பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு பூசாரி நாகமுத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா உட்பட ஆறு பேரை கோர்ட்டு விடுதலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியும் பட்டியலின சமூகத்தவருமான சுப்புராஜின் மகன் நாகமுத்து, கைலாசபட்டியிலுள்ள கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்துவந்தார். கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக பூசாரி நாகமுத்துவுக்கும், ஓ.ராஜாவிற்குமிடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி நாகமுத்து தற்கொலை செய்துகொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உட்பட 7 பேர் மீது பெரியகுளம் தென் கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றதுக்கு மாற்றப்பட்டது. அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன், பாதிக் கப்பட்ட நாகமுத்துக்காக வாதாடிவந்தார். இடையில், பாண்டி என்பவர் இறக்க, மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 24 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இறுதிக்கட்ட வாதத்திற்கு பின் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதியரசர் அறிவித்தார். ஓ.ராஜா உட்பட 6 பேரும் அன்று காலையிலேயே கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முரளிதரன், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் அழைத்து, அடுத்த நிமிடமே விடுதலை என்று உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததாலும் விடுதலை செய்வதாக நீதியரசர் தெரிவித்தார். அதைக்கேட்டு ஓ.ராஜா உட்பட ஆதரவாளர்கள் சந்தோச வெள்ளத்தில் மூழ்கி, ஓ.ராஜாவிற்கு சால்வை போட்டு வாழ்த்தினார்கள். நாகமுத்துவின் தந்தை சுப்புராஜும், அவரது உறவினர்களும் தீர்ப்பைக் கண்டு மனம் நொந்தவாறே சென்றனர்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகனிடம் கேட்டபோது, "இது போன்ற பதட்டமான வழக்குக்கு தீர்ப்பன்று கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம். ஆனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாததைக் கண்டு, தீர்ப்பில் மாற்றம் இருக்குமென்ற எண்ணமும் என் மனதில் இருந்துவந்தது. அதேபோல், ஆறு பேரையும் நீதியரசர் விடுதலை செய்தார். இந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்க வில்லை.
காவல் நிலையத்தில் சாதிப்பாகுபாடு கள் நடக்கிறதென்றால் அது நீதிமன்றத் திலும் இருக்கு. ஆரம்பத்திலிருந்தே போலீசார் புலன் விசாரணையை முறையாக செய்ய வில்லை. என் சாவுக்கு ஓ.ராஜா தான் காரணம் என நாகமுத்து எழுதிய கடிதம் உண்மையானது என்பதை டாக்டர் ரிப்போர்ட்டிலிருந்து நிரூபித்துள்ளோம். அதுபோல் வன்கொடுமை வழக்கையும் ஆரம்பத்திலேயே போடவில்லை. ஹைகோர்ட்டில் போராடிய பின்பே வன்கொடுமை வழக்கை பதிவுசெய்தார்கள். இந்த வழக்கில் ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கு மென்று எதிர்பார்த்தோம். தீர்ப்பு மாறிப் போனதால் பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் கண்கலங்கிவிட்டார். நான்தான் அவரை சமாதானம் செய்து மேல் முறையீட்டின் மூலம் தண்டனை வாங்கித் தருவேன் என்று உறுதியளித்தேன்'' என்று கூறினார்.
"பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவால் என் மகன் தற்கொலை செய்துகொண்டபோது, ஓ.பி.எஸ். துணை முதல் வராக இருந் தார். கேஸை வாபஸ் வாங்கு வதற்காக இரண்டு கோடி வரை என்னிடம் பேரம் பேசினார்கள். நான் அடிபணியவில்லை. என் மகன் சாவுக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்காக போராடிவந்தேன்.
போலீஸ் அதிகாரிகளான சேது, உமா, இளங்கோ, செல்லப்பாண்டி ஆகியோரும் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சில ஆதாரங்களை மூடிமறைத்துவிட்டனர். அவர்களை வழக்கில் சேர்க்கவேயில்லை. இப்படியெல்லாம் நடக்கு மென்றுதான் வழக்கை தேனி மாவட்டத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றினோம். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தொடர்ந்து பல சாட்சியங்களைக் கொண்டுவந்து வாதாடி னார். அதனால் அவர்களுக்கு தண்டனை கிடைக்குமென்று எதிர்பார்த்தோம். இத் தீர்ப்பை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்து, என் மகன் சாவிற்கு காரணமான ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கும் தண்டனையை எங்க வக்கீல் வாங்கிக் கொடுப்பார். அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்றார் நாகமுத்துவின் தந்தையான சுப்புராஜ்.
இது சம்பந்தமாக ஓ.ராஜாவிடம் கேட்டபோது, "என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டதன் பேரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு, இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளேன். இந்த வழக்கில் அவர்கள் மேல்முறையீடு செய்தாலும் நானும் மேல்முறையீடு செய்வேன்'' என்று கூறினார்.
-சக்தி