புது ரவி!
மனைவியைப் பிரிந்திருந்தாலும், புது ஆளாக வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. தனது நட்பு வட்டாரத்தை குறைத்தது முதல், தனது பெயரை ரவி மோகன் என மாற்றியது வரை பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும். இனிமேல் சினிமாவிலும் அதை தொடரப்போகிறார். அதில் ஒன்றுதான் சமீபத்தில் வெளியான "காதலிக்க நேரமில்லை' படத்தில் பெண் இயக்குநர் என்பதால் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என போஸ்டர் முதல் படம் வரை அனைத்திலும் நித்யாமேனன் பெயரை முதலில் போடச்சொல்லி அறிவுறுத்தியிருப்பது. தற்போது அடுத்த கட்ட புதுமுயற்சியாக விரைவில் தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார். "ரவிமோகன் ஸ்டூடியோஸ்' என்று தனது நிறுவனத்துக்கு பெயர் சூட்டி, முதல் படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருவதாகவும், மேலும்... தான் நடிக்கும் படங்களுக்கு பெரிய நிறுவனத்துடன் கைகோர்ப்பதென்று திட்டமிட்டுள்ளதாகவும் பல விஷயங்களை அவர் தரப்பினர் சொல்கின்றனர்.
சந்தானத்துக்கு வெயிட்டிங்!
12 வருஷம் கழித்து வெளியான ‘"மதகஜராஜா'’ படம் பொங்கல் ரேசில் முந்தியுள்ளது. சமீபகாலமாக காமெடி வறட்சி தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்க, அந்த தாகத்தை இந்தப் படம் தணித்துள்ளது. குறிப்பாக சந்தானத்தின் காமெடி பலராலும் ரசிக்கப்படுகிறது. இதனால் சுந்தர்.சி இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க யோசித்துவருகிறார். ஆனால் படத்திற்கு பலமே சந்தானம் காமெடி என்பதால், அவர் தற்போது இதில் நடிப்பாரா என்ற கேள்வி எழவே... அந்த ப்ளானை கைவிட்டு, மீண்டும் விஷாலுடன் இணைந்து இதுபோல கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு கலகலப்பான படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். இதில் எப்படியாவது சந்தானத்தை நடிக்க வைக்க முயன்றுவருகின்றனர். முன்னதாக காமெடியனில் இருந்து ஹீரோவாக மாறிய பின், அஜித் -விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருந்து பின்பு ட்ராப்பான படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். அதேபோல் ஆர்யா -ராஜேஷ் கூட்டணியில் உருவாகவுள்ள "பாஸ் என்கிற பாஸ்கரன்' இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ஓ.கே. சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா ப்ளான்!
பான் இந்தியா ஹீரோவாக மாறவேண்டும் என்ற முடிவில் இருக்கும் சூர்யா, பாலிவுட்டில் தடம் பதிக்கவேண்டும் என "கர்ணா' படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால் அது சில காரணங்களால் இன்னும் தொடங்கப்பட வில்லை. பின்பு டோலிவுட்டுக்கு செல்லலாம் என்று அங்கிருந்து போயப்பட்டி சீனு தொடங்கி, வெங்கி அட்லூரி வரை சில இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் சுமுகமாக முடியவில்லை. இதையடுத்து தற்போது மோலிவுட் பக்கம் சென்றுள்ளார். அங்கு "சி.ஐ.ஏ.' பட இயக்குநர் அமல்நீரத், "மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநர் சிதம்பரம் மற்றும் "மின்னல் முரளி' பட இயக்குநர் பசில் ஜோசப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களை சூர்யா கைவசம் வைத்துள்ளார்.
ஸ்ரீநிதி நோ!
கடந்த பொங்கலை முன்னிட்டு "ஜெயிலர் 2' பட அறிவிப்பு டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. படப்பிடிப்பு மார்ச்சிலிருந்து தொடங்குவதால் தற்போது நடிகர் -நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த பாகத்தில் நடிக்கின்றனர். "கே.ஜி.எஃப்' படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்குப் பதில் ஸ்ரதா ஸ்ரீநாத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
-கவிதாசன் ஜெ.