தூத்துக்குடி திருச்செந்தூர், விளாத்திகுளம், ஒட்டப் பிடாரம், கோவில்பட்டி என்று ஆறு சட்ட மன்றங்களைக் கொண்ட தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் கடந்த நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் அசுரத்தனமான வெள்ளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட நகர மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போயிருந்தது.
பறிபோன தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து ஜீவனத்தை ஓட்டவேண்டிய மனநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் மன ஓட்டங்கள், தற்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. அது போக, வருகிற தேர்தல் தங்களின் துயரங்களுக்கு சரியானதொரு விடியலைத் தரும் என்ற நம்பிக்கையும் பிறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தி.மு.க.வின் நகரின் முதன்மை நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “"தொகுதியைக் கவனிப்பதில் எம்.பி. கனிமொழி முன்னணியிலிருக்கிறார். அவர்தான் வேட்பாளர் என்பதே பெரும்பாலானவர்களின் சாய்சாக உள்ளது அதனால் வேறு யாரும் கட்சி தரப்பில் சீட் கேட்கவில்லை''’என்றார்.
அதற்கேற்றாற் போன்று கனிமொழியும் தொகுதி பராமரிப்பு, மக்கள் நலப் பணிகள், திட்டங்களைச் செயலாற்றுவது போன்றவைகளைப் பிசிறின்றி முறைப்படுத்தி செயல்படுகிறார். சென்னையைப் பூர்வீக மாகக் கொண்டாலும், எம்.பி. என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளே தூத்துக்குடியில் தனக்கென ஒரு வீட்டை ஏற்பாடு செய்துகொண்டு தங்கிவிட்டார். பார்லிமெண்ட் கூட்டத்தொடர் வருகிறபோது அதற்காக டெல்லி செல் பவர் கூட்டத்தொடர் முடிந்த மறுநாள் தன் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
கடந்த 2019லின் பாராளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பா.ஜ.க. பெரும்புள்ளியான தமிழிசை சௌந்திரராஜனை, 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று, 3 லட்சத்து 47 ஆயிரத்து 259 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.பி.யானவர் கனிமொழி.
தொகுதியின் இண்டு இடுக்குகள், அங்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் பற்றி விரல் நுனியில் வைத் திருப்பவர். சதா சர்வ காலமும் தொகுதியை அதன் நலன் கருதி வளைய வரும் எம்.பி. கனிமொழி ஒவ்வொரு கிராமத்திலும் "மக்கள் களம் -கிராம குறை கேட்பு' என்கிற ஒரு அமைப்பினை ஏற்படுத்திக்கொண்டு கிராம மக்களின் குறைகளையும் தேவைகளையும் நிவர்த்திசெய்கிறார்.
இதன்மூலம் அய்யானாரூத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தாகம் போக்கியவர், திருமங்கலம் குறிச்சி ஊராட்சியின் பெரியசாமிபுரம் கிராமத்தில் கால் நடைகளுக்கான பெரிய மருந்தகக் கட்டிடம், கயத்தாறு ஒன்றியத் திலுள்ள தெற்கு இலந்தைக்குளம் மற்றும் மானங்காத்தான் ஊராட்சிகளில் சிதிலமடைந்த அடித்தட்டு மக்களின் வீடுகளுக்கு மாற்றாக தனியார் சமூகப் பொறுப்பு நிதி உதவியுடன் புதிய வீடுகள் கட்டு மானத்தையும் துவக்கி பணிகளை விரைவுபடுத்தி யிருக்கிறார்.
ஒரு தொகுதியின் எம்.பி. என்ற வகையில் தன் கடமை உணர்ந்து மக்களுக்கான கட்டமைப்பு களை உருவாக்கித் தந்து தன் பணியினைப் பழுதின்றிச் செய்தது ஒட்டுமொத்த தொகுதி மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி யிருக்கிறார்.
தூத்துக்குடி அ.தி.மு.க.வின் எக்ஸ் அமைச்ச ரும், மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியனை சென்னைக்கு வர வழைத்துப் பேசியும் பார்த்துவிட்டார் எடப்பாடி. வாக்குப்படி தன்னை மாநகர மா.செ.வாக ஆக்கினால் தூத்துக்குடியில் போட்டியிடுகிறேன். அந்தப் பொறுப்பு இல்லாமல் போட்டியில் நின்றால் அரசியல் சிக்கல் ஏற்படும்.
நான் செலவழிக்கிற பணமும் வேஸ்ட் என்று திட்டமாகச் சொல்லிவிட்டாராம் செல்லப் பாண்டியன். இதனால் அ.தி.மு.க.வில் வேட்பாளருக்கு வறட்சி. அதனால் கட்சியின் வேட்பாளர் தேடுதல் பொறுப்பை மா.செ. சண்முகநாதனிடம் விட்டு விட்டார் எடப்பாடி என்கிறார்கள் ர.ர.க்கள்.
ஜெ., 1991-ன் போது ஆட்சிக்கு வந்த புதிதில் தூத்துக்குடி நகராட்சி சேர்மன் பொறுப்பிலிருந்தவர் ஹென்றி. பின்னர் தொகுதியின் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தார். காலம் எத்தனையோ கடந்தாலும் தான் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் அறியப் பட்ட புள்ளிதான் என ஹென்றி வேட்பாளர் சீட் கேட்டிருக்கிறாராம்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவருமான சுதாகர். வேட்பாளர் வாய்ப்பு கேட்டிருப்பதாகத் தெரிவிக் கின்றனர் இலைப் புள்ளிகள்.
தங்களுடன் யார் கூட்டணிக்கு வருகிறார் கள். முந்தைய தேர்தல் பார்ட்னரான அ.தி.மு.க. உடன் வருமா,… வராதா?,… கூட்டணி பலம் எப்படி? என்று நெத்தியடியாக. பா.ஜ.க. சொல்லமுடியாத நிலையிலிருந்தாலும் அந்தக் கட்சியின் சார்பில் தூத்துக்குடி வேட்பாளர் சீட் பெற காய்களை நகர்த்தும் காரியங்களும், பின்புலத்தில் நடை பெறத்தான் செய்கிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவரான சித்ராங்கதன். இருபது வருடமாக பா.ஜ.க.வில் இருப்பவர்.. அடிப்படையில் ஆர்.எஸ். எஸ். தளத்தைக் கொண்டவர். இவரது தந்தை யான ராஜகோபால் நாடார் ஆர்.எஸ்.எஸ். வழி வந்தவர். அவரைப் பின்பற்றியே ஆர்.எஸ்.எஸ். பாசறை யில் ஐக்கியமானவர் சித்ராங்கதன்.
சாத்தான்குளம் பக்கமுள்ள சுண்டங்கோட் டையின் ஊராட்சித் தலைவர் பொறுப்பிலுமி ருப்பவர். எக்ஸ்போர்ட் பிசினசிலிருப்பதால் ஓரளவு தேர்தல் செலவுகளைச் சமாளிக்கும் திறன் கொண்டவர். முன்னாள் மத்திய அமைச்சரான பொன்னாரின் சிஷ்யர். அவர் மூலமாகவே மாவட் டத் தலைவர் பொறுப்பை பெற்றவரென்றாலும், ஆர்.எஸ்.எஸ். பின்னணி, பொன்னாரின் மேல் மட்ட சிபாரிசுகளால் வேட்பாளர் சீட் நிச்சயம் என திடமான நம்பிக்கையிலிருக்கிறார் சித்ராங்கதன்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் பா.ஜ.க. பொதுச் செயலாளரான ராஜாவும் தாமரை ரேசி லிருக்கிறார். கட்சியின் சீனியர் புள்ளி. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்டகால உறுப் பினர். அதன்வழியே பா.ஜ.க.வின் பொறுப்பிற்கு வந்தவர் ராஜா. தொகுதியின் ஸ்ரீவைகுண்டம் நகரைச் சேர்ந்தவர். தொழில் நிறுவனங்களைக் கொண்டவர். நாக்பூரின் தயவால் வேட்பாள ராகிவிடலாமென தனது மூவ்களை அந்த வழியில் மேற்கொண்டிருக்கிறார்.
அடுத்து நீண்டநாளாக வாய்ப்பை எதிர் பார்த்துக் காத்திருப்பவர் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவரான சசிகலா புஷ்பா. சர்ச்சை களுக்குக் குறையே வைக்காதவர். அ.தி.மு.க.வைச் சார்ந்த சசிகலா புஷ்பா ஜெ.வின் தயவால் தூத்துக் குடியின் மாநகர மேயர் பொறுப்பிலிருந்தவர். அவரது நிர்வாகத்தில் நகரின் அத்தியாவசியத் தேவைக்கான திட்டங்களைக் கொண்டுவராதவர் என்ற சர்ச்சையுமிருந்தது. அதன்பின் “ஜெ., சசிகலா புஷ்பாவை மாநிலங்களவையின் உறுப்பி னராக்கினார்.
பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சசிகலா புஷ்பா “ஜெ.வை விமர்சிக்க, அவரைக் கட்சியைவிட்டே நீக்கினார் ஜெ. தொடர்ந்து அ.தி.மு.க.வினரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க அரசியல் அடைக்கலமாக பா.ஜ.க.வில் இணைந்த சசிகலா புஷ்பா தற்போது தூத்துக்குடி எம்.பி. தொகுதியைக் குறிவைத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வேண்டப்பட்டவர்கள் மூலமாக கட்சியின் டெல்லி தலைவர்களிடம் பேசியிருக்கிறாராம்.
அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணி பிரிவைச் சார்ந்தவர் களும் தூத்துக்குடி மாவட்டத்தில் கணிசமாக இருக்கின் றனர். ஓ.பி.எஸ் பிரிவின் தூத்துக்குடி மா.செ.வான ஏசாதுரை ஜெ.வின் தீவிரமான விசுவாசி. ஜெ. காலத்தில் இரண்டு முறை முதல்வர் பதவிவகித்த ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்க மானவர்.
பதினோரு வருடங்கள் அ.தி.மு.க. வின் தூத்துக்குடி ந.செ.வாகவும் ஒன்பது வருடங்கள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பொறுப்பிலுமிருந்தவர். ஏரியாவுக்கு அறிமுகமானவர்.
ஓ.பி.எஸ்., பா.ஜ.க. கூட்டணியிலிருக்கிறார். அக்கட்சியுடன் பேசிவருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் மாவட்ட செயலாளர்களைக் கூட்டி ஆலோசனை செய்யவிருக்கிறார்.
தொகுதி உடன்பாட்டில் தூத்துக் குடியை ஓ.பி.எஸ். கேட்டுப் பெறுவார். கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் நான் வேட்பாளர் வாய்ப்பு கேட்பேன்” என்கிறார். ஏசாதுரை. தூத்துக்குடி மாவட் டக் காங்கிரஸ் கட்சியோ தொகுதியில் தி.மு.க.வின் கனிமொழியே மீண்டும் போட்டியிட வேண்டும் என்ற நிலைப் பாட்டிலிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில் மாவட்டத்தின் நிர்வாகிகள் தொண்டர் களின் கூட்டத்தைக் கூட்டி தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் தி.மு.க.வின் எம்.பி. கனிமொழியின் செயல்பாடுகள், மக்கள் பணிகள் சிறப்பாக உள்ளதால், மீண்டும் அவரே போட்டியிட வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளோம் என்கிறார் மாவட்ட காங்கிரசின் மூத்த தலைவரும், கட்சியின் மாவட்டத் துணைத்
தலைவரும் தூத்துக்குடி நகரின் முக்கியப் புள்ளியுமான ஏ.பி.சி.வி. சண்முகம்.
-பி.சிவன்
படங்கள் : ப.இராம்குமார்