தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் சரவணக் குமார் ஐ.ஏ.எஸ்.ஸுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகார் மீது தீவிர விசாரணை நடத்தப்படுவதால் கோட்டையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் ஏகத்துக்கும் அதிர்வுகளை ஏற் படுத்தி வருகிறது.
இதுகுறித்து துறை வட்டா ரங்களில் விசாரித்தபோது, "தஞ்சை மாநகராட்சியின் கமிஷனராக 2021 ஜூலையில் நியமிக்கப்பட்டார் சரவணக்குமார். இரண்டு ஆண்டு களுக்குப் பிறகு 2023 செப்டம்பரில் தஞ்சையிலிருந்து தூக்கியடிக்கப் பட்டார். இதற்கு காரணம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த டெண்டர் ஊழல் உட்பட மாநகராட்சியில் இவர் நடத்திய பல்வேறு முறை கேடுகள்தான்.
குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பயோ-மைனிங் முறையில் குப்பை களை தரம் பிரித்து அப்புறப்படுத்து வதற்கான டெண்டர் முந்தைய எடப்பாடி ஆட்சிக் காலத்தில் (2018) விடப்பட்டு, இன்ஃப்ரா என்ற நிறுவனத்திற்கு இந்த டெண்டர் ஒதுக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை 1 வருட காலத்தில் முடிக்க வேண்டும் என காலநிர்ணயமும் செய்யப் பட்டது. இந்த டெண்டரின் மொத்த தொகை 10 கோடியே 53 லட்ச ரூபாய். ஆனால், அதன்படி பணிகள் முடிக்கப்படவில்லை.
இதனால் 2022, ஆகஸ்ட் 22-ந்தேதி இன்ஃப்ரா நிறுவனத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதில் ஒரு கொடுமை என்னவெனில், இந்த டெண்டர் ரத்து செய்யப் படுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே, மறு டெண்டர் கோரப்பட்டு சாஃப்ட்பெர்ரி சொலுயூசன்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டரை புதுப்பித்துக் கொடுத்துள்ளார் சரவணக்குமார். டெண்டர் தொகையும் 10 கோடியே 53 லட்சத்துக்கு பதிலாக 10 கோடியே 60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.
டெண்டர்படி, பணிகளை மேற்கொண்ட சாஃப்ட்பெர்ரி நிறுவனம் 8,530 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தி 1,56,747 கன மீட்டர் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக கணக்குகளில் பதிவு செய்து, இதற்காக 10 கோடியே 60 லட்சம் ரூபாய் அந்த நிறுவனத்துக்கு சரவணக்குமாரின் உத்தரவின்படி மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆனால், வெறும் 5000 கனமீட்டர் குப்பைகள் மட்டும் தரம் பிரிக்கப்பட்டதே தவிர, முழுமையாக குப்பைகள் தரம் பிரிக்கப்படவே இல்லை.
இதனால், 2 லட்சம் கனமீட்டருக்கும் அதிகமான குப்பைகள் தேங்கிக் கிடந்துள்ளன. இதையெல்லாம் விதிகளின்படி ஆய்வு செய்யா மலே முழுத்தொகையையும் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த குப்பை தரம் பிரிக்கும் டெண்டரில் மட்டும் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
அதேபோல, இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காண்ட்ராக்டர்களிடமிருந்து 1 சதவீத இ.எம்.டி.யாகப் பெறப்பட்ட 1,87,13,000 ரூபாய் மாநகராட்சி கணக்கில் வரவு வைக்கவில்லை சரவணக்குமார். இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய வட்டித் தொகை வராமல், தனி நபருக்கு சென்றதில் பல லட்சங்கள் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் கட்டப்பட்ட 600-க்கும் மேற்பட்ட கடைகளில் கைடு லைன் வேல்யூ, மார்க்கெட் வேல்யூ உள்ளிட்ட எந்த விதிகளையும் பயன்படுத்தாமல் சிங்கிள் டெண்டர் மூலம் ஏலம் விட்டுள்ளார் சரவணக்குமார்.
இதுமட்டுமல்லாமல், மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியர்கள் பலரும் கடன்பெற்றுள்ளனர். இதற்கான மாத தவணைத் தொகை, சி.பி.எஸ். தொகை, பி.எஃப்.தொகை உள்ளிட்டவைகள் மாநகராட்சி பணியாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகைகள் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி கமிஷனராக சரவணக்குமார் பணியில் இருந்த 2 ஆண்டுகாலமும் அந்த தொகை அரசுக்கு செலுத்தப்படவில்லை. இதனால் தஞ்சை மாநகராட்சி கடனில் தத்தளித்ததுடன் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.
மின்சாரவாரியம் உள்ளிட்ட பிற துறை களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைத்தொகை, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை என சுமார் 76 கோடி ரூபாய் கடன் நிலுவையை சந்தித்துக் கொண்டிருக்கிறது மாநகராட்சி. இதனால் ஒப்பந்ததாரர்களும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறைக்கு புகார்கள் வந்த நிலையில், இதுகுறித்து துறையின் கூடுதல் இயக்குநர் தலைமையிலான குழு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, வரியில்லா இனங்கள் ஏலம் விடப்பட்டதிலும் மற்றும் சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி ஆகியவை ரத்து செய்யப்பட்டதிலும் சரவணக்குமார் கமிஷனராக இருந்தகாலத்தில் 32 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என அந்தக் குழு கண்டறிந் துள்ளது (ந.க.எண்: 37306/2023/சி1/ நாள்; 15.02.2024). இப்படி பல முறைகேடுகளும், ஊழல்களும் சரவணக்குமார் நிர்வாகத்தில் நடந்துள்ளன''’என்று விரிவாக சுட்டிக்காட்டு கிறார்கள் நகராட்சித் துறையின் அதிகாரிகள்.
சரவணக்குமார் ஐ.ஏ.எஸ்.ஸின் நிர்வாகத்தில் நடந்துள்ள இந்த ஊழல்களால் தஞ்சை மாநகராட்சியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில் தான், சரவணக்குமாருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த புகார் குறித்து 33 வகையிலான ஒரிஜினல் டாகுமெண்டுகள் கேட்டு தஞ்சை மாநகராட்சிக்கு கடிதம் (DE/30/2024/LB/TH/ Date: 24.05.2024) அனுப்பியுள்ளார் விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்புத் துறையின் மயிலாடுதுறை டி.எஸ்.பி.! லஞ்ச ஒழிப்புத்துறைக் கேட்ட ஆதார ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதால், சரவணக் குமாருக்கு எதிரான ஊழல் புகார்கள் சூடுபிடிக்கும் என அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கிறது.
-இளையர்