உக்ரைன்தானே என இளக் காரமாய் நினைத்த ரஷ்யாவுக்கு, அந்நாட்டின் ஐந்து விமான தளங்களைச் சேர்ந்த 41 விமா னங்களைத் தாக்கி மரண அதிர்ச்சி கொடுத்துள்ளது உக்ரைன் ராணுவம்.
அமெரிக்காவின் அதிபரான கையோடு, உக்ரைன் போருக்கு இனிமேலும் உதவமுடியாதென கையை விரித்ததோடு ஆயுத, நிதி உதவிகளை நிறுத்திக்கொண்டார் ட்ரம்ப். இதனையடுத்து ஐரோப்பா, அமெரிக்கா உதவியதால் தாக்குப்பிடித்த உக்ரைன் தனிமைப்பட்டுவிட்ட சந்தோஷத்தில், உக்ரைனை மிக மூர்க்கமாக ஏவுகணைகளால் தாக்கிவந்தது ரஷ்யா. கடந்த வாரங்களில் போரில் தொடர்ச்சியாக அடிபட்டுவந்தது உக்ரைன்.
இந்நிலையில், இஸ்தான்புல்லில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் தன் நாட்டின் குழுவை அனுப்பிவைக்கும் எனத் தெரிவித்த அதே நாளில், ரஷ்ய விமா னங்கள், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தி, தாங்களும் இளைத்தவர்கள் இல்லையெனக் காட்டிக்கொண்டுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்த உக்ரைன் ஜூன் 1-ஆம் தேதி, 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களின் துணையுடன் ரஷ்யாவின் மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவா, ரியாசான், அமுர் விமானத் தளங்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யா நிலைகுலைந்துபோயுள்ளது.
இதில் ரஷ்யாவின் 41 விமானங்கள் சேத மாகியுள்ளன. முக்கியமாக ஏ-50, டியூ-95, டியூ-22 ரக விமானங்கள் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ-50 இலக்குகளை குறிபார்ப்பதற்கும், மற்ற இரு விமானங்களும் குண்டுகளை வீசுவதற்கும் பயன்படுவதாகும்.
ஆச்சர்யமென்னவெனில், இந்த விமான தளங்கள் உக்ரைனிலிருந்து 2,000 முதல் 4,000 கிலோமீட்டர் வரை வெவ்வேறு தொலைவில் அமைந்துள்ளன. இத்தனை தூரத்துக்கு ட்ரோன்கள் பறக்கமுடியாது ஆக, நீண்டகாலமாகத் திட்டமிட்டு தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தும் இந்த வகை ட்ரோன்கள் ரஷ்யாவுக்குள் கடத்தப்பட்டுள்ளன. லாரிகளின் கேபின்களின் மீது மரத்தால் செய்யப்பட்ட போலியான கூரையை அமைத்து, அதற்குள் இந்த ட்ரோன்கள் மறைத்துக் கடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட விமானத் தளம் வரை அந்த லாரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பின்பு அங்கிருந்து ஒரே சமயத்தில் கேபினின் மேற்கூரை திறக்கப்பட்டு தாக்குதலுக்கு ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. ரேடார்களை ஏய்ப்பதற்கு ட்ரோன்களுக்கு கறுப்பு நிறம் பூசப்பட்டு, மிகத் தாழ்வாக பறக்கவிடப்பட்டுள்ளன. ரிமோட் மூலம் இயக்கப்பட்ட இந்த ட்ரோன்கள், ரஷ்யர்கள் என்ன நடக்கிறதென உணர்வதற்குள் மிகவேகமாக தங்கள் இலக்கைத் தாக்கியுள்ளன. என்றபோதும், ரஷ்யா ட்ரோன்களில் பெரும்பகுதியை வழியிலேயே மறித்து அழித்துவிட்டதாகக் கூறுகிறது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் என உக்ரைன் கூறுகிறது.
அதேசமயம் இரவுப் பொழுதில் மேற்கு ரஷ்யாவில் இருவேறு பாலங்களில் ஏற்பட்ட வெடிவிபத்து சேதம் காரணமாக இரு ரயில்கள் தடம்புரண்டுள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதியான பிரியான்ஸ்க் பகுதியில் பயணியர் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 7 பேர் மரண மடைந்துள்ளனர். பலர் காய மடைந்துள்ளனர். குர்ஸ்க் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. இதில் உயிர்ப் பலி இல்லை யென்றபோதும் பாலம் சேத மடைந்ததில் ரயில் பெட்டிகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முதலில் பாலம் சேதமடைய, வெடிவிபத்து காரணம் எனத் தெரிவித்த ரஷ்யா, பின்பு சில மணி நேரத்துக்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் வெடிவிபத்து என்பதை நீக்கிவிட்டது. இதன் பின்னணியிலும் உக்ரைன் உள்ளதா என்பது உறுதிபடத் தெரியவில்லை.
உக்ரைனை, தலையில் குட்டி வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என போரைத் தொடங்கிய ரஷ்யா, மூன்றாண்டுகளுக்குப் பின்னும் வெற்றிபெற முடியாமல் தவித்து வருகிறது. வல்லரசு தோரணை யிலிருக்கும் ரஷ்யாவால் இந்தத் தாக்குதலை எளிதில் விடமுடியாது. இதை கௌரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு இன்னொரு உக்கிரமான தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதினின் அரசு ஆயத்தமாகும். அதனால் இப்போதைக்கு ரஷ்ய -உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போவதில்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.