திரைப்படம் ஒன்றில் எந்தெந்த கோயில்களில், எந்தெந்த வேளைகளில் என்னென்ன சாப்பாடு கிடைக்கும் என்பதை விரிவாக எழுதி டைரிபோட்டு வைத்திருப்பார் நடிகர் செந்தில். இதையே மாற்றி யோசித்து, "எங்கு திருவிழா? எங்கு அரசியல் கட்சி மாநாடு, எங்கு சந்தை' என கூட்டம் கூடும் இடங்களை டைரி போட்டு வைத்து கொள்ளையடித்து, விமானம் ஏறி எஸ்கேப்பாகி வந்த கும்பலை கைது செய்து, காலரைத் தூக்கி பெருமைப்பட்டு வருகின்றது கோவை மாநகர காவல்துறை.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே இரவினில் பேருந்துக்காக காத்திருந்த முதியவர் ஒருவரை அடித்து, செல்போனை வழிப்பறி செய்திருக்கின்றது மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 நபர்கள் கொண்ட பீகார், ஜார்கண்டைச் சேர்ந்த குழு! காவல்துறைக்குக் கிடைத்த தகவலின்படி விரைந்து ஜார்கண்டைச் சேர்ந்த பகதூர் மகடோ, சந்தோஷ், பப்லு மகடோ, பீகாரைச் சேர்ந்த மனிஷ் மகோலி இவர்களுடன் 15, 14 மற்றும் 10 வயது கொண்ட சிறார்களுடன் காணப்பட்ட அந்த கும்பலை கைதுசெய்தவர்கள் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அம்பலமாயிருக்கிறது விவகாரம்.

tt

Advertisment

"மனைவி, மக்கள் என குடும்பம் குடும்பமாகத்தான் இங்கு வருவோம். வியாபாரம் செய்ய வந்திருக்கின்றோம் என்று கூறி ரூ.500-க்கும் குறைவாகக் கட்டணமுள்ள பாழடைந்த லாட்ஜில் தங்கி தொழிலைத் தொடங்குவோம். இது மத்தவங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாது. புருஷன் பெண்டாட்டியாக வந்தாலும் 10 நபர்கள் கொண்ட குழுவில் சின்னப்பசங்க குறைந்தது 4 நபர்களாவது இருப்பார்கள். அவர்களைக் கொண்டுதான் இந்தத் தொழிலே.

கோவையைப் பொறுத்தவரை ஜனக்கூட்டம் அதிகம் காணப்படும் ரெயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களைக் குறிவைத்து எங்கு சென்றாலும் கும்பலாகச் செல்வோம். வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் செல்போன்தான் எங்களது முதல் இலக்கு. அதன்பின் தங்க நகைகள், பணம் உள்ளிட்டவை. கூட்டமாக இருக்கும் கடைகளுக்குச் சென்றால் பொருட்கள் வாங்கு வதுபோல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடிக்கொண்டு வந்துவிடுவோம். விஷேச நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு செல்வோம். பின்னர் வாரத்தில் 1, 2 நாட்கள் திருப்பூர், பொள் ளாச்சி, மேட்டுப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளுக்கும் சென்று கொள்ளை அடித்து வருவோம்.

Advertisment

எங்கள் கும்பலில் சிறுவர்களே பெரும்பாலும் திருடுவார்கள். சிறுவர்கள் சிக்கிக்கொண்டால் பல சமயங் களில் எச்சரித்து விட்டுவிடு வார்கள். இதனால் பெரியளவு எங்களது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்காது. 10 நாட்கள் திருடிய பின், சொந்த ஊருக்குச் செல்லும்போது ஒருவர் விமானத்தில் செல்வோம். மற்றவர்கள் ரெயிலில் வருவார்கள். அடுத்த தடவை திருட்டு முடிந்தவுடன் சுழற்சி முறையில் ஒருவர் ஒருவராக விமானத்தில் செல்வோம். அங்கு சென்று ராஜவாழ்க்கை வாழ்வோம்'' என வாக்குமூலம் கொடுத்துள்ளது கைது செய்யப்பட்ட கும்பல். கைது செய்யப்பட்டவர்களில் சிறார்கள் அருகிலுள்ள காப்பகத்திற்கும், இளைஞர்கள் சிறைக்கும் அனுப்பப்பட்டனர்.

ஆண்கள் மட்டும் கைதான நிலையில், உடன் வந்த பெண்கள் எங்கே? என்கின்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கிய தனிப்பிரிவினர் கொள்ளை, வழிப்பறிச் சம்வங்களில் ஈடுபட்டது இவர்கள் மட்டும்தானா..? அல்லது இவர்களது மாநிலங்களைச் சேர்ந்த வேறு யாரேனும் இதுபோல் தொழிலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தனிப்பிரிவு அதிகாரி, "இவங்களைப் பிடிச்ச பிறகு இவர்களிடம் என்னென்ன இருக்கு என, சோதனை நடத்தியதில் ஒரு குறிப்பு கிடைச்சது. அதில், எந்தெந்த இடங்களில் கூட்டம் கூடும்? என்னென்ன தேதிகளில்..? என விலாவாரியாக எழுதி வைச்சிருந் தாங்க. கூட்டம் கூடுற நாட்களில், இடங்களில்தான் செல் போன், நகை, பணம், திருட்டு அதிகளவில் நடந்துள்ளதாகத் தெரியவர, அதிலும் கடந்த ஆயுத பூஜையின்போது மட்டும் 30 செல்போன்கள் காணாமல் போனதாக வழக்குப் பதிவாகியது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக போலீஸில் ஸ்பெஷல் டீம் போட்டு ராத்திரி பகலாக வேலைபார்த்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ஒரு சி.சி.டி.வி. வீடியோ காட்சி எங்களுக்குக் கிடைச்சது. அது, மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கும் இளைஞன் ஒருவரின் சட்டைப் பையிலிருந்து அருகிலிருந்த சிறுவன் செல்போன் திருடும் காட்சி. அதை வைத்து, தேடியதில் அவர்கள் வட மாநிலத்தவர்கள் என தெரிய வர காத்திருந்தோம். அந்த நேரத்தில் முதியவர் ஒருவரின் புகாரும் வந்துசேர அனைவரையும் கைதுசெய்தோம். இந்த கும்பலில் திருடுபவனுக்குத் தான் பொருளின் மதிப்பில் பாதித் தொகை. மீதமுள்ள தொகை பகிர்ந்துகொள்ளப்படும். செல்போன் மட்டுமல்ல, எது கிடைத்தாலும் திருடுவதுதான் அவர்களது வழக்கம். இப்பொழுது புதிதாக வழிப்பறியிலும் இறங்கியுள்ளனர். இவர்களைப்போல் எத்தனை கும்பல் உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றோம்'' என்றார் அவர்.