடம் விசாரணை நடத்துவது போல இவர்களிடமும் விசாரிக்க வேண்டும்''’என்கிறார். எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனிடம் விளக்கம் கேட்பதற்காக அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். வாசல் கேட் பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர்கள் அடிக்காத குறையாக விரட்டினர். அவர்களின் மேனேஜர் நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டோம், அவர் எடுக்க மறுத்துவிட்டார்.
புகார் குறித்து கேட்பதற்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு போன் செய்தோம். அவரது போனை எடுத்தவர், "ஐயா கொஞ்சம் பிசியாக இருக்காங்க' என்றார். "எஸ்.பி. நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்' என்றனர் காவல் கண்காணிப்பாளர் அலுவலர்கள். ஒருகாலத்தில் கோல்மால்களுக்கு கும்பகோணம் என்று பட்டப்பெயர் வைத்து, அது ஆங்கில டிக்ஷ்னரிகளிலும் இடம்பெற்றது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அது நீக்கப்பட்டது. இப்போதும், அண்டை மாநில மொழிகள் சிலவற்றில் கோல்மால்களை கும்பகோணம் என்றே குறிப்பிடுகின்றனர். பாரம்பரிய புகழ்மிக்க கும்பகோணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் கோல்மால் அமைந்திருப்பதை வேதனையுடன் குறிப்பிடும் பொதுமக்கள், எஸ்.பி.யின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.