tt

(7) மாட்டுத் தலைவன்!

""மாயோன் கிருஷ்ணன் கொடுத்த மாடுகள்தான் வழி வழியாக இன்றும் மலை மாடுகளாக மேய்கிறது'' என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

இது வெறும் நம்பிக்கையா? இல்லை யென்றால் ஆதாரம் இருக் கிறதா? என தேடத் தொடங்கிய எமக்கு, வியப்பும் திகைப்புமாய் பல தகவல்கள் கிடைத்தது.

Advertisment

இதற்கு சரியான கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் வத்திராயிருப்பு கூமாப்பட்டியில் மாட்டுக் கிடை வைத்திருக்கும் பாலசந்தர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. பாலச் சந்தர் சென்னையில் ஐ.டி.யில் வேலை பார்ப் பவர். தன்னுடைய மூதாதை யர் மாடுகள் வளர்த்ததால், பாரம்பரியத்தை விடக்கூடாது என்பதற்காக

200 மாடுகளுக்கு மேல் வளர்க்கிறார். அவர் பகிர்ந்த தகவல், எனக்கு ஒரு வலுவான ஆதாரத்தை கொடுத்தது.

கம்பத்தில் தம்பிரான் தொழுவம் என்ற பகுதி இருக்கிறது. அங்கே இருநூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் தொழுவத்தில் இருக்கின்றன. சுத்துப்பட்டில் இருக்கும் கிராமத்தினர் அதைக் கோவிலாக வணங்குகின்றனர். தொழுவத்தில் ஒரு கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தில் கிருஷ்ணன் உருவம் பொறித்த கல்வெட்டு இருக்கிறது. அந்த மாடுகளுக்கெல் லாம் ஒரு தலைவன் மாடு -அங்கே கருவறையில் நிற்கிறது. அந்த மாட்டின் பெயர் பட்டத்து ராஜா. பட்டத்து ராஜாவையே மக்கள் தெய்வமாக வணங்கு கின்றனர்.

Advertisment

அந்த தொழுவத்திற்கு ஒரு தல வரலாறு கூறினார்கள். ""கிருஷ்ணன், காமதேனுவின் பிரதி வழி கன்றுக்குட்டியை தங்களுடைய முன்னோர்களுக்கு அளித்ததாகவும், அதனுடைய வம்சமே இப்போது தொழுவத்தில் இருக்கும் மாடுகள். அந்தக் கோவிலை வழிவழியாக நாங்கள் வணங்கி வருகிறோம்'' என்றார்கள். இதை ஒரு வரலாற்று ஆவணமாக எடுத்துக்கொள்ள முடிகிறது. அந்தத் தலைவன் மாட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கும் விதமே ஆச்சரியமானது. கருவறையில் இருக்கும் தலைவன் மாடு இறந்துவிட்டால், அதற்கு ஈமச்சடங்கு செய் வதற்கு மட்டும், குறிப்பிட்ட சில குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பணியை செய்கிறார் கள்.

dd

தலைவன் மாட்டிற்கு ஈமச்சடங்கு செய்யும் நபர், அவர் குடும்பத்தில் மற்ற யாருக்கும் ஈமச்சடங்குகள் செய்வதில்லை. தலைவன் மாடு இறந்தபிறகு, புது தலைவனை தேர்ந்தெடுப்பதற்கு சில சடங்கு முறைகளைச் செய்கிறார்கள். ஒரு பாதையில் ஒரு குடம் பாலையும், ஒரு கரும்புத்துண்டையும் வைக்கிறார்கள். தொழுவத்தில் இருக்கும் மாடுகளை அந்த வழியில் விடுகிறார்கள். அதில் எந்த மாடு பாலைக் குடித்துவிட்டு, கரும்பைக் கடிக்கிறதோ அதையே தலைவன் மாடாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருடமாக இதே வழிமுறைதான்...

சொல்லி வைத்தாற் போல் ஒரு பட்டத்து ராஜா இறந்ததும், வேறு ஒரு கன்று பாலையும் கரும்பையும் உண்கிறது.

இது எப்படி சாத்தியம்?

விஞ்ஞான வளர்ச்சி என் கிறோம். நிலவுக்கு சென்றோம். செவ்வாய்க்குச் சென்றோம். தொழில்நுட்பங்களில் முன் னேறிவிட்டதாகக் கூறுகிறோம். ஆனால் நம்மைச் சுற்றி நிரம்பி யிருக்கும் இறை சக்தியையும், அது காட்டும் காட்சிகளையும் காண முடியாமல் தடுப்பதற்கு, நாம் வளர்த்துக்கொண்ட அறிவு என்னும் மாயத்திரையே காரணமாகி விடுகிறது.

அந்த மாயத் திரையை விலக்கிப் பார்த்தால், கடவுள் மேல் இருக்கும் புரிதலும், வரலாறு பற்றிய புரிதலும் வேறாகத் தெரிகிறது.

மனிதனுக்கு அப்பாற் பட்டதென்பது உலகில் எதுவும் இல்லை. ஆனால் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை நிறைய இருக்கின்றன.

""என்னப்பா? ஆராய்ச்சிக் கட்டுரைன்னு ஆரம்பிச்ச... இந்து மத தெய்வங்களப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்க?''’ என "திமில்' தொடரைத் தொடர்ந்து படிக்கும் தோழர் ஒருவர் இப்படி கூறினார்.

"தெய்வங்களைப் பற்றி பேசினால் பகுத்தறிவு இல்லை. இந்து மதத்தில் சொல்லப்படுகின்ற தெய்வங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் கற்பனையே' என்பது போன்ற பொதுவான கருத்துக்கள் பரவலாகவே விதைக்கப்பட்டிருக்கிறது, தவறில்லை.

பின் நவீனத்துவத்தில் ’"கொட்டிக் கவிழ்த்தல்'’என்ற சொல்லாடல் உண்டு. அதன்படி, நமக்கு வழங்கப்பட்டிருக்கிற வரலாற்றை, இலக்கியங்களை, இதிகாசங்களை முற்றிலுமாக மறுக்கும் நோக்குடன் அணுகும்போதுதான், அதில் சொல்லப்பட்டிருக்கிற உண்மைகள் கண்ணுக்குத் தெரியும். தனிப்பட்ட யாரையும் மையப்படுத்தாமல் பார்க்க முடியும். பெரியாரின் நாத்திக சித்தாந்தமும் அப்படிப்பட்டதுதான்.

vv

ஆனால் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டை சரியாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட குடிக்கு வழிகாட்டுதலாக, வம்ச விருத்திக்கு பாதுகாவலாக, நின்று இறந்துபோன மூதாதையரை அவர் வழியில் வந்தவர்கள் மரியாதை செய்து நினைவு கூர்வதுதான் நமது குலதெய்வ வழிபாடு. அப்படி நமக்கு பாதுகாவலாக இருந்து காத்தவர்கள்தான் இன்றும் ஊர்களில் வணங்கும் கருப்பு, அய்யனார், முனீஸ்வரன், மதுரை வீரன், சுடலைமாடன் மற்றும் அம்மன் போன்ற பெண் தெய்வங்கள் எல்லாம்.

மக்களுக்கு புது மார்க்கத்தை ஏற்படுத்தி இறை நிலையை அடைந்த பெருமக்களை ஆயிரமாயிரம் வருடங்களாக தமிழர்கள் வணங்குகிறார்கள். பக்தியுடன் நினைவு கூர்கிறார்கள். இன்று நாம் வாழும் வாழ்க்கை, அன்று அவர்களின் வழிகாட்டுதலில் உருவாகியது என்பதன் நன்றியுணர்வே அதன் தாத்பரியம். அவர்கள்தான் சிவனாக, முருகனாக, மாயோனாக, பெருமாளாக, இன்னும் பல பெருந்தெய்வங்களாக தொன்றுதொட்டு வணங்கப்படுகிறார்கள்.

சிவன் அறிவைத் தந்தார். வேதங்கள் தந்தார். யோக முறைகள் தந்தார். முருகன் விவசாயம் தந்தார். மொழி தந்தார். வேல் தந்தார். ராவணன் விமானம் தந்தார். வீணை தந்தார். ராவணன் மகன் இந்திரசித்தன் சக்கரம் தந்தார். தேர் தந்தார். கண்ணன் புல்லாங்குழல் தந்தார். ஆநிரைகள் தந்தார். திருமால் வானவியல் சாஸ்திரம் தந்தார். இதெல்லாம் நான் சொல்லவில்லை... இவை நமது முன்னோர்கள் எழுதிச் சென்ற இலக்கியங் களிலும், நமது வழிபாட்டு முறைகளிலும் மறைபொருள்களாகக் காணக் கிடைக்கின்றன. ஆனால் நமது பாடப்புத்தகத்தில் விவசாயத்தைக் கண்டுபிடித்தவன் கற்கால மனிதன். சக்கரத்தைக் கண்டுபிடித்தவன் கற்கால மனிதன் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்காதீர்கள்... என்னிடம் பதிலில்லை!

சமீப காலமாகத்தான் எல்லா தெய் வங்களையும் ஒன்றிணைத்து இந்து என்ற அடையாளத்தின்கீழ் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் தெய்வ வழிபாடு என்பது நடுகல் வைத்து வணங்கும் குலதெய்வ வழிபாடாகவே இருந்தது.

நடுகல் பிற்காலங்களில் சிலைகளானது. சிலை வழிபாட்டின் அடுத்த பரிணாமமாக தனித்தனி வழிமுறைகளில் பக்திமார்க்கம் உருவானது. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் பிறக்கிறார். சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், சௌரம், கணாபத்தி யம் என்று ஆறு முக்கிய மார்க்கங்களில் இருக்கும் தெய்வங்களுக்குள் உறவு முறைகள் ஏற்படுத்தி, ஷண்மதம் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். (ஷண் என்றால் தமிழில் ஆறு என்று பொருள்) பின் ஆங்கி லேயர்கள் காலத்தில் ஷண்மத மும், அதன் உட்பிரிவுகளும் மொத்தமாக சேர்த்து இந்து மதம் என்று அடையாளப் படுத்தப்பட்டது. இதுதான் தெய்வங்களின் வரலாறு.

கல்வெட்டுகளில், இலக்கிய ஆதாரங்களில், பாரம்பரியமாக நடக்கும் திருவிழாக்களில் தமிழர்களின் தெய்வங்கள் பற்றிய குறியீடுகள் நிரம்பியிருக்கின்றன. அவர்களைப் புறந்தள்ளி எந்த சரித்திரச் சான்றுகளையும் நிறுவ முடியாது.

அதே சமயத்தில், நம் தெய்வங்களைப் பற்றி இதிகாசங்களில் இணைக்கப்பட்ட இடைச் செருகல்களை, கட்டுக் கதைகளை, இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட கற்பனைகளை அடையாளம் கண்டு பிரிக்கவேண்டியது முக்கியம். அதுவே பகுத்துப் பார்க்கும் அறிவு... பகுத்தறிவு!

மாடுகளுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்பந்தம்?

(ஆட்டம் தொடரும்...)